[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

கதை திருட்டும் முருகதாஸ் பஞ்சாயத்தும் ! ஒரு A டூ Z ஸ்டோரி

story-theft-row-in-kollywood-and-history-of-director-murugadoss

தமிழில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுகிறவர் ஏ.ஆர்.முருகதாஸ். முருகதாஸ் முதன் முதலாக அஜீத்தை வைத்து "தீனா" படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமனார். அதன் பின்பு, கேப்டன் விஜயகாந்தை வைத்து "ரமணா"வை இயக்கினார். இந்தப் படம் முருகதாஸ்க்கு பெரும் புகழை தேடிக்கொடுத்தது. மேலும், விஜயகாந்தின் அரசியல் வருகைக்கு "ரமணா" ஒரு முக்கியப் படமாக அமைந்தது. அதன் பின்பு, சூர்யாவை வைத்து "கஜினி" இயக்கினார்.

Read Also -> 'முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் சர்காரில் சமரசம்' வழக்கும் முடிந்தது !  

அப்போதே இது ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய "மெமன்டோ" படத்தின் தழுவல் என கூறப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பின்னுக்கு தள்ளி "கஜினி" தமிழில் மாபெரும் வெற்றிப்பெற்று, இந்திக்கு சென்றது. இந்தியில் அமீர்கான் நடிப்பில் உருவான "கஜினி" வசூலில் இப்போதும் முதலில் நிற்கிறது. அதன் பின்பு முருகதாஸ் சூர்யாவை வைத்து "ஏழாம் அறிவு" இயக்கினார். பின்புதான், முதல்முறையாக விஜயை வைத்து "துப்பாக்கி" இயக்கினார், இது விஜயை வேறொரு பரிமாணத்தில் காட்டியதால் படம் பிளாக் பஸ்டர் ஹிட்.

Read Also -> இந்தோனேஷிய விமான விபத்து: 24 உடல்கள் மீட்பு

இதன் காரணமாக விஜய் தனது அடுத்தபட வாய்ப்பை முருகதாஸ்க்கு வழங்கினார். அந்தப் படம்தான் "கத்தி", அதிலிருந்துதான் முருகதாஸ்க்கு "கதை திருடல்" பிரச்சனை தலை தூக்கியது. அப்போதுதான் மீஞ்சூர் கோபி என்பவர் முருகதாஸ் மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். ‘கத்தி’ கதை என்னுடையது என அவர் சொன்ன அடுத்த நொடி வைரலானது.இந்தக் குற்றச்சாட்டு, வார்த்தை சண்டையாக ஆரம்பித்து பிறகு வழக்கு வரை சென்றது.

Read Also -> “ஐயம் வெரி சாரி”... செல்போனை தட்டிவிட்ட விவகாரத்தில் நடிகர் சிவகுமார் வருத்தம் !

இறுதியில் அனல் பறக்கும் வழக்காக வரும் என எதிர்பார்த்த வேளையில் வழக்கை வாபஸ் பெற்றார் கோபி. ஆனால் யார் செய்த புண்ணியமோ, நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து "அறம்" படத்தை இயக்கினார் கோபி. இதனையடுத்து அறம் படத்தின் மூலம் புகழடைந்தார் கோபி. நயன்தாராவுக்கும் அறம் நல்ல பெயரையும், புகழையும் கொடுத்தது. கத்தி படம் வெளியான பின்பு பேசிய முருகதாஸ் "ஒரு கிரியேட்டராக வேலை செய்ய விடுங்கள். தமிழில் படம் பண்ணுவதற்கே வெறுப்பாக உள்ளது. பேசாமல் வேறு மொழிக்கு போய் படம் பண்ணலாமா என யோசிக்க தோன்றுகிறது” என்று உணர்ச்சிப் பொங்க பேசியிருந்தார்.

Read -> 'சர்கார்' கதை விவகாரத்தில் சமரசம் ! 

