Published : 23,Jun 2021 04:30 PM

காவலர் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு - தவறு செய்தோர் மீது நடவடிக்கை என முதல்வர் உறுதி

சேலத்தில் காவலர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த விவகாரத்தில் தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

வியாபாரி உயிரிப்பு சம்பவம் - நடந்தது என்ன?

எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, வாகன சோதனையின்போது காவலர் தாக்கியதில் காயமடைந்த வியாபாரி உயிரிழந்ததையடுத்து, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். கொரோனா காரணமாக சேலம் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத நிலையில், மது அருந்துவோர், கருமந்துறை வழியாக தருமபுரி மாவட்ட எல்லைக்குச் சென்று மது அருந்தி வருவது வழக்கமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த எடப்பட்டியில் சோதனைச்சாவடி அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

நேற்று மாலை, கருமந்துறை வழியாக சென்று மது அருந்திவிட்டு திரும்பிய மளிகைக்கடை வியாபாரி முருகேசனை காவல்துறையினர் சோதனைக்காக தடுத்து நிறுத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஏத்தாப்பூர் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி, முருகேசனை லத்தியால் தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

காவலர் தாக்கியதில் மயக்கமடைந்து விழுந்த முருகேசன் முதலில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகேசன் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டிருந்தார். பெரியசாமி உள்ளிட்ட மூன்று காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்