“மேக்கப், கெட்டப் உதவியில்லாமலேயே ஆகச் சிறந்த நடிப்பை கொடுத்தவர் ரஜினிகாந்த்” - அஜயன் பாலா
ரஜினிகாந்த் தனது 75வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், 50 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு செய்துள்ளார். அஜயன் பாலா, ரஜினியின் நடிப்பு திறனை மேக்கப், கெட்டப் இல்லாமல் வெளிப்படுத்தியவர் என பாராட்டுகிறார். கமர்ஷியல் படங்களில் ரஜினியின் ஸ்டைல் பேசப்பட்டாலும், அவரது நடிப்பு திறன் அதிகம் பேசப்படவில்லை என்ற ஆதங்கம் பலருக்கும் உள்ளது.
75ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த், சினிமா வாழ்க்கையிலும் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். முள்ளும் மலரும், தளபதி, ஆறிலிருந்து அறுபது வரை என பல படங்களில் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தாலும் கமல்ஹாசனைப் போல் நடிப்பு புகழை ரஜினி பெற்றதில்லை.
கமர்ஷியல் படங்கள் எனும் சட்டகத்திற்குள் ரஜினியின் ஸ்டைல் பேசப்பட்ட அளவிற்கு நடிப்பு திறன் பேசப்படவில்லையோ என்ற ஆதங்கம் பலருக்கும் உண்டு. அப்படியான ஒரு ஆதங்கத்தை தான் நம்முடன் பகிர்ந்து கொண்டார் இயக்குநரும், எழுத்தாளருமான அஜயன் பாலா.
நடிப்பின் உண்மையான அர்த்தங்களை சொல்லி அதில் ரஜினி எப்படி சிறப்பாக இருந்தார் என்பதை வியந்து பேசினார் அஜயன் பாலா. நம்முடனான உரையாடலில் அவர் பகிர்ந்த விஷயங்களை பார்க்கலாம்.
ரஜினியின் சினிமா வரவு அன்றைய 1970-களில் எப்படி நிகழ்ந்தது?
1970 காலகட்டத்தில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்னைகள் நிலவிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு ’ஆங்கிரி யங் மேன் கல்ட்’ கதாபாத்திரங்கள் சினிமாவில் உருவானது. அன்றைய காலகட்டத்தில் மக்களின் பிரச்னைகளை சொல்லும் குரலாக கதாபாத்திரங்கள் உருவாகும் தேவையிருந்தது. இந்தியில் அப்படித்தான் அமிதாப் பச்சன் உருவானார். அதற்கு 20 வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட்டில் மர்லன் பிராண்டோ உருவானார். அப்படித்தான் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் உருவானர். சமூகத்தில் ரஜினி போன்ற ஒரு நபர் கதாநாயகன் ஆவதற்கான தேவை அன்றைக்கு இருந்தது.
அதற்கு முன்னாடி இருந்தவர்கள் அதிதமான டிராமா செய்தார்கள். குருவிக்கூடு போன்ற தலை, கலர் கலர் ஆடைகள் அப்படி இருந்தார்கள். கலர் சினிமாக்களுக்கு ஏற்ற மேக்கப் போட்டிருந்தார்கள். அன்றைக்கு இருந்த முன்னணி நட்சத்திரங்கள் அதிக வயதுடையவர்களாக இருந்தார்கள். அப்பொழுது ஒரு மாற்று கதாநாயகனின் தேவை இருந்தது. அப்படித்தான் ரஜினி உள்ளே வந்தார்.
கலைந்த தலை, மேலாடை இல்லாத தோற்றம் போன்ற அம்சங்கள் முந்தைய மரபுகளை உடைக்கக் கூடியதாக இருந்தது. சரியான எம்.ஜி.ஆர் காலம் முடியும்போது ரஜினியின் சகாப்தம் தொடங்கிவிடுகிறது. மக்களுக்கு குரல் கொடுக்கும் இளைஞர் கதாபாத்திரங்களுடன் அன்றைக்கு படங்கள் வந்தது. ரஜினிகாந்த், விஜயகாந்த் அதில் சரியாக பொருந்திப் போனார்கள். கோபக்கார இளைஞனாக சரியாக தங்களை வெளிப்படுத்தினார்கள். மக்களுக்கு நெருக்கமாக சென்று சேர்ந்தார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அன்றைக்கு இருந்த சமூகத்தின் தேவைக்கும் அதனை சரியாக வெளிப்படுத்துவதற்கு ரஜினி பொருத்தமாக இருந்தார்.
