
ரஜினிகாந்த் எழுதி, தயாரித்து, நடித்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி 1999ல் வெளியான படம் `படையப்பா'. இந்தப் படம் தற்போது ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ம் தேதி ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படம் பற்றி 15 சுவாரஸ்ய தகவல்கள் இதோ...
முத்து படத்திற்கு பிறகு `ஹாரா' என்ற கதையை கே எஸ் ரவிக்குமாரிடம் கூறி இருக்கிறார் ரஜினி. அதே சமயம் ஒரு பெண் பாத்திரத்தை அழுத்தமான வில்லியாக வைத்து வேறு ஒரு கதையையும் ரஜினி கூறி இருக்கிறார். இதில் பெண் வில்லி கதையை ரவிக்குமார் டெவலப் செய்ய, அந்தக் கதையை கேட்பதற்கு ரவிக்குமாரை அழைக்கிறார் ரஜினி. ரவிக்குமார் தயார் செய்த கதையை கேட்கும் முன்பு அங்கிருக்கும் மற்ற நண்பர்களுக்கு `ஹாரா' கதையை சொல்கிறார். அனைவரும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு பின் "இப்போ நீங்க டெவலப் பண்ண கதையை சொல்லுங்க" என்றிருக்கிறார். ரவிக்குமார் முழு கதையையும் சொல்ல, `ஹாரா' கேன்சல், இந்தக் கதையைதான் அடுத்து செய்கிறோம் என `படையப்பா'வுக்கு டிக் அடித்திருக்கிறார் ரஜினி.
இந்தப் படத்தின் முக்கிய பாத்திரம் நீலாம்பரி. அதில் ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் சொல்ல, அவரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயல்கின்றனர். ஆனால் கடைசி வரை எந்த பதிலும் சொல்லவில்லை ஐஸ்வர்யா ராய் தரப்பு. பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு விருப்பம் இல்லை என தெரியவர, அதன் பிறகுதான் ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்திருக்கிறார்கள்.
தந்தை பாத்திரத்தில் நடிக்க சிவாஜி கணேசன் பொருத்தமாக இருப்பார் என கூறியிருக்கிறார் ரஜினி. இது கம்மியான காட்சிகள் மட்டுமே சிவாஜிக்கு இருக்கிறது என்பதால் ரவிக்குமார் தயங்கி இருக்கிறார். ஆனாலும் கதையை கேட்டுவிட்டு சிவாஜி சம்மதித்திருக்கிறார். ஆனால் திரும்ப வந்த ரவிக்குமார் முகத்தில் பெரிய சந்தோசம் இல்லை. என்ன என ரஜினி கேட்க "அவர் பெரிய சம்பளம் கேட்கிறார் சார், 5, 6 நாட்களுக்கு இவ்வளோவா" என சொன்னார். உடனே ரஜினிகாந்த் "நாம தான் அவர்கிட்ட போய் கேட்டோம், இப்போ சம்பளத்துக்காக அவர வேண்டாம்னு சொன்னா, நம்ம விட கேவலம் யாருமே இருக்கமாட்டாங்க" என சொல்லி இருக்கிறார். அடுத்தநாளே மொத்த சம்பள பணத்தையும் சிவாஜி வீட்டுக்கு சென்று ஒரே பேமன்ட்டாக கொடுத்து ஆசி வாங்கி வந்திருக்கிறார்கள் ரஜினியும், ரவிக்குமாரும்.
படையப்பாவில் ரஜினியின் அறிமுக காட்சி கர்நாடகாவின் மேல் கோட்டை செல்லும் வழியில் எடுக்கப்பட்டது. அந்தக் காட்சிக்காக பாம்பு புற்று போல செட் போட்டோம். மறுநாள் வந்து பார்த்தால் உண்மையான புற்று என்று என நினைத்து ஊர்மக்கள் பூஜை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் இருந்த மஞ்சள் குங்குமம் அனைத்தும் ரியலாக வழிபட வந்தவர்கள் போட்டது. அதிலும் ஷுட் அன்று நாக தெய்வத்திற்கு உகந்த நாள் என்பதால், அவர்களின் வழிபாடு முடிந்த பின்னரே படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது.