ஆனால் கத்தி கதை குறித்து அவர்‘கோபி என்பவரை நான் சந்தித்ததே இல்லை’ என மறுத்திருந்தார். ஆனால் கடந்த ஒரு வருடங்களில் முருகதாஸை மூன்று முறை நேரில் சந்தித்து நான் கதையை கூறியிருக்கிறேன். என் ‘மூத்தக்குடி’ கதையை கேகே நகர் சிவன் பார்க்கில் வைத்து அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை கதையை சொன்னேன். குறைந்தது 10 முறையாவது கதையாக்கம் குறித்து முருகதாஸிடம் போனில் பேசி இருப்பேன்.” என்று மீஞ்சூர் கோபி விளக்கி இருந்தார். இதனையடுத்து மெர்சல் படத்துக்கு பின்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சர்கார் என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தில் விஜய் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

Read Also -> முதலில் ரஜினியின் ’அதிசய பிறவி’, பிறகு ’கண்ணாடி’: டைட்டில் மாறிய கதை!

இதனையடுத்து படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் " மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது என பல்வேறு அரசியல் பஞ்ச்களை பேசி கைதட்டல் வாங்கினார். அதன்பின்னர் அவரின் மேடைப்பேச்சுக்கு பலரும் கலவையான விமர்சன கருத்துகளை முன்வைத்தனர். இதன் பின்பு டீஸர் வெளியாகி டிரண்ட் ஆக, விஜய் ரசிகர்களை ஆஹா ஓஹா என சமூக வலைத்தளங்களில் கொண்டாட தொடங்கினர்.

Read Also -> 2-வது மனைவியை தாக்கிவிட்டு முதல் மனைவி தலைமறைவு: கன்னட ஹீரோ அப்செட்!

இதன் பின்புதான் சிக்கல் தொடங்கியது, ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் 'செங்கோல்' என்ற தலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனது கதையை திருடி 'சர்கார்' என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம்  இயக்கியுள்ளார் என்றும் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கம் அக்டோபர் 30க்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

Read Also -> 'ராயுடு ரொம்பவே புத்திசாலி' விராட் கோலி புகழாரம் 

இதனையடுத்து செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்தது. இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக உள்ள இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்த வருணுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது. அதில், தங்கள் பக்கம் நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை தடை செய்ய மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்,முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறைக்கு இயக்குநர் கே.பாக்கியராஜ் அளித்த பேட்டியில், “புகார் வந்த பின்னர் இருதரப்பினரையும் விசாரித்தோம். முருகதாஸிடம் அவருடைய கதையை கேட்டோம். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தில் கதையின் முக்கியமான கரு ஒன்றாகவே இருந்தது. அதனால், இதனை பேசி முடிக்கவே முடிவு செய்தோம். ஆனால், முருகதாஸ் அதற்கு மறுத்துவிட்டார். தனிப்பட்ட முறையில் இந்தச் செய்தி வெளியே செல்லாமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். அது சரியாக வரவில்லை.

"வருண் பெயருக்கு கொஞ்சமாவது கிரிடிட் கொடுக்குமாறு முருகதாஸிடம் கேட்டுக் கொண்டோம். ஆனால், தன்னுடைய கதைதான் என்பதில் முருகதாஸ் கடைசி வரை பிடிவாதமாக இருந்துவிட்டார். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று உறுதியாக இருந்தார். அடுத்த முறை இதுபோன்ற எந்த பிரச்னையும் ஏற்பாடாமல் இருக்க நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியிருந்தார்.

