Published : 23,Aug 2021 08:40 PM
பெட்கர் முதல் மாரியப்பன் வரை.. 1968 முதல் பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா கடந்து வந்த பாதை

டோக்கியோ நகரம் மீண்டும் விழாக் கோலம் கொண்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பாராலிம்பிக் போட்டிகளை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் 2020-க்கான பாராலிம்பிக்கில் மொத்தம் 163 நாடுகளைச் சேர்ந்த 4,537 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். செப்டம்பர் 5 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு இந்தியா சார்பில் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறார்.
பாராலிம்பிக் - ஒரு பார்வை
கடந்த 1948 காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் நாட்டு வீரர்கள் கலந்துகொண்ட சந்திப்புக் கூட்டத்தின் மூலம் உதயமானது. அது முழு வடிவம் பெற்று மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக நடத்தப்படும் ஒலிம்பிக் என மாறியது 1960-இல் தான். அதுதான் முதல் பாராலிம்பிக் போட்டியும் கூட. தற்போது இந்தப் போட்டிகளை சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி நிர்வகித்து வருகிறது. இதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் அனுமதி கொடுத்துள்ளது.
இதுவரை 15 பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. டோக்கியோவில் நடைபெறவுள்ளது 16-வது பாராலிம்பிக். அது மட்டுமல்லாது 12 குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன.
பாராலிம்பிக்கில் இந்தியா!
இந்தியா கடந்த 1968 முதல் பாராலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. இடையில் 1976 மற்றும் 1980-களில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா பங்கேற்கவில்லை.
அதன் மூலம் இதுவரை 12 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என தலா நான்கு இதில் அடங்கும்.
இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்கள்!
முரளிகாந்த் பெட்கர் (1972) நீச்சல் - தங்கம், பீம்ராவ் (1984) ஆடவர் ஈட்டி எறிதல் - வெள்ளி, ஜோகிந்தர் சிங் பேடி (1984) ஆடவர் குண்டு எறிதல் - வெள்ளி, ஆடவர் ஈட்டி எறிதல் - வெண்கலம், ஆடவர் வட்டு எறிதல் - வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றிருந்தார் அவர்.
அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகள் பதக்கம் வெள்ளாமல் இருந்தது இந்தியா. 2004 ஏதென்ஸ் பாராலிம்பிக்கில் தேவேந்தர ஜஜாரியா, ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். பளுதூக்குதல் விளையாட்டில் ராஜிந்தர் சிங் வெண்கலம் வென்றார்.
தொடர்ந்து 2012 லண்டனில் கிரிஷா நாகராஜகவுடா உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார். அதன் பிறகு 2016 ரியோ ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று அசத்தினார். மீண்டும் தேவேந்தர ஜஜாரியா ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். மகளிர் குண்டு எறிதல் பிரிவில் தீபா மாலிக் வெள்ளி வென்றார். வருண் சிங் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றிருந்தார்.
பதக்க நம்பிக்கை அளிக்கும் பலக் கோலி!
பாராலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக டோக்கியோ பாராலிம்பிக்கில் தான் பேட்மிண்டன் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயது இளம் வீராங்கனை பலக் கோலி பங்கேற்க உள்ளார். பாராலிம்பிக் பேட்மிண்டனில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் பங்கேற்கும் இந்தியாவைச் சேர்ந்த முதல் நபர் பலக் கோலி தான். பாராலிம்பிக்கில் பங்கேற்கும் மிகக் குறைந்த வயதுடையவரும் இவர்தான். நிச்சயம் இவர் தனது அறிமுக பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்த்து மழையில் மாரியப்பன் தங்கவேலு!
ரியோ தங்கம் வென்ற தமிழரான மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோவிலும் அந்த சரித்திரத்தை படைப்பார் என நம்பப்படுகிறது. அவருக்கு பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய வீரர்கள் பதக்கங்களை வெல்ல வாழ்த்துகள்.