ரசிகருக்கு பணம் கொடுத்து எம்.ஜி.ஆர் சொன்ன விஷயம்! - கார்த்தி பகிர்ந்த 'வாத்தியார்' சம்பவம் | Karthi
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள `வா வாத்தியார்' டிசம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
"அவர்கள் எல்லோரும் இந்தப் படத்திற்காக காத்திருக்கிறார்கள்"
இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசிய போது "நலன் சொன்னது போலத் தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் என ஒரு படம் செய்து விட்டு, கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து மீண்டும் தர்மமே வெல்லும் எனப் படம் செய்துள்ளார். நல்லதை மீண்டும் சேர்த்ததற்கு நன்றி நலன். எல்லோருக்கும் சில இயக்குநர்களை பிடிக்கும், ஆனால் எல்லா இயக்குநர்களுக்கும் பிடித்த ஒரு ஆள் என்றால் நலன். எந்த செட்டுக்கு சென்றாலும் நலன் உடன் படம் செய்கிறீர்களா என ஆவலாகக் கேட்பார்கள். அவ்வளவு ரசிகர்கள் உங்களுக்கு உண்டு நலன். இவ்வளவு நாள் காயப்போட்டது ரொம்ப தப்பு, அவர்கள் எல்லோரும் இந்தப் படத்திற்காக காத்திருக்கிறார்கள்.
நலன் ஒரு தக் லைஃப்
நலன் தக் லைஃப் ஆகவே வாழும் ஒரு நபர், அவர் எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்து விடுகிறார். அவரிடம் எல்லாவற்றுக்கும் வேறு ஒரு சித்தாந்தம் இருக்கும். `சூது கவ்வும்' படத்தில் `இந்த வேலைய செய்யறதுக்கு ஒரு குருட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேணும்' என வசனம் வைத்திருப்பார். நலன் படம் செய்வதற்கும் அது தேவை. அவர் சொல்லும் யோசனைகளை புரிந்து கொள்ளவே கொஞ்ச நேரம் ஆகும். புரிந்து கொண்டால் கூட நம்மால் அதை கற்பனை கூட செய்ய முடியாது. எனக்கு `ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் அது போல ஒரு அனுபவம் இருந்தது. செல்வராகவன் எழுதியதை படித்து நடிக்கலாம் என்றால் அது முடியாது. அவர் வந்து சொன்னால் தான் புரியும். அப்படி நலனின் கற்பனை எல்லாம் வேறு ஒரு தளத்தில் இருக்கும். அவருடன் பணியாற்றியது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
கமர்ஷியல் படங்களுக்கான அர்ப்பணிப்பு
சூதுகவ்வும் படம் செய்துவிட்டு ஜாலியாக குழந்தை கடத்தல், அரசியல்வாதியைக் கடத்துவது போல ஒரு கதை சொல்வார் என நினைத்தால் வா வாத்தியார் கதை சொன்னார். கதையை கேட்டுவிட்டு மிகவும் ஆசையாக இருந்தது, ஆனால் இது எப்படி நம்மால் செய்ய முடியும் என பயமாக இருந்தது. அப்போது தன்னம்பிக்கை வீடியோ ஒன்று பார்த்தேன். நாம் எதை பார்த்து மிகவும் பயப்படுகிறோமோ, அதை எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் வளர்வோம். இது ஒரு வாழ்க்கை தான். திரும்ப திரும்ப தோற்றுக்கொண்டே இருக்க முடியாதது. எவ்வளவு ஜெயித்தாலும் நாம் தோற்றதைப் பற்றித்தான் பேசுவார்கள் அதனால் துணிந்து செய்து விட வேண்டும் என ஒத்துக்கொண்டேன்.
நலன் சொன்னது போல 70, 80களின் தமிழ் சினிமாவுக்கு என ஒரு அடையாளம் இருக்கிறது. தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படங்களுக்கு அர்ப்பணிப்பாக இப்படத்தைச் செய்துள்ளார். 90 கிட்ஸ் சொல்வது போல நலன் யாருனு இந்தப்படம் வந்த பிறகு தெரியும். தெலுங்கில் பெரிய படங்களும் மலையாளத்தில் வித்தியாசமான படங்களும் செய்கிறார்கள். அது போல தமிழில் என்ன செய்கிறோம், பயந்து பயந்து ஒரே விஷயத்தை செய்தால் எதுவும் செய்ய முடியாது. எனவே இது போன்ற இயக்குநர்கள் நமக்கு தேவை.
எம் ஜி ஆரை பார்க்க காத்திருந்த ரசிகர்
இந்தப் படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது. அவர் தன் ஆளுமையை மக்கள் மத்தியில் நல்ல விதமாகக் கொண்டு சேர்த்தவர். இன்றும் பலரது வீட்டில் அவரின் புகைப்படங்கள் இருக்கும். அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல, ஒரு உணர்வு, ஒரு சகாப்தம். அவர் தமிழ் சினிமாவை, அரசியலை மாற்றி இருக்கிறார். இன்று நல்லது சொன்னால் க்ரிஞ் என சொல்கிறார்கள். ஆனால் அவர் எப்போதும் நல்லதை மட்டுமே சொல்லி இருக்கிறார். அவர் ரசிகர்கள் தம்மடிக்க மாட்டார்கள், தண்ணியடிக்க மாட்டார்கள். எப்படி அவர் இவ்வளவு தாக்கத்தோடு இருந்தார் என ஆச்சர்யமாக இருக்கிறது. பாடல்கள் மூலமாக பல கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.
அவர் ஒரு பாட்டில் “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என அவருடைய வாழ்க்கையை அவரே பாடி வைத்து விட்டு போய் விட்டார். அதற்கு முத்தாய்ப்பாக சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அவருடைய பெயரை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 5000 முறை புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் என அவர் பேர் சொல்கிறார்கள். இன்றும் அவர் பற்றி பேசுகிறோம். அவரை கொண்டு வந்து சேர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. மிகவும் பக்தியுடன் அவர் பாத்திரத்தில் நடித்தேன். இந்தப் படத்தின் மூலம் எம் ஜி ஆருக்கும் அவரது ரசிகர்களுக்கும் என்ன உறவு இருந்தது என நீங்கள் புரிந்து கொண்டால், அதுவே எங்கள் வெற்றி.
எம் ஜி ஆர் பற்றிய கதைகள் ஏராளம். அதில் ஒன்று சொல்கிறேன், அவரது கான்வாய் ராதாகிருஷ்ணன் ரோட்டில் செல்லுமாம். அப்போது கால் இல்லாத ஒருவர் அவர் செல்வதை தினமும் பார்ப்பாராம். `தினமும் வந்து பார்க்கிறாயே அவர் உன்னை பார்க்கவா போகிறார்?' என அவரிடம் கேட்கப்பட, `கோவிலுக்கு நாம் போகிறோம் சாமி நம்மை பார்க்கவா போகிறோம்? நாம் தான் சாமியை பார்க்க போகிறோம். அவர் எனக்கு சாமி' என்று சொன்னாராம். இப்படியே அவர் பார்த்து கொண்டே இருந்திருக்கிறார். ஒரு நாள் அந்த கார் நின்றிருக்கிறது, கையில் பணத்தை கொடுத்து, `ஏதாவது கடை வைத்து பிழைத்துக் கொள், பிடி, சிகரெட் விற்கக் கூடாது' என்று சொன்னாராம். இப்படி பல சம்பவங்கள் அவர் பற்றி இருக்கிறது" என்றார்.

