"எனக்குப் பிடிக்காத ஒரு படத்தில்.." - லோகேஷுடன் பேசியது குறித்து ஆமீர் கான் | Aamir Khan
நடிகர் ஆமீர்கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் திரையரங்கு, ஓடிடி மற்றும் லோகேஷ் கனகராஜுடன் படம் என பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
ஆக்ஷன் படங்களை மட்டும் தான் தியேட்டரில் பார்க்க மக்கள் விரும்புவார்கள் சொல்லப்படும் சூழலில், Sitaare Zameen Par பெரிய வெற்றி அடைந்துள்ளது குறித்து கேட்கப்பட
"இது எனக்கு மறு உறுதியை கொடுக்கிறது. ஆக்ஷன் படமோ, திரில்லர் படமோ அதில் ஒரு நல்ல கதை இருக்க வேண்டும். தொழில்நுட்பம் வரும் போது மாற்றங்கள் வரும் தான். மாறாதது என்னவென்றால், மக்களுக்கு கதை மேல் உள்ள பிணைப்பு. அதுதான் இந்த வேலையின் அடித்தளம். மேலும் ஒரு படத்தை பார்வையாளர்கள் தியேட்டரில் பார்ப்பதா, ஓடிடியில் பார்ப்பதா என்ற முடிவு எடுப்பதில் சுதந்திரம் இருக்க வேண்டும். அனைவரும் படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என சட்டம் போட முடியாது. மக்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு பார்க்க வேண்டும். இதை நான் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உங்கள் படம் அவர்களுக்கு தூண்ட வேண்டும். எனவே என் படத்தை எங்கு பார்க்கிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலை இல்லை, பார்க்கிறார்களா என்பதே முக்கியம்" என்றார்.
உங்களது வாழ்க்கையை மாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முடிவு என்ன என்ற கேள்விக்கு
"என்னுடைய முதல் படம் (Qayamat Se Qayamat Tak) பெரிய ஹிட் ஆனதும், நான் பணியாற்ற வேண்டும் என ஆசைப்படும் இயக்குநர்களில் யாராவது என்னை அழைப்பார்கள் என நினைத்தேன். ஆனால் யாரும் வரவில்லை. ஆனாலும் வரிசையாக பல பட வாய்ப்புகள் வந்தன, ஒப்புக்கொண்டேன். நான் செய்த பெரிய தவறு அது. அதன் பிறகு வரிசையாக எனக்கு தோல்விகளே. One Film Wonder என என்னை அழைத்தனர். இனிமேல் எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் நடிக்க கூடாது என முடிவு செய்தேன். அப்போது இயக்குநர் மகேஷ் பட்டிடமிருந்து அழைப்பு. அவருடன் பணியாற்ற எனக்கு மிக விருப்பம், ஆனால் அவர் சொன்ன கதை எனக்கு பிடிக்கவில்லை. இந்தக் கதை எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறி படத்திலிருந்து வெளியேறினேன். தொடர் தோல்விக்கு மத்தியிலும், பெரிய இயக்குநருக்கு நான் தைரியமாக சொன்ன நோ தான், இப்போது தைரியமாக பல முடிவுகளை எடுக்க உதவுகிறது" என்றார்.
வருடத்திற்கு ஒரு படம் கொடுப்பேன் என கூறி இருந்தீர்கள், லோகேஷ் கனகராஜுன் படம் எந்த நிலையில் இருக்கிறது எனக் கேட்டதும்
"என்னுடைய நோக்கம் வருடத்திற்கு ஒரு படம் செய்வது. அதை நான் முயற்சிப்பேன். எனக்குப் பிடிக்காத ஒரு படத்தில் நான் நடிக்க மாட்டேன். கடந்த மாதம் நான் லோகேஷுடன் பேசிய போது, சீக்கிரம் நான் வந்து கதை சொல்கிறேன் என சொன்னார். அந்தப் படம் தான் இப்போது என் பட்டியலில் இருக்கிறது" என்றார்.

