[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

விஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை!

new-home-gives-vihari-new-hope-to-push-for-india-side

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களை சத்தமில்லாமல் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஹனுமா விஹாரி. இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருக்கும் இந்த காக்கிநாடாகாரர். இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக மிரட்டியிருக்கிறார் ’பேட்’டால்.

கடந்த வருடம் ரஞ்சியில் தொடர் சதங்களை விளாச, அப்போது இவருக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு நிச்சயம் என்று ஆருடம் சொன்னது, ஆந்திர, தெலுங்கானா பத்திரிகைகள். அவர்கள் கணிப்பு வீண் போகவில்லை. இந்திய ஏ அணியில் இடம் பிடித்தார் விஹாரி.

முதல்தர கிரிக்கெட்டில் விஹாரியின் ஆவரேஜ், உலகின் டாப் பேட்ஸ்மேன்களுக்கு கூட இல்லை என்கிறார்கள். அவரது ஆவரேஜ் 59.45. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆவரேஜ்  57.27-தான். இந்தியாவின் ரோகித் சர்மா, விராத் கோலி, புஜாரா ஆகியோரின் ஆவரேஜ் 54-தான். அவர்களையே ஆச்சரியபட வைத்திருக்கிறார் இந்த விறு விறு விஹாரி!

தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக பெங்களூரில் நடந்த போட்டியில் அவர் 148 ரன்கள் விளாச, அந்த ரன்களோடு முதல் தர கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

’தெலங்கானா பிரிந்த பிறகு, இந்த மாநிலத்துக்கு போகவா, அந்த மாநிலத்துக்கு போகவா அப்படிங்கற குழப்பம் இருந்தது. அந்த மாற்றம்தான் என்னை உயர்த்தி இருக்கும். அணி மாறுவது ரிஸ்க்தான். சரியா விளையாடலைன்னா, அணி மாறுனதாலதான் இப்படியாச்சுன்னு சொல்வாங்க. அதனால கடுமையான பயிற்சிகள்ல ஈடுபட்டேன். அது எனக்கு கைகொடுத்தது. வழக்கமா செஞ்சுரி அடிச்சதும் நிறைய பேட்ஸ்மேன்கள் போதும்னு திருப்தி அடைஞ்சிருவாங்க. ஆனா, நான் இன்னும் ரன்கள் குவிக்கணும்னு நினைப்பேன். என் தனிப்பட்ட ஸ்கோரை விட, அணியின் வெற்றியின் முக்கியம். அதனால கடைசிவரை நிற்கணும்னு முடிவு பண்ணி ஆடுவேன்’ என்கிறார் விஹாரி.

கடந்த 5 ரஞ்சி போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் இரட்டை சதம் அடித்திருக்கிறார் இவர். ஒடிசாவுக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த 302-தான், அவரது அதிகப்பட்ச ரன்.
‘சூழ்நிலையை பார்த்து, அதுக்கு தகுந்தாப்ல என்னை மாத்திக்கிட்டு எப்பவும் விளையாடுவேன். எதிரணியை விட, நம்ம அணி ஒரு மடங்கு முன்னால இருக்கணும்னு நினைப்பேன். அதே நம்பிக்கையோடு களமிறங்கி ஆடுவேன்’ என்கிறார்.

2012-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பிடித்திருந்த விஹாரி, உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். அப்போது, அவருடன் விளையாடியவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வந்தபோது விஹாரிக்கு வரவில்லை. நம்பிக்கையுடன் இருந்தார், நிச்சயம் ஒரு நாள் அழைப்பு வரும் என்று. அது வீண் போகவில்லை. கடந்த வருடம் இந்திய ஏ அணிக்கு அவர் தேர்வானார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அவர் திறமையை கவனிக்க, உத்வேகம் அதிகரித்தது.

‘ராகுல் சாரோட, நான்கைந்து டூர் போயிட்டேன். அவர், ’சிறந்த ஆடும் லெவன்னு ஒன்னு இல்லை. ஆடும் லெவன்ல யாருமே நிரந்தரமில்லை. மொத்தமுள்ள 15 வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஏ அணியை பொறுத்தவரையில் கத்துக்கிறது முக்கியம்’னு சொல்வார். அதன்படி எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்தாங்க. முந்தைய போட்டியில சதம் அடிச்சாலும் அடுத்த போட்டியில உட்காரவச்சுட்டு மற்ற வீரருக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. இந்த சிஸ்டத்தால எல்லாருமே, அவங்க திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைச்சுது’ என்கிற விஹாரிக்கு, தாகா பிரீமியர் லீக், இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் கிளப் ஆகிய அணிகளில் விளையாட வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால், அவரது ஆசையெல்லாம் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான்!

கிடைக்காம எங்க போயிரும்?
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close