"அவன பாத்தாலே எரிச்சல் வரும், அடிக்கணும்னு தோணும்" - கார்த்திக் சுப்புராஜ் | 29 | Karthik Subbaraj
`மேயாதமான்', `ஆடை', `குலுகுலு' படங்களுக்கு பிறகு ரத்னகுமார் இயக்கும் படம் `29'. விது, ப்ரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனாஷ், பிரேம்குமார் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய கார்த்திக் சுப்புராஜ் " `29' எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான படம். `மேயாத மான்' தான் ஸ்டோன் பென்ச்-ன் முதல் படம். நிறைய படங்கள் செய்திவிட்டாலும், முதல் அனுபவமாக `மேயாத மான்' மறக்க முடியாதது. ரத்னாவும் எங்களுக்கு முக்கியமான நபர். வெளியில் சில நேரம் அவர் பேசுவது பிடிக்காது, ஆனால் நம்ம வீட்டு பையன் தப்பு செய்தால் கூப்பிட்டு கண்டிப்பதை போல, `இதில் கவனமாக இருங்கள்' என சொல்வேன். இந்தக் கதையை அவர் பல வருடம் முன்பே கூறினார். தனுஷ் சாரிடம் அழைத்து சென்று கதை சொல்ல வைத்தோம். அவருக்கு கதை பிடித்திருந்தாலும், ஆக்ஷன் படங்கள் தொடர்ச்சியாக செய்யும் போது இதை நடித்தால் சரியாக இருக்காது என கூறி இளம் நடிகர் யாரையாவது நடிக்க வையுங்கள் என்றார்.
இதன் முதன்மை நடிகர்கள் மிக முக்கியம் என்பதால் அவர்களை கண்டுபிடிக்க பல காலம் தேவைப்பட்டது. விதுவை ஆடிஷன் செய்து அவன் தான் நடிக்க போகிறான் என சொன்னார்கள். டபுள் எக்ஸ், ரெட்ரோ படத்துக்கு முன் சொல்லி இருந்தால் நான் சம்மதித்திருக்க மாட்டேன். சிறுவயதில் இருந்தே அவனை தெரியும். சில பசங்களை பார்த்தாலே எரிச்சல் வரும், அடிக்க வேண்டும் என தோன்றும். அந்த மாதிரி பையன் அவன்.
அவனை பல வருடம் கழித்து பார்த்த போது நடிக்க போகிறேன் என சொன்னான். `உனக்கு இது தேவை இல்லாத வேலை' என கூறினேன். ஆனாலும் பயிற்சி எடுத்து `பேட்ட'யில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தான். ரஜினி சார் இவனை கிள்ளுவது போல ஒரு காட்சி. அதை எடுத்து முடித்தால் பேக் அப். அதில் மூன்று டேக் வாங்கினான். பிறகு நீ படித்த படிப்புக்கு வேலையை தேடு என சொன்னேன். ஆனாலும் விடாப்பிடியாக இருந்தான். `டபுள் எக்ஸ்' படத்திற்காக அவனை ஆடிஷன் செய்த போது நானே ஆச்சர்யப்பட்டேன். அவ்வளவு சிறப்பாக நடித்தான். இந்தப் படத்தை லோகேஷின் ஜி ஸ்குவாட் உடன் இணைந்து தயாரிப்பதில் மகிழ்ச்சி" என்றார்.

