Published : 28,Jul 2017 04:18 PM

மத்திய அமைச்சராகிறார் அமித்ஷா?

Amit-Shah-becomes-Union-Minister

மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

குஜராத் மாநிலத்தில் இருந்து எம்பி தேர்தலில் போட்டியிடும் அமித்ஷா, காந்திநகரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேபோல மத்திய அமைச்சரான ஸ்மிருதி இராணியும், மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆன பிறகு அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கட்சித் தலைவராக உள்ள அமித்ஷா மோடியின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவர். அவரை மாநிலங்களவைக்குள் கொண்டுவந்து மாநிலங்களவையில் தனக்குரிய பலவீனத்தைச் சமாளிக்க மோடி முயற்சிக்கிறார் என ஒரு பேச்சு இருக்கிறது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கை ஓங்கியே உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் அனுபவம் மிக்க தலைவர் குலாப்நபி ஆசாத் தலைமையிலான உறுப்பினர்கள் பெரும் இடையூறாக இருக்கிறார்கள். அவரை சமாளிக்க அமித்ஷா போன்ற திறமையான நபர் அந்த இடத்திற்கு வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி கருதலாம். ஏற்கனவே வெங்கய்யா நாயுடுவை குடியரசுத் துணைத் தலைவராக்கி மாநிலங்களவை சபாநாயகராக்க முயற்சிப்பதும் மாநிலங்களவையில் உள்ள பலவீனத்தை சமாளிக்கத்தான் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அமித்ஷா மாநிலங்களவைக்கு வந்தால் பாஜகவுக்கு அது மேலும் பலமளிக்கும் எனக் கருதப்படுகிறது.

இதற்கிடையில அமித்ஷாவை எம்பியாக்கி அதன் பிறகு அவரை அமைச்சரவைக்குள் கொண்டு வர மோடி முயற்சிக்கிறார் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது.

தற்போதைய அமைச்சரவையில் ஒவ்வொரு அமைச்சரும் பலதுறைகளை ஒருங்கே சமாளித்து வருகிறார்கள். அருண் ஜேட்லி நிதி மற்றும் பாதுகாப்புத்துறை என ஒன்றுக்கும் மேற்பட்ட துறையைக் கையில் வைத்திருக்கிறார். அதேபோல் ஸ்மிரிதி இரானி மனிதவள மேம்பாட்டுத் துறை, தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை போன்றவற்றைக் கையில் வைத்திருக்கிறார். இந்த நிலையில் அமித்ஷா அமைச்சரவைக்குள் வந்தால் பாதுகாப்புத்துறை போன்ற நாட்டின் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால், அமித்ஷா மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்றால் அவர் பாஜகவின் தேசியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பாரதிய ஜனதாவின் கட்சி விதிகளின்படி தேசியத் தலைவராக இருப்பவர், எம்பியாக இருக்கலாம். ஆனால் அமைச்சரவையில் பங்குபெற முடியாது என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். எனவே அவர் அமைச்சராக வேண்டுமெனில் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அமித்ஷா பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு தனது திறமையான திட்டங்களின் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் கட்சிகளை முறியடித்து பாஜகவை ஆட்சியில் அமர வைக்கிறார் என்ற பெருமையும் அவருக்கு இருக்கிறது. அப்படி இருக்க அவர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவாரா என்பதும் கேள்விக்குறிதான்.

அமித்ஷா அமைச்சரவையில் நுழைந்து ஆட்சியில் பங்குபெறுவாரா அல்லது வெற்றிகரமான கட்சி கட்டமைப்பு பயணத்தைத் தொடர்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்