இப்படத்தில் நீலாம்பரி பயன்படுத்தும் Toyota Sera கார் இன்று வரை யாராலும் மறக்க முடியாத ஒன்று. அது உண்மையில் இயக்குநர் ரவிக்குமாரின் கார். ரஜினியே பலமுறை விரும்பி இந்த காரை ரவிக்குமாரிடம் எடுத்து வர சொல்லி பயணிப்பாராம். அப்படி ஒரு நாள், இந்த காரையே நீலாம்பரி அறிமுக காட்சிக்கு பயன்படுத்தலாம் என ஐடியா கொடுக்க, றெக்கை வெச்ச காராக படையப்பாவின் அடையாளங்களில் ஒன்றாக இணைந்தது.
இந்தப் படத்தில் மறக்க முடியாத காமெடி காட்சிகளின் ஒன்று செந்திலுக்கு பெண் பார்க்க போகும் காட்சி. ரியல் லொகேஷனில் இதனை காட்சிப்படுத்த முடியாது, சிவாஜி கார்டன் போகலாம் என ரவிக்குமார் சொல்ல, இல்லை இங்குதான் எடுக்க வேண்டும் என அடம் பிடித்திருக்கிறார் செந்தில். சரி என 3 மணிக்கு துவங்கிய காட்சி 5 மணிக்கு முடிந்துவிட்டது.
ரஜினி படங்களில் எப்போதும் பன்ச் டயலாக்குகள் மிகப் பிரபலம். அதேபோல அவரது படத்தில் என்ன பன்ச் டயலாக் இருக்கிறது என்பதை பட வெளியீட்டுக்கு முன்பே வெளியிட பத்திரிகைகள் முயற்சிக்கும். எனவே படையப்பா பன்ச் எதுவும் கசியக்கூடாது என அந்த காட்சிகளின் போது டயலாக்கை சத்தம் இல்லாமல் ரஜினி வாயை மட்டும் அசைக்க, அதனை படம் பிடித்திருக்கிறார்கள். ரஜினி, ரவிக்குமார், ரமேஷ் கண்ணா ஆகிய மூவரை தவிர வேறு யாருக்கும் அந்த டயலாக் தெரியாது.
இந்தப் படத்தில் வரும் மின்சாரப் பூவே பாடலின் track versionஐ ஸ்ரீனிவாஸ் பாடி இருந்தார். படத்திற்கு ஹரிஹரன் குரலை பதிவு செய்திருக்கிறார் ரஹ்மான். ஆனால் இந்தப் பாடலை ஸ்ரீனிவாஸ்க்கு கொடுங்கள், நித்ய ஸ்ரீ குரலுக்கு ஸ்ரீனிவாஸ் எதிர்க்குரலாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என கூறி இருக்கிறார் ரஜினி.
படையப்பாவின் ஐகானிக் ஊஞ்சல் சீன். அதற்கு இன்ஷ்பிரேஷன் ராமாயணத்தில் அனுமன் தன் வாலையே இருக்கையாக பயன்படுத்தி உயரமாக அமர்வது தான். முதலில் அங்கு ஓரமாக இருக்கும் உயரமான நாற்காலியை ரஜினி சால்வையால் இழுத்து ரம்யா கிருஷ்ணனை விட உயரமாக அமர்வார் என்பதுதான் திட்டம். பின்பு ரவிக்குமார் அங்கு இருந்த ஊஞ்சலை பார்த்ததும், அந்தக் காட்சி நாம் பார்ப்பது போல் மாஸாக அமைந்திருக்கிறது.
இப்படத்தின் முழு பின்னணி இசையும் நிறைவடைந்துவிட்டது, ஆனால் ஊஞ்சல் காட்சிக்கு மட்டும் ரெக்கார்டிங் செய்யவில்லை. இந்தப் படத்தில் ரஹ்மானிடம் கீ போர்ட் பிளேயராக இருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். அவருடன் ரவிக்குமார் அமர்ந்து, படத்தின் மற்ற பின்னணி இசை இதில் பொருந்துகிறதா என வைத்து பார்த்திருக்கிறார். படையப்பா படத்தின் டைட்டில் தீம் மியூசிகை இந்த இடத்தில் வைத்து பார்த்தால் பக்காவாக பொருந்தி இருக்கிறது. ரஹ்மானும் இதை பார்த்துவிட்டு, `சூப்பரா இருக்கு, ரெக்கார்டிங் முடிஞ்சிடுச்சு' என சொல்லி இருக்கிறார்.
