Published : 30,Jul 2017 11:35 AM

அதிமுக அரசை முடிவுக்கு கொண்டுவர திமுக தயங்காது: ஸ்டாலின் எச்சரிக்கை

MK-Stalin-warning-admk-government

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர திமுக ஒரு போதும் தயங்காது என, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பாக நீர்நிலைகளைத் தூர்வார அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து அதிகாரிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். ‌திமுகவின் தூர்வாரும் பணிகளை முதலமைச்சராக இருப்பவர் பாராட்டலாம் அல்லது அதற்கு மனமில்லை என்றால் அமைதி காக்கலாம் ‌என்றும், ‌அதைவிடுத்து நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை தடுக்கும் முதலமைச்சரை பெற்றது தமிழகத்திற்கு நேர்ந்த மாபெரும் விபத்து என விமர்சித்துள்ளார்.

‌தூர்வாரும் பணிகளை வைத்து திமுக அரசியல் செய்வதாக வாய்க்கு வந்தபடி முதலமைச்சர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், குடிமராமத்துப் பணிகள் குறித்த விசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா? எனவும் சவால் விடுத்துள்ளார்.

குதிரை பேரம் மூலம் சட்டவிரோதமாக பெரும்பான்மையை நிரூபித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத்தின் ஆட்சி பற்றிப் பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என சாடியுள்ளார். ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தும் திமுகவை மிரட்டிவிடலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண வேண்டாம் எனவும் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர திமுக ஒரு போதும் தயங்காது எனவும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்