'The Girlfriend' உண்மையில் இது ஆண்கள் பார்க்க வேண்டிய படம்!!!
ராஷ்மிகா மந்தானாவின் திரை வாழ்வில் முக்கியமான படமாகியிருக்கிறது The Girlfriend. புஷ்பா, அனிமல் போன்ற படங்களில் பார்த்த ராஷ்மிகா இல்லை. இந்த படத்தில் படிக்கும் பருவத்தில் ஒரு பெண் சந்திக்கும் உள்மனப் போராட்டங்களின் உருவமாகி இருக்கிறார். இந்த நேரத்தில் பேசவேண்டிய விஷயத்தை பேசியதற்காக இயக்குநர் ராகுல் ரவீந்திரனுக்கு பாராட்டுகள்..
இயக்குநர் ராகுல் ரவீந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, அனு இமானுவேல், தீக்ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ், ரோஹிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 7 ஆம்தேதி திரையரங்குகளில் வெளியான GIRL FRIEND படம் அப்போதே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, கடந்த 5ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இப்படம் வெளியானதையடுத்து மேலும் பெருவாரி மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது.
படம் பேசுவது என்ன?
படிக்கும் வயதில் TOXIC Relationship-ல் சிக்கும் இளம்பெண், அதில் இருந்தும், அந்த உறவு ஏற்படுத்திய பிம்பத்தில் இருந்தும் உடைத்து வெளிப்படுவதை இப்படம் பேசுகிறது. தாய் இல்லாத பூமா என்ற பெண், எம்.ஏ. ஆங்கிலம் படித்து, எழுத்தாளராகும் கனவுடனும், தனது எதிர்காலம் பற்றிய பல்வேறு ஆசைகளுடனும் தனது ஊரில் இருந்து நகரத்துக்கு வருகிறாள், தன்னிடம் நட்பாக பழகிய விக்ரம் என்ற இளைஞன், ஒரு தனித்த சூழலில் முத்தம் தர, அதில் குழப்பத்தில் ஆழ்கிறாள். அடுத்தநாள், பூமா, விக்ரமின் காதலியாக கல்லூரி முழுவதும் அறியப்படுகிறாள். அவள் மனதில் இருப்பது என்ன என்று அவள் அறியும் முன்பாகவே அவள் விக்கியின் காதலியாக அறியப்படுகிறாள். அப்போது தொடங்குகிறது அவளின் சிக்கல்கள். ALPHA MALE விக்கிக்கான வேலைகளை செய்பவளாக மாறிப்போகும் பூமா, ஒரு கட்டத்தில் தனது விருப்பங்கள், தனது ஆசைகளை கூட அவன் அங்கீகரிக்க மறுத்து தனது காதலியாக மட்டுமே முன்னிறுத்தும்போது அவளின் கனவுகள் அவள் அறியாமலேயே கை நழுவிப் போகும் அச்சம் அவள் முகத்தில் படர்கிறது.
விக்கியின் நடனத்தை பார்த்து அவனுடன் நட்பாகும் துர்கா, அவன், பூமா மீது காதல் கொள்வதை கண்டு வெறுப்படைகிறாள். அவனுடைய BREAK UP க்காக காத்திருக்கப் போவதாக சொல்லிச் செல்லும் துர்கா, கல்லூரி நாடகத்தில் தன்னுடன் பங்குபெறும் பூமாவை வெறுப்புடன் நோக்குகிறாள். ஆனால் பூமாவின் வெகுளித்தனத்தால் ஈர்க்கப்படும் துர்கா, அவளுடன் நட்பாகிறாள். ஆனால் பூமாவை யாரும் நெருங்கவிடாமல் தனது காதலின் பெயரால் அவளைச் சுற்றி வேலியிடும் விக்கியின் செயல்கள், பூமாவை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. தனது குறைகளை களைந்து நாடகத்தில் சிறப்பாக ஜொலிக்கும் பூமா, உற்சாகத்தில் துள்ள, அவளை காதலின் பெயரால் குத்திக் கிழிக்கிறான் விக்கி.