மகேந்திரன், மணிரத்னம் போல் மற்ற இயக்குநர்களால் ரஜினியின் இயல்பான நடிப்பை வெளிக் கொண்டு வரமுடியவில்லையா?
அப்படி சொல்ல முடியாது. சமுகத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் வழியாகத்தான் புரிந்து கொள்ள முடியும். மக்களின் ரசனை மாறிவிட்டது. யதார்த்த சினிமாவின் காலம் முடிந்து மசாலா படங்களின் மீது ஈர்ப்புவந்தது. 1975-ல் உருவான யதார்த்த சினிமாவின் காலம் முடிவுக்குவந்தது. பின்னர் அடுத்த ட்ரெண்ட் உருவானது. டிஸ்கோ போன்றவற்றின் தாக்கம் வருகிறது. யதார்த்த சினிமாவில் இருந்து மாறி மக்கள் கொண்டாட்ட சினிமாக்களை விரும்பினார்கள்.
யதார்த்த படங்களின் நாயகன் என்பதில் இருந்து மசாலா படங்களின் நாயகன் ஆகிறார் ரஜினி. இத்தனை பாட்டு, சண்டைகள் என்ற இலக்கணம் உருவாகிறது. ரஜினியும் அந்த மசாலா படங்களுக்கு ஏற்ப மாறிப்போகிறார். ஏனெனில், பிற்காலத்தில் பாரதிராஜா, பாலுமகேந்திரா எடுத்த படங்கள் கூட சரியாக போகவில்லை. ஏனெனில் அந்த ட்ரெண்ட் போய்விட்டது.
ரஜினி, கமல் ஒப்பீடு இன்றளவும் இருந்து வருகிறதே? நடிப்பில் கமலுக்கு இருக்கும் பெயர் ரஜினிக்கு கிடைப்பதில்லையே?
நடிப்பு என்பது இங்கு தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. நடிப்பு என்பது குறிப்பிட்ட கதாபாத்திரமாக மாறுவது என்பதுதான். கமல் இந்தியாவின் ஆகச்சிறந்த நடிகர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக தன்னை பொருத்தி அசத்திவிடுவார். இருப்பினும், கமலின் கதாபாத்திரங்களில் கூடுதலாக உதவி செய்வது மேக்கப்பும், அவரது கெட்டப்பும். அவர் சிறந்த நடிப்பை கொடுத்த பெரும்பாலான படங்களில் அவருடைய பாத்திரத்தை நம்மை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு அது கூடுதலாக உதவுகிறது. அபூர்வ சகோதரகள் அப்பு, தேவர் மகன், குணா, அவ்வை சண்முகி போன்ற படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பாத்திரப் படைப்பை தாண்டி பாத்திர வார்ப்பு தான் அதிகமாக இருக்கும். அதாவது நடிப்பில் கமல் உச்சம் தொட்டுவிடுவார் ஆனாலும் கூடுதலாக அந்த கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்க கூடுதல் காரணங்கள் இருக்கச் செய்தன.
நடிப்பு என்பது ஒருவன் தன்னுடைய உருவத்தில் இருந்து அந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்த வேண்டும். அதுதான் ஒரு நடிகனின் திறமை. நடிப்பு என்பது தன்னை வேறொரு கதாபாத்திரமாக நம்மை நம்ப வைப்பது. அதை அற்புதமாக செய்யக் கூடியவர் ரஜினி. ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் நடித்த நிறைய படங்கள் மசாலா படங்களாக ஆகிவிட்டது.
அண்ணாமலையின் வசனத்தை வேறு எந்தவொரு நடிகரால் பேச முடியுமா?. மற்ற சிறந்த நடிகர்களை யோசித்து பாருங்கள். அந்த கோபத்தை, எமோஷனலை ரஜினி எப்படி வெளிப்படுத்தி இருப்பார். அடித்தட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாத்திரங்கள் வேறு யாருக்கும் பொருந்தவில்லை. விஜயகாந்த், ரஜினிகாந்திற்கு மட்டும்தான் பொருந்தியது. அவர்களுடைய தோற்றமும், குறிப்பாக நிறமும் ஒரு காரணமாக இருந்தது. அவர்கள் கல்ட் ஹீரோவாக ஆகிறார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில் நீங்கள் வியந்த இடங்களை சொல்ல முடியுமா?
