Published : 25,May 2021 02:25 PM
கொரோனா தடுப்பூசி: ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொண்ட அரூர் மக்கள்

அரூரில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தடுப்பூசி இரண்டு தவணையாக செலுத்தப்படுகிறது. தற்போது 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம் அரூர் அரசு தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் அரூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தனர். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கொரோனா தடுப்பூசி போட ஏராளமானோர் வந்து, வரிசையில் நிற்க முடியாமல், ஆங்காங்கே மரத்தடியில் கீழே அமர்ந்து காத்திருந்தனர். தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்களுக்கு இரத்த அழுத்தம் சரிபார்த்து, ஆதார் பதிவு செய்த பிறகே தடுப்பூசி செலுத்தப்பட்டது.