ஒரு கட்டத்தில் மகளை பார்க்க கல்லூரி விடுதிக்கு வரும் தந்தை மகளை அவளின் காதலனுடன் பார்க்க நேரிட்டு அதிர்கிறார். அப்போதும் பூமாவின் தந்தை என்று பாராமல் அவரிடம் பாய்கிறான் விக்கி. தனது கனவான படிப்பையே அவன் முடிக்க நினைக்கும்போதுதான் என்ன செய்வதென்று அறியாமல் பயத்துக்குள் ஆழ்கிறாள் பூமா. தனது ஆசையா? கனவுகளா? காதலன் விக்கியா? என்ற கேள்வி அவள் முன் பூதாகரமாக, அப்போது அவள் எடுக்கும் முடிவும், அதன் பிறகு விக்கியின் செயல்களும் அவளை முற்றிலும் வேறு ஒருவளாக மாற்றுகிறது. அந்த இடம்தான் இந்த படத்தை பேச வைத்திருக்கிறது.
காதலித்தவனை திருமணம் செய்யாவிட்டால் என்ன?
தான் காதலிக்கிறோமா என்பதை அறியாமலேயே அந்த உறவுக்குள் சிக்கி விட்ட பெண், உள்ளத்தால் மட்டுமின்றி, உடலாலும்இணைந்த பின் அந்த உறவை கெட்டியாக பிடித்துக்கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்குள், இந்த சமூகச்சூழல் தள்ளுகிறது. தான் காதலிப்பவள், தனது காதலி, தனக்கானவள் மட்டும் என்ற ஆல்ஃபா ஆணின் ஈகோ, அவளின் சின்ன சின்ன ஆசைகளை, உணர்வுகளை புறக்கணிக்கும்போது பெண் மனதை அச்சமடைய வைக்கிறது. அன்பு என்ற பெயரில் அவன் காட்டும் ஆக்கிரமிப்பு, காதலை பற்றிய குழப்பத்தை உண்டாக்குகிறது.
படிப்புக்குப்பின் அவன் என்னவாக வேண்டும் என்று திட்டமிடும் நேரத்தில் நீ வீட்டில் இரு. அம்மாவுடன் சந்தோஷமாக இரு எனும் போது தனது கனவுகள் என்னவாகும் என்ற அதிர்ச்சிக்குள்ளாகிறாள் அந்த பெண். கதை எழுத வேண்டும், தானும் எழுத்தாளராகவேண்டும் என்ற ஆசையும், கற்பனைக் கோட்டைகளும் காதல் என்ற பெயரால் பலியாகிவிடுமா என்ற அச்சத்தை கூட வெளிப்படுத்த முடியாமல் அவள் திகைக்கும்போதும் காதலனுடன்தான் நிற்கிறாள். அடல்ட் என்று சொன்னாலும், குறுகிய வட்டத்திற்குள், அப்பாவின் அரவணைப்புக்குள் இருந்தவள்,வெளி உலகை சந்திக்கும்போது நேரும் அச்ச உணர்வும், யாரோ ஒருவன் தன் மீது காதல் என்ற பெயரால் ஆக்கிரமிக்கும்போது பாதுகாப்பை உணர்ந்து ஒடுங்கினால், அந்த காதலின் பெயராலேயே தனது அழிவு எழுதப்படுகிறதோ என்ற அச்சத்தை அந்த கண்கள் பிரதிபலிக்கின்றன.
காதலன் விட்டுப்போகலாம். ஆனால் காதலி பிரேக் அப் செய்தால்? அவன் ஈகோ அடிபடுகிறது. அதன் பின் அவன் செய்யும் செயல், ஆணாதிக்க மனப்பான்மையின் கீழ்த்தரத்தை வெளிப்படுத்துகிறது. நீ காதலிக்காவிட்டால் உன்னை வாழவிட மாட்டேன் என்ற ஆத்திரம்தான் பல குற்றங்களுக்கு காரணமாகிறது. அந்த நொடியில் அச்சப்பட்டு அடிபணிந்தால் என்னவாகும். அந்த நொடியில் துணிந்து நின்றால் என்னவாகும் என்பதுதான் இந்த படத்தை பாராட்ட வைக்கிறது.
