[X] Close

பீகார் தேர்தல் முடிவுகள்: தேஜஸ்வி -காங். கூட்டணி முன்னிலை; நிதிஷ் - பாஜக அணிக்கு பின்னடைவு

Subscribe
Bihar-election-results-live-updates

 


Advertisement

பீகார் தேர்தல் முடிவுகள், முன்னணி நிலவரம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொடக்கத்தில் இரு கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஓரளவு முன்னிலை வகிக்கத் தொடங்கியிருக்கிறது. நிதிஷ் குமார் - பாஜக கூட்டணி சற்றே பின்னடைவு கண்டுள்ளது.

காலை 9.00 மணி நிலவரப்படி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி 85 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேசமயம் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு கூட்டணி 65 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி இக்கூட்டணியில்தான் உள்ளது. லோக் ஜனசக்தி 5 இடங்களிலும், இதர கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 


Advertisement

மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பீகாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை.

மகா கூட்டணி Vs தேசிய ஜனநாயகக் கூட்டணி!

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நான்குக்கும் அதிகமான கூட்டணிகள் களத்தில் இருந்தாலும், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கும், ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இணைந்த நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்தான் நேரடி போட்டி நிலவியது.

நான்காவது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் இருந்த நிலையில், அவரை வீழ்த்த ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மகா கூட்டணி அமைக்கப்பட்டது.


Advertisement

இந்தியாவில் கொரோனா பரவலுக்குப் பின்பு நடைபெற்ற பொதுத்தேர்தல் என்பதால், தேர்தலின்போது பல்வேறு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன. தேர்தல் பரப்புரையின்போது முதல்வர் நிதிஷ் குமாருக்கு இணையாக தேஜஸ்வி யாதவ் கூட்டங்களுக்கும் மக்கள் கூடினர்.

இரு கூட்டணிகளுமே இளைஞர்களை முன்வைத்து தங்களது பரப்புரையை மேற்கொண்டன. இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலைகள் வழங்கப்படும் என மகா கூட்டணி உறுதியளித்த நிலையில், 19 லட்சம் வேலைகள் வழங்கப்படும் என பதிலடி தந்தது தேசிய ஜனநாயக கூட்டணி. மேலும், கூடுதலாக இந்தி மொழியில் மருத்துவம், பொறியியல் கல்வி கற்பிக்கப்படும் எனவும் வாக்குறுதி தந்தது.

தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

பீகார் தேர்தலில் எப்போதும் சாதி ரீதியாக வாக்குகள் பிரியும் நிலையில், இந்தத் தேர்தல் லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் பங்களிப்பு இல்லாமல் நடைபெற்றுள்ளது. லாலு சிறையில் உள்ள நிலையில், உடல் நலக்குறைவால் ராம் விலாஸ் பாஸ்வான் அண்மையில் காலமானார்.

தொகுதிப் பங்கீடு பிரச்னையில் கடைசி நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய, ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தனித்து களம் கண்டார். அவரது லோக் ஜனசக்தி கட்சி பிரிக்கும் வாக்குகள் யாருக்கு சாதகம் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அதேவேளையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை, தேஜஸ்வி ஆட்சியைப் பிடிப்பார் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close