ஒரு கதாபாத்திரத்தை எந்தவொரு பூச்சும் இல்லாமல் ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது இருக்கிறதல்லவா, அதை ரஜினிகாந்த் செய்தார். பாட்ஷா படத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நண்பனை இழந்த தருணத்தில் அதற்கான பழிவாங்கல் உணர்வுகளை ரஜினி சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். ரஜினியின் நடிப்பே பாட்ஷா வெற்றிக்கு முக்கிய காரணம். வேறு எந்த நடிகராலும் பாட்ஷா கதாபாத்திரத்தை ஈடு செய்ய முடியாது. தன் நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை எளிதில் ரஜினி நடிக்க வைக்கிறார். அதுதான் நடிப்பு. யதார்த்தமான படங்கள் அவருக்கு கிடைத்தது கம்மியாகிவிட்டது. அதற்கான சூழலை அவருடைய நட்சத்திர அந்தஸ்து கொடுக்கவில்லை.
அவர் சிறந்த நடிகராக இருப்பதால் தான் சூப்பர்ஸ்டாராக இருக்க முடிகிறது. ரஜினி ஒரு திறமைவாய்ந்த் நடிகர். இயக்குநரை பொறுத்து, கதையை பொறுத்தே சிறந்த நடிப்பு அமையும். கமர்ஷியல் படங்களில் பெரிய அளவில் ரஜினியால் செய்துவிட முடியாது. ஆனாலும், வழக்கமான எல்லா கதாபாத்திரங்களிலும் அவர் சிறப்பாகவே வெளிப்படுத்தினார்.
மன்னன் படத்தில் முதல் பாடலே அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடல். அதில் தாய்க்கு பணிவிடை செய்வதுபோன்ற காட்சிகள் வரும். அதை அவ்வளவு இயல்பாக செய்திருப்பார் ரஜினி. அவர் முகத்திலேயே கருணையும், தவிப்பும் இருக்கும். ஒரு சில நடிகர்களால் மட்டும்தான் அதனை கொண்டுவர முடியும். உள்ளுணர்வு இருக்க வேண்டும். நடிப்பில் அந்த ஆழம் இருக்க வேண்டும். இல்லையென்றால் சரியாக கொண்டுவர முடியாது. அதெல்லாம்தான் சூப்பர் ஸ்டார் ஆக்குகிறது. ரஜினி சரியாக நடிக்கவில்லை என்றால் அந்தக் காட்சிகள் எல்லாம் ஸ்கீரினில் எடுபட்டிருக்காது. வெறும்பாட்டு மட்டுமல்ல, ரஜினியின் நடிப்பும்தான் அந்தக் காட்சிகள் உயிர்பெற காரணம்.
ரஜினியால் எப்படி இன்றளவும் அந்த இடத்தில் தாக்குப்பிடிக்க முடிகிறது? அவர் கேரியர் இன்னும் எப்படி அமைந்திருக்கலாம்?
அவர் சிறந்த நடிகர். அதுதான் காரணம். அவர் ஒரு எண்டர்டெய்னர் ஆக மாறிவிட்டார். நிறைய மசாலா படங்கள் நடிக்கிறார். அது அவர் செய்த மிகப்பெரிய தவறு. ஆனால், அவ்வவ்பொழுது சிறந்த கதாபாத்திரங்களை கொண்ட படங்களில் நடிக்க வேண்டும். மகேந்திரன் படங்களில் நடித்ததுபோல் நடிக்க வேண்டும். தான் சிறந்த நடிகர் என்பது அவருக்கே தெரியவில்லையா என்பதுபோல் போய்விடுகிறது. அமீர்கான் பண்ணுவதுபோல் சின்னப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் அவர் நடிக்க வேண்டும். மார்க்கெட் அவரது நடிப்பை தீர்மானித்ததுதான் சோகம்.