முதலில் இந்தப் படத்தின் க்ளைமாக்சில் நீலாம்பரி மனம் வருந்தி படையப்பாவிடம் மன்னிப்பு கேட்பது போல காட்சி எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த காட்சி ரஜினிக்கு பிடிக்கவில்லை. நீலாம்பரி என்றால் கெத்தாக இருக்க வேண்டும் என சொல்லி, இப்போது இருக்கும் க்ளைமாக்ஸை சொல்லி இருக்கிறார். க்ளைமாக்ஸ் நீலாம்பரி மேல் முடிந்தால் சரி வராது என ரவிக்குமார் தயங்குகிறார். உடனே, நீங்கள் இதை யாரிடமும் சொல்லாதீர்கள். ரம்யா கிருஷ்ணனிடம் மட்டும் சொல்லிவிட்டு எடுங்கள், பிறகு மற்றவர்களது ரியாக்ஷனை பாருங்கள் என ரஜினி சொல்ல, எடுத்து முடித்ததும் ஒரு நிமிடத்திற்கு பின் மொத்த செட்டும் கை தட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இது நன்றாக இருந்தாலும், மன்னிப்பு கேட்கும் க்ளைமாக்ஸ் ஒன்றை எடுக்கலாம் என ரவிக்குமார் சொல்ல, வேண்டவே வேண்டாம் என உறுதியான நின்றிருக்கிறார் ரஜினி.
படையப்பா வெளியீட்டுக்கு இரண்டு - மூன்று வாரங்களுக்கு முன்பு படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பனை அழைத்திருக்கிறார் ரஜினி. படத்தில் வேலை செய்த அத்தனை நபர்களின் பட்டியலை அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரத்துடன் எடுத்து வர சொல்லி இருக்கிறார். ஏற்கெனவே எல்லோருக்கும் சம்பளம் செட்டில் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் படத்தை சொன்ன பட்ஜெட்டில் இருந்து குறைவான செலவிலேயே எடுத்து கொடுத்தீர்கள். படமும் எனக்கு நல்ல லாபம். எனவே மீதமிருக்கும் தொகையை அனைவருக்கும் பிரித்து கொடுத்துவிடுங்கள், அதுவும் இன்று இரவுக்குள் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் ரஜினி. அனைவருக்கும் சம்பளத்தை விட கூடுதல் மடங்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது படக்குழு அனைவருக்கும்.
படையப்பா படம் எடுத்து முடிக்கையில் 19.5 ரீல். ஒரு ரீல் 1000 அடி, எனவே 19500 அடி. வழக்கமாக 14000 அடிதான் இருக்க வேண்டும். இங்கு கிட்டத்தட்ட 4 மணி நேர படம். ரஜினி அதை அப்படியே இரண்டு இடைவேளை விட்டு வெளியிடலாம் என சொல்லி இருக்கிறார். ஆனால் கமல்ஹாசன் அது சரி வராது என யோசனை சொல்ல பின்பு 14 ரீலாக குறைத்திருக்கிறார் ரவிக்குமார். அந்த டெலீட்டட் காட்சிகள் அத்தனையும் எடைக்கு போட்டிருக்கிறார்கள். அட அப்பாவி `படையப்பா' டீம், அதோட வேல்யூ தெரியுமா?
ரஜினி ஒரு பேட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்து பேசிய சமயம் அது. அதற்கு பிறகுதான் படையப்பா தயாராகிறது. இதில் வரும் நீலாம்பரி பாத்திரம், ஜெயலலிதாவை மையமாக வைத்துதான் உருவாகிறது என பல புரளிகள் அந்த சமயத்தில் கிளம்பின. படையப்பா வெளியான பிறகு அதனை பார்க்க வேண்டும் என ஜெயலலிதா விரும்ப, படத்தின் ரீலை போயஸ் கார்டனுக்கு அனுப்பி இருக்கிறார் ரஜினி. படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாய் சொன்னார் என தகவல்.
`படையப்பா'வை மறுபிறவி எடுத்து வந்தாவது பழிவாங்குவேன் என கூறிய நீலாம்பரி பாத்திரத்தை மையமாக வைத்து, படையப்பாவின் இரண்டாம் பாகம் எடுக்கும் யோசனையில் இருக்கிறாராம் ரஜினி. படத்தின் பெயர் நீலாம்பரி.