நிர்வாண புகைப்படங்களையும், மார்பிங் செய்து புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடும் போது அந்த பெண் கூனிக்குறுக என்ன இருக்கிறது? தான் அன்பை கொட்டி காதலித்த பெண்ணை அப்படி செய்த ஆண்தான் தலை குனிய வேண்டும். பெண் உடல் ஆள்வதற்கு அல்ல. அவள் வெறும் உடல் மட்டும் அல்ல. அவள் மனுஷி. தனது உயரங்களை கனவு கண்டு, வான் நோக்கி பறக்கும் பறவையை, காதல் என்ற சங்கிலியால் கட்டி இழுத்து பூமிக்குள் புதைக்கும் ஆல்ஃபா ஆணின் வக்கிரத்தை முறியடித்து, நிமிர்ந்து நிற்கும் பெண்தான் இந்த GIRL FRIEND.
அசத்தியிருக்கும் ராஷ்மிகா
ராஷ்மிகா இந்த படத்தில் தனது இன்னொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். எளிதில் மாறும் முக பாவனைகள், இயல்பான பாவங்கள், உடல்மொழியால் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். பாதுகாப்பற்ற தன்மையை உணரும் பெண்தான் உடலை முழுதும் குறுக்கிக்கொண்டு படுப்பார். அச்ச உணர்வால் சுருளும் போதும், இது காதலா? இல்லையா என்று குழப்பமடையும்போதும், காதலன் என்று கூறும் ஒருவன் தன்னை அடிமை போல நடத்துவதால் அதனை எதிர்ப்பதா? என்று புரியாமல் குழம்பும் இடத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராஷ்மிகாவின் கண்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கவனிக்கத்தக்க மொழியை பேசியிருக்கின்றன.
அனு இமானுவேல்
பெண்ணுக்கு பெண் எதிரி என்று சித்தரித்துவிடாமல், இரு பெண்களுக்கு இடையேயான நட்பை வெளிப்படுத்தியிருக்கிறது அனுவின் துர்கா கதாபாத்திரம். தனது தோழியிடம் உனது காதலனை நான் முத்தமிட முயன்றிருக்கிறேன் என்று வெளிப்படுத்தும் இடத்திலும், தோழியின் கடினமான நேரத்தில் எதிரே வந்து நின்றஇடத்திலும் அனு அசத்தியிருக்கிறார்.
ராகுல் ரவீந்திரன்
Chi la Sow என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெற்ற ராகுல் ரவீந்திரனின் படைப்பில் GIRL FRIEND முக்கிய இடம் பிடித்திருக்கிறது. ராகுல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில், வசனங்கள் குறிப்பிட்டு தனியாகத் தெரிகின்றன. எப்பவும் யாராவது துணைக்கு வந்துகொண்டே இருக்க முடியாது என்ற நிஜத்தை இவர் தனது கதாபாத்திரம் வழியே அழுத்திச் சொல்கிறார். டூயட் என்ற பெயரில் கும்பல் நடனங்களை அரங்கேற்றாமல் விட்டிருக்கிறார்.
துப்பட்டாவை எப்போதும் விலகாமல் இழுத்துக் கொண்டே நிற்கும் பெண், எந்த சூழலிலும் துப்பட்டாவை தனது கவசமாக, போர்த்திக்கொண்டே இருக்கும் பெண், கிளைமேக்சில் அந்த துப்பட்டாவை கைவிட்டு வெளியேறுவது விட்டு விடுதலையாகிச் செல்லும் கதையின் நாயகியின் மனதை வெளிப்படுத்துகிறது. மெல்ல கதைக்குள் இழுத்துச்சென்று, கதாபாத்திரங்களை விவரிப்பதில் இவரின் திரைக்கதை குறிப்பிடும்படியாக இருக்கிறது. பாடகி சின்மயியின் கணவரான இவர், தமிழில் நடிகராக அறிமுகமானவர். தெலுங்கு இவரை அரவணைத்துக்கொள்ள நடிகராகவும், இயக்குநராகவும், பின்னணி குரல் கலைஞராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுவரை 3 படங்களை இயக்கியிருக்கும் அவர், இந்த படத்தில் தனது முத்திரையை அழுத்தமாகவே பதியவைத்திருக்கிறார்.
