`Animal' படமும் வேண்டும் `Girlfriend' படமும் வேண்டும் - ராஷ்மிகா மந்தனா | Rashmika Mandanna
நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் முக்கியமான சில விஷயங்கள் கீழே,
இந்த ஆண்டு ராஷ்மிகா நடிப்பில் 5 படங்கள் வெளியானது குறித்து கேட்கப்பட்ட போது "இது அற்புதமான ஆண்டாக இருந்தது. இந்தாண்டு 5 படங்கள் வெளியானது எதிர்பாராத ஒன்று. சில திட்டமிடப்பட்டது, சில தானாக நடந்தது. ஆனால் அனைத்து படங்களும் மிகச் சிறந்தவை, அதற்கு நான் நன்றியோடு இருக்கிறேன்" என்றார்.
வேலை நேரத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையும் கையாள்வது பற்றி கேட்கப்பட "வீட்டிற்கு வந்த பின் வேலை பற்றி பேசமாட்டேன். எனக்கு ஏதாவது உதவியோ, ஆலோசனையோ தேவைப்பட்டால் அப்போது மட்டும் பேசுவேன். 24 மணிநேரமும் வேலை செய்ய முடியாது, ஏனென்றால் வேலையை பற்றி பேசுவதும் வேலைதான். நான் என் பணியின் போது எனது 100 சதவீதத்தை கொடுக்கிறேன். அதுவே வீட்டில் இருக்கையில் 100 சதவீதம் வீட்டில் மட்டுமே எனது கவனம் இருக்கும். நடிகர்கள் எனும் போது கண்டிப்பாக ஒப்பந்தம் பற்றியோ, அனுமதி கொடுக்கவோ என உங்களை சுற்றி வேலைகள் இருக்கும் தான். ஆனால் என்னுடைய பெற்றோருடனோ குடும்பத்தில் மற்றவர்களுடனோ பேசும் போது வேலையை பற்றி பேசமாட்டேன். நான் என் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது மிகவும் ஆதிக்கத்துடன் இருக்கிறேன். எனவே வீட்டில் மற்றவர்கள் அவர்களின் வேலை பற்றி பேசும்போது கூட நான் பேசக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். இதனை நீங்கள் பிரிக்கவில்லை என்றால், வேலை பற்றி பேச தூண்டப்படுவீர்கள். அட எனக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது என்ற எண்ணம் வரும். பின்பு எப்படி நீங்கள் உங்களுக்கான நேரத்தை கண்டடைவீர்கள்? வேலை பற்றிய பேச்சுக்களை ஒழுங்குபடுத்தவில்லை என்றால், வேலை உங்களை விழுங்கிவிடும். அது ஆரோக்யமானதல்ல.
நான் எல்லாவற்றையும் திட்டமிடுகிறேன். மாதத்தில் 20 நாட்கள் பணியாற்ற வேண்டும். வார ஓரிரு நாட்கள் அல்லது வார இறுதியில் விடுப்புகளை எடுத்துக் கொள்வேன் என திட்டமிடுவேன். ஆனாலும் ஒரு படம் தள்ளிப்போகும், ஒரு படப்பிடிப்பு சொன்னதை விட சீக்கிரம் வரும், ஒத்திகைகள் செய்ய வேண்டி இருக்கும், அப்படியான சூழலில் டபுள் ஷிஃப்ட் செய்ய வேண்டி வரும். நான் இதனை சிறப்பாக திட்டமிட்டேன், ஆனாலும் எப்படி தவறியது என நான் யோசிப்பேன். இப்போதுவரை என் திட்டமிடல் சரியாக வந்ததில்லை தான். கடைசியாக எப்போது ஞாயிறு விடுமுறை எடுத்தேன் எனத் தெரியவில்லை. தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் இதனை மற்றவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன். எனவே இதை மற்றவர்களுக்கும் எனக்கும் சொல்லிக் கொள்கிறேன் `அனைத்தையும் திட்டமிடுங்கள்'. பல நாட்கள் எனக்கு தூங்க நேரமே கிடைப்பதில்லை. படப்பிடிப்பில் எவ்வளவு நேரம் என்றாலும் நான் சுறுசுறுப்பாக இருப்பேன், வீட்டுக்கு சென்றதும் சில மணிநேரங்கள் கிடைக்கும் ஓய்வை முழுதாக எடுத்துக் கொள்வேன். முடிந்தவரை 4 - 5 மணிநேரங்கள் தூங்குகிறேன். அதுவே போதுமானதல்ல, அதனால் எனக்கு உடல்நல கோளாறுகளும் ஏற்படுகிறது. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் பொறுப்பு நான் தான். இவ்வளவு பணிகளையும் ஒப்புக் கொண்டது நான் தான். அதனை எப்படி சுலபமாக செய்ய முடியம் என்பதை நோக்கி செல்கிறேன்.
நான் இந்த காலகட்டத்தில் சில விஷயங்களை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. நான் வந்த புதிதில் பெரிய படங்களில் இவர் ஒரு பாகமாக இருப்பார் அவ்வளவு தான் எனக் கூறினார்கள். அந்த சூழலில் The Girlfriend படத்தில் பூமா பாத்திரத்தில் நடிக்கும் போது, எனக்குள் ஒரு அமைதி ஏற்படுகிறது. எனவே ஒரு ஹீரோயின் என்பதை தாண்டி நடிகையாக என்னால் நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது. இனிமேல் எண்ணிக்கையை விட, தரத்திற்கு முன்னுரிமை கொடுக்க நினைக்கிறேன். வருடத்திற்கு 4,5 படங்கள் என்பதை குறைத்து 2 படங்கள் நடிக்கலாம் என்ற இடத்திற்கு வந்திருக்கிறேன்" என்றார்.
`அனிமல்' படம் நிறையவே விமர்சனத்திற்கு உள்ளானது ,`கேர்ள்ஃபிரெண்ட்' படம் பாராட்டுகளை பெற்றது, இவ்விரு படங்களிலும் நடித்தது குறித்து கேட்டகப்பட "அது படத்திற்கு படம் மாறக்கூடியது என இப்போது உணர்கிறேன். இந்த விஷயத்தில் எனக்கு எந்த வரையறைகளையும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அனிமல் படம் நிறைய கீழ்மைகள் உள்ள ஒரு மனிதனை பற்றிய கமர்ஷியல் படம். அதுவே கேர்ள்ஃபிரெண்ட் படம் பூமா என்ற பெண் தனக்குள்ளே நடக்கும் அக மோதல்களை எதிர்கொள்வது பற்றியும், அதே நேரத்தில் மோசமான ஒரு ரிலேஷன்ஷிப்பிலும் இருப்பது பற்றி பேசுகிறது. நான் இவ்விரண்டையும் செய்ய விரும்புறேன். இது கதை சொல்லல். என் மனதிலிருந்து உங்களுக்கு இதனை சொல்ல விரும்புகிறேன். நான் எப்போதும் உறுதியான பெண் பாத்திரங்களை செய்ய விரும்புகிறேன். அனிமல், கேர்ள்ஃபிரெண்ட் வெவ்வேறு கதை சொல்லல்கள் மற்றும் சமூக கருத்துக்களை சொல்கிறது" என்றார்.
சரி உங்களது திருமணம் பற்றிய தகவல்களை சம்மதிக்கிறீர்களா? மறுக்கிறீர்களா? என்றதும் "நான் இரண்டையும் செய்யப்போவதில்லை. சரியான நேரம் வரும் போது உங்களுக்கு தெரியவரும்" என்றார் ராஷ்மிகா.

