[X] Close

தமிழகத்தின் அடுத்த டிஜிபியும் இந்திய ஐபிஎஸ் அதிகாரிகளின் பெருங்கனவும் !

Subscribe
Who-is-the-Next-DGP-of-Tamil-Nadu--

டிஜிபி… இது தான் ஒரு மாநில காவல்துறையின் தலைமை பதவி. போலீஸ் வட்டாரத்தில் ”த சென்டர் ஆப் தி பவர்” என்பார்கள். ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியின் உச்சப்பட்ச கனவே இந்த டிஜிபி பதவிதான்.அதிலும் தமிழக டிஜிபி ஆகவேண்டும் என்பது இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் பெருங்கனவு.


Advertisement

Related image

ஸ்காட்லாந்த் யார்ட் காவல்துறைக்கு இணையாக ஒருகாலத்தில் போற்றப்பட்ட தமிழக காவல்துறையின் சீர்மிகு பங்களிப்பும், பெரிய பிரச்னைகள் எழாத மாநிலமாக தமிழகம் இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மெனக்கெட்டு கட்டுப்பாட்டில் வைக்கவேண்டிய நிலை அரிதிலும் அரிதாகதான் நடக்கும் என்பது இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு தெரியும். ஏனெனில், தமிழர்கள் ஆரம்பக்காலந்தொட்டே சுயக்கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதும் பெருந்தன்மை எண்ணம்கொண்டு பிரச்னைகளை தவிர்க்க நினைப்பவர்கள் என்பதும்தான் அதற்கு தலையாய காரணங்கள்.


Advertisement

பெரும்பாலும், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பணி மூப்பு அடிப்படையிலும், பதவி ஓய்வு பெறும் காலம் நெருங்கும்போதுதான் டிஜிபியாக நியமிக்கப்படுவது வழக்கம். டிஜிபியாக ஒருவர் நியமிக்கப்படும்போது அவருக்கு பணிகாலம் 6 மாதங்களுக்கு மேல் இருக்கவேண்டும் என்பதும் அவர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைகளுக்கு ஆளாகியிருக்கக் கூடாது என்பதும் விதி. ஆனால், ஆட்சியாளர்களின் ஆட்டுவிப்பு பொம்மையாக இருக்கும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் விரும்பிவிட்டால், அரசாள்பவர்களுக்கு தூபம் போட்டுவிட்டால், அவர்களுக்கு இவரும், இவருக்கு அவர்களும் தேவைப்பட்டுவிட்டால் விதியாவது மண்ணாங்கட்டியாவது என ஏதோ ஒரு சப்பை காரணத்தை சொல்லி பதவி நீட்டிப்பு கொடுப்பதும், டிஜிபி ஆக்குவதும் இப்போதெல்லாம் மாநில அரசுகளின் வாடிக்கையாக மாறிவிட்டது.

பொதுவாகவே போலீஸ் பணி என்பது பிரச்னைகள், பிரச்னைகள், பிரச்னைகள் என அவற்றை சுற்றியே இருக்கும் ஒரு வலைபின்னல் போன்றது. பணியில் சேரும் ஆரம்ப காலம்தொட்டே பெரும் இடர்களை எதிர்கொள்ளவேண்டிய போலீஸ் பணியில் சாதாரண காவலர் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை தங்களின் கடைசி பணி காலத்தை பிரச்னை இல்லாத ஊரில், இடத்தில், மாநிலத்தில் கழிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு.  அப்படிப்பட்ட ஒரு மாநிலமாக பெரும்பாலான ஐபிஎஸ் அதிகாரிகள் நினைப்பது தமிழகத்தைதான். 


Advertisement

சரி, இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா ? ஏற்படாதா ? என்ற பேச்சுகள் கச்சைக்கட்டி பறக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்ற பேச்சுக்களும் அதற்குள்ளாக சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு, தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கிற டி.கே.ராஜேந்திரனின் பணி காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், 15 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட பட்டியலை மத்திய உள்துறைக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் அனுப்பிவைத்த பட்டியலின்படி பார்த்தால்:-


1.தற்போது போக்குவரத்து துறை ஊழல் கண்காணிப்பு டிஜிபியாக இருக்கும் ஜாங்கிட் ஐபிஎஸ்

2.சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக இருக்கும் திரிபாதி ஐபிஎஸ்