பாக்யராஜின் இந்தப் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் "இந்த விஷயம் மிகவும் ஒருதலைபட்சமாக உள்ளது. இரண்டு கதையும் ஒன்று என்றால், என் கதையை படித்தார்களா?. அதாவது என்னுடைய முழுக் கதையை, பவுண்டடு ஸ்கிரிப்டை பாக்யராஜ் படித்தாரா? இல்லையா?. என்னுடைய பவுண்டடு ஸ்கிரிப்டை நான் இதுவரை அவர்களிடம் கொடுக்கவே இல்லை. மூலக் கதைக்கான ஸ்கிரிப்டை மட்டுமே பெற்றுச் சென்றார்கள். ஒன்று என்னுடைய முழுத் திரைக்கதையையும் படிக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் படத்தை பார்க்க வேண்டும். நான் படத்தை காட்டுவதாக சொன்னேன். ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. வெறும் சினாப்சிஸ் கதையை மட்டும் வைத்துக் கொண்டு கருத்து சொல்வது எவ்வளவு பெரிய தவறு. எனக்கு எவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கிறீர்கள். முதல்வரின் மறைவு, கூகுள் சிஇஓ பற்றி எனத் தற்காலத்தில் நடக்கக் கூடியதை வைத்து நான் படம் எடுத்திருக்கும் நிலையில், 2007 இல் பதிவு செய்யப்பட்டுள்ள கதையும் இதுவும் எப்படி ஒன்றாகும். நேர்மையாக பணியாற்றிய எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை."

மேலும் "‘செங்கோல்’ கதை எழுதிய வருண் என்பவரை நான் நேரில் பார்த்ததே இல்லை. அவர் எப்படி இருப்பார், என்ன வயது என்ற  எந்த விவரமும் எனக்கு தெரியாது. இதனை அவரும் ஒப்புக்கொள்வார். வருண் தனது நண்பர் சூரிய கிரணிடம் கதை சொல்லியதாகவும், சூரிய கிரண் என்னுடைய படங்களில் பணியாற்றிய ஸ்டில்ஸ் விஜய் என்பவரிடம் அந்தக் கதையை கூறியதாகவும், அவர் மூலம் எனக்கு கதை வந்ததாகவும் சொல்கிறார். ஸ்டில்ஸ் விஜய் என்பவர் மூலம் தான் கதை என்னிடம் வந்தது என்றால், அவரை நேரில் அழைத்து விசாரித்தார்களா?. போனில் அழைத்து பேசியதாக கூறுகிறார்கள். போனில் பேசி எனக்கு தூக்கு தண்டனை கொடுத்துவிடுவீர்களா?. நேரில் அழைத்து பேச வேண்டாமா?" என கொந்தளித்தார் முருகதாஸ். 

மேலும் இயக்குநர் பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் குறித்தும் விமர்சித்தார் முருகதாஸ் அதில் "பாக்யராஜ் எழுதி இயக்கிய ‘சின்னவீடு’ படத்தின் கதையும், கலைமணி எழுதி மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் கதையும் கிட்டதட்ட ஒன்றேதான். ‘சின்ன வீடு’ படத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படம் வெளியானது. அப்படியானால் நீங்களும் காப்பி அடித்தீர்களா?. நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? என முருகதாஸ் கேட்டிருந்தார். 

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் சர்கார் பட கதை விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் முருகதாஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சர்கார் மூலக் கதை தன்னுடையதல்ல என முருகதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் "நன்றி வருண் ராஜேந்திரன்" என்ற பெயரை போட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டார். நன்றி டைடிலை தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் போட வேண்டும் என்றும் நீதிபதி சுந்தர் தெரிவித்தார்.இதனையடுத்து இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பேட்டிக் கொடுத்த வருண் ராஜேந்திரன் விஜய் "சர்கார்" அமைக்க என் "செங்கோலை" பரிசாக தருகிறேன்' என தெரிவித்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியளவில் மிகப் பிரபலமான இயக்குநர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதுபோன்ற பஞ்சாயத்துகளும் அவருக்கு புதிதல்ல. ஆனால், முருகதாஸை மானசீக குருவாக நினைக்கும் ஏராளமான இளம் இயக்குநர்கள் கோடம்பாக்கத்தில் கலர் கனவுகளோடு வலம் வருகிறார்கள். இப்படி பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் முருகதாஸ்க்கு சர்கார் சமரசம் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close