[X] Close

போர்க்களத்தில் துவம்சம் செய்யும் ட்ரோன்கள் - எந்தெந்த நாடுகள் எப்படியெல்லாம் கையாளுகின்றன?

சிறப்புக் களம்

how-countries-handle-drones-in-war-field

சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் சொல்லாக 'ட்ரோன்கள்' மாறியுள்ளது. அதுவும் சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களில் அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்தியாதாக செய்திகள் வெளியானதற்கு பிறகு, இதுகுறித்த கேள்வி நிறையவே எழுந்தது. இதற்கு பதில் சொல்லும் விதமாக, எந்தெந்த நாடுகளில் என்னென்ன மாதிரியான ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

தொடர்புடைய செய்தி: காபூல்: ஐ.எஸ். பயங்கரவாதிகளின் காரை ட்ரோன் மூலம் தகர்த்த அமெரிக்க படையினர்

உலகம் முழுவதும் விரும்புவது போர் இல்லாத அமைதியான சூழலைதான். ஆனால், போர்களும் ஓய்ந்தபாடில்லை; போருக்காக பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்களின் வரவுகளும் ஓய்ந்தபாடில்லை. கற்களில் ஆரம்பித்த மனித இனத்தின் சண்டை தற்பொழுது கண்ணுக்குத் தெரியாத ஆயுதங்கள் வரை வந்துவிட்டது. அதில் முக்கியமானது ட்ரோன்கள்.


Advertisement

image

தங்கள் தரப்பு படைவீரர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி, இருந்த இடத்தில் இருந்துகொண்டே எதிரிகளை களத்தில் ரத்தம் சிந்த வைப்பதுதான் ட்ரோன்கள் என்னும் சிறிய வகை ஆளில்லா விமானங்கள். இவற்றில் வேண்டிய ஆயுதங்களை வைத்துவிட்டு ரிமோட் மூலம் இயக்கி எதிரிகளை நிலைகுலைய வைப்பதுதான் முக்கிய அம்சம்.

இத்தகைய ஆயுதம் பெரும்பாலான நாடுகளின் கையில் உள்ளது. இருப்பினும் அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், பாகிஸ்தான், ஈராக், நைஜீரயா, ஈரான், துருக்கி, ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் முதலான நாடுகள் மட்டுமே இதுவரை இதனை தங்களது எதிரி நாடுகள் மீது பயன்படுத்தியுள்ளன. அதேவேளையில் இந்தியா, சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் இந்த ட்ரோன்களை தங்களது சொந்த பாதுகாப்பிற்காக கைவசம் வைத்திருந்தாலும், இன்னும் அவற்றை பயன்படுத்தாமல் உள்ளன.

உலகிலேயே அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் அதிக அளவில் ட்ரோன்கள் தயாரிக்கும் நாடுகளாகவும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளாகவும் இருக்கின்றன. இஸ்ரேல் உலகில் 56 நாடுகளுக்கும், அமெரிக்கா 55 நாடுகளுக்கும், சீனா 37 நாடுகளுக்கும் இந்த ட்ரோன்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகின்றன. உலகிலேயே அதிக அளவில் இந்த ட்ரோன்களை இறக்குமதி செய்யக்கூடிய நாடுகளாக இந்தியாவும் பிரிட்டனும் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

image

பயன்படுத்தக்கூடிய ட்ரோன் வகைகளைப் பொறுத்தவரை, அமெரிக்கா பிரெடேட்டர் வகை ட்ரோன்களையும், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் எம்.க்யூ.9 ரீப்பேர் வகை ட்ரோன்களையும், ரஷ்யா ஓரியான் வகை ட்ரோன்களையும், ஐக்கிய அரபு அமீரகம் விங் லூங்க் 2 வகை ட்ரோன்களையும் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இதில் அமெரிக்கா தனது முந்தைய ட்ரோன்களில் தரம் உயர்த்தி பிரெடேட்டர் கிளாஸ் வகைகளை பயன்படுத்துகிறது.

இஸ்ரேலை பொறுத்தவரை தாங்கள் எந்த மாதிரியான ட்ரோன்களையும், தங்களது சொந்த பயன்பாட்டிற்கு வைத்திருக்கிறோம் என்பதை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை பெரும்பாலான நாடுகள் nEURO வகை அடுத்த தலைமுறை ஆயுதங்கள் ஏந்திய ட்ரோன்களையும் பயன்படுத்துகிறார்கள். நாடுகளைத் தாண்டியும் சில பயங்கரவாதம் மற்றும் போராளிக் குழுக்களிடமும் ட்ரோன்கள் பயன்பாடு என்பது உள்ளது. குறிப்பாக போக்கோ ஹேரம் பயங்கரவாத அமைப்பு, பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு, லிபிய தேசிய ராணுவ அமைப்பு, ஹவுதி போராளிக் குழுக்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, ஹமாஸ் அமைப்பு, தாலிபன் அமைப்பு உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளிடமும் இவை பயன்பாட்டில் உள்ளன.

தொடர்ந்து பல்வேறு நாடுகளின் மீதும் தாக்குதலுக்கு இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நடத்திவருகிறது. குறிப்பாக பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் சிரியா மீது இந்த ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

image

இதற்கிடையில், தற்போது பயன்பாட்டில் உள்ள ட்ரோன்களில் பல நவீன தொழில்நுட்பங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தண்ணீருக்கு அடியிலும் இத்தகைய ட்ரோன்களை பயன்படுத்தும் முயற்சிகளை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் மிக வேகமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சீனா குயான்லாங் 3, ஹையன் போன்றவற்றையும், ரஷ்யா கெல்வேசின்-1R வகையையும் அதிக அளவில் தயாரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படி முழுக்க முழுக்க படைவீரர்களை நேரில் களத்தில் இறக்காமல் அலுவலகங்களில் இருந்தபடியே எதிரிகளை துவம்சம் செய்யும் இத்தகைய புதிய தொழில்நுட்பங்களுக்கு பெரும்பாலான உலக நாடுகள் அதிக அளவில் முக்கியத்துவம் வழங்கி வருகின்றன.

- நிரஞ்சன் குமார்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close