3.தீயணைப்பு துறை பிரிவு டிஜிபியாக இருக்கிற காந்திராஜன்

4.சிபிசிஐடி டிஜிபியாக இருக்கும் ஜாபர்சேட்

5.மனித உரிமை ஆணையத்தின் டிஜிபியாக இருக்கும் லஷ்மிபிரசாத்

6.தேர்தல் சிறப்பு டிஜிபியாக இருக்கும் அசுதோஷ் சுக்லா

7.இந்திய அரசின் அயலக பணிக்காக சீனாவில் இருக்கும் மித்தேலேஷ் குமார் ஜா

8.தமிழ்செல்வன் ஐபிஎஸ்

9.ஆசிஷ்பெங்க்ரா ஐபிஎஸ்

10.ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு

11.கரன்சின்ஹா ஐபிஎஸ்

12.பிரதீப் வி பிலிப் ஐபிஎஸ்

13.சிறப்பு டிஜிபியாக இருக்கும் விஜயகுமார் ஐபிஎஸ்

14.ஏடிஜிபி சஞ்சய் அரோரா

15.ஏடிஜிபி சுனில்குமார்

ஆகிய இந்த 15 பேர் பெயர் கொண்ட பட்டியலில் இருந்து மத்திய அரசு தேர்ந்தெடுத்துக்கொண்டுக்கும் மூவரில் ஒருவரை டிஜிபியாக தமிழக அரசு நியமித்துக்கொள்ளலாம்.

Image result for அசுதோஷ் சுக்லா

இதில், வரும் ஜூலையோடு ஜாங்கிட்டின் பணி காலம் ஓய்வு பெறுவதாலும், தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என கடிதங்கள் வாயிலாக வலியுறுத்திவருவதாலும் இவரை டிஜிபியாக நியமிக்க தமிழக அரசு விரும்பவில்லை என கூறப்படுகிறது. தேர்தல் சிறப்பு டிஜிபியாக இருக்கும் அசுதோஷ் சுக்லா தூத்துக்குடியில் எஸ்.பி.யாக இருக்கும்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் தீர்பாயம் சென்று அதனை ரத்து செய்ய வைத்தார். அதன் பிறகு வேலூரில் பணியில் இருந்தபோது விடுதலை புலிகள் அமைப்பை சேந்தவர்கள் சிறையில் இருந்து தப்பித்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், ஒது Black  Mark என்பதால் இவரை நியமிக்கவும் ஒப்புதல் கிடைக்காது என தெரிகிறது.

Image result for tripathi ips

தமிழ்ச்செல்வன் ஐபிஎஸ், லஷ்மி பிரசாத் போன்றோர்களை டிஜிபியாக நியமிக்க வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது. தமிழக அரசை பொறுத்தவரை திமுக ஆட்சியின்போது அன்றைய உளவுத்துறை தலைமை பொறுப்பில் இருந்த ஜாபர்சேட்டையே இப்போது டிஜிபியாக கொண்டுவருவதற்கு விருப்பப்படுகின்றனர். 

சில குற்றச்சாட்டுகளால் லஞ்ச ஒழிப்புதுறை வழக்கு பதிவு செய்ததையடுத்து, 2011ல் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஜாபர்சேட். பின்னர், தனது இடைநீக்கத்திற்கு எதிராக தீர்பாயத்தில் முறையிட்டு, உயர்நீதிமன்றம் சென்று இடைநீக்கத்தை ரத்து செய்ய வைத்தார். இந்த ரேசில் தீவிரமாக அடிபடும் இன்னொரு பெயர் மித்திலேஷ்குமார் ஜா, இவர் தற்போது இந்திய அரசின் அயலக பணிக்காக சீனாவில் இருக்கிறார்

தனது முயற்சியின் மூலம் மத்திய அரசின் ஒப்புதலை பெற்று, தமிழகத்தின் டிஜிபியாக காய்நகர்த்தலைகளை கச்சிதமாக மேற்கொண்டிருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி சிறப்பு டிஜிபியாக இருக்கும் விஜயகுமார் ஐபிஎஸ்-சை தலைமை டிஜிபி பதவியில் அமர்த்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நினைக்கிறதாம். இருப்பினும், இவர் ஜுனியர் என்று மத்திய அரசு சொன்னால் அதற்கும் சில காரணங்களை முன்வைக்க தமிழக அரசு தயார் ஆகி இருக்கிறது எனவும் தெரிகிறது.

ஆக மொத்தத்தில் வரும்கால தமிழக டிஜிபியாக வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ள நபர்களாக ஜாபர்சேட், விஜயகுமார், மித்திலேஷ்குமார் ஜா, திரிபாதி ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர்தான் போலீஸ் துறையின் அந்த "சென்ட்ர் ஆப் தி பவராக" மாற இருக்கிறார்கள்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close