பிற பாத்திரங்கள்
கதையின் நாயகன் விக்கியின் தாயாக ஒரே ஒரு காட்சியில் வரும் ரோஹிணி வசனமற்ற நடிப்பின் மூலமே சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறார். பூமாவின் தந்தையாக வரும் ராவ் ரமேஷ், ஒட்டுதலற்ற தந்தையாகவும், தாயற்ற மகளை தனது தியாகங்களை சொல்லி வளர்ப்பதாக கூறி தனது கட்டுக்குள் மகளை வைக்கும் தந்தையின் உணர்வுகளை கடத்துகிறார். தனது மகள் தன் கைவிட்டு போகிறாள் என்ற தருணத்தில் அவர் பேசும் வசனங்கள், பூமாவை தனியாக இந்த உலகை எதிர்த்து போராடத் தள்ளுகின்றன.
படத்தில் குறைகள் இல்லையா?
நாயகனாக வரும் தீக்ஷித் ஷெட்டியின் முக பாவங்கள் ஒரு குறையே. கதை நாயகனின் தாயாக வரும் ரோஹிணியின் கதாபாத்திரத்தை வடித்த விதத்தை கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.
கல்லூரிச் சூழலை காட்சி படுத்தியிருக்கும் விதத்தில் படிப்பையும் கூடுதலாக மையப்படுத்தியிருக்கலாம். ஒரு சில காட்சிகளில் படிப்பை கடந்துவிடுகிறார்கள். மாணவிகள் விடுதியில் ஒரு மாணவன் வந்து தங்குவதும், மாணவர் விடுதிக்குள் சென்று, மாணவி தங்குவதுமான யதார்த்தத்தை மீறிய காட்சிகள் இருக்கின்றன. காதலிப்பவர்களை ஏற்றிவிடுபவர்களாக மட்டுமே சுற்றியிருக்கும் மாணவ, மாணவிகளை காட்டியிருப்பது ஒரு குறையே. நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் பெயரளவில் எச்சரித்து விலகுவதாக காட்டுவதும் நிஜத்தை மீறியதே.
பெண்களுக்கான படமா?
உண்மையில் இது ஆண்கள் பார்க்க வேண்டிய படம். உருகி உருகி காதலிக்கும் பெண், பிரிந்து விடலாம் என்று சொல்லும்போது, அதை ஈகோவாக எடுத்துக்கொள்ளும் ஆண்களே அதிகம். காதலை உடைத்துச்செல்லும் ஆண் மீது ஏற்படும் எண்ணம், பெண், பிரிவைச் சொல்லும்போது இருப்பதில்லை. இந்த பொண்ணுங்களே இப்படித்தான், கழட்டிவிட்டுவிடுவார்கள் என்ற பொதுபுத்தியின் மீது ஓங்கி அடித்திருக்கிறது இந்த படம்.
ஆணாதிக்கத்தால் தனது கனவை அழிக்க நினைக்கும் காதலனின் குணத்தை உணரும் பெண், அந்த ஆணிடம் தன் வாழ்க்கையை ஒப்படைக்க எண்ண மாட்டாள். காதல் ஏற்படுவது இயல்பு போல, பிரிவும் இயல்பே. பிரிவில் அசிங்கப்படுத்த நினைத்தால் முன்போல யாரும் பயந்து ஒடுங்கி தவறான முடிவுகளை எடுக்கத் தேவையில்லை. தலைநிமிர்ந்து வாழலாம் என்ற மெசேஜ், இப்போதைய கால கட்டத்தில் தேவைதான்.

