vadivelu
vadivelu imsai Arasan
இலக்கியம்

இளையோர் மொழிக்களம் | வடிவேல் என்றால் நகைச்சுவை மட்டுந்தானா ?

மகுடேசுவரன்

“பெயரில் என்ன இருக்கிறது, அது அழைப்பதற்குப் பயன்படுவது, கூட்டத்தில் ஒருவரை வேறுபடுத்தி அடையாளப்படுத்த உதவுவது, அது வெறும்பெயர்தானே...!” என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். முதலிலேயே சொன்னதுபோல் பெயர் என்பது வெறும்பெயர் இல்லை. பெயர்ச்சொல் என்பதுதான் முழுவடிவம். முதன்மையாய் அஃது ஒரு மொழியின் சொல். அம்மொழியின் தலையாய உறுப்புகள் பெயர்ச்சொற்கள். அம்மொழி பேசுவோரின் ஆட்பெயர்ச்சொற்கள் இன்னும் முதன்மையான தகைமை கொண்டவை. அதனால்தான் பெயர் என்பது வெறும்பெயரன்று. அதுவே மொழி. அம்மொழியே நீங்கள். மொழி வேறு, நீங்கள் வேறு என்று பிரிக்க முடியுமா ? நீங்கள் வேறு, உங்கள் சட்டை வேறு என்று பிரித்துக்காட்ட முடியும். மொழியை அம்மொழி பேசும் மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட முடியுமா ? மொழியினை அம்மொழி மக்களிடமிருந்து தனித்துப் பிரிந்த ஒன்றாக எங்காவது காட்ட இயலுமா ? பல்லடுக்குகளான நூல்களைக் காட்டினால் அது மொழியாக உலவுமா ? ஏட்டுச்சுவடிகளும் பாட்டுப் புத்தகங்களும் பனுவல்களும் மொழியாகிவிடுமா ? மொழி என்பது தன்னைப் படைத்தொழுகி வாழும் மக்களின் நாவில், நினைவில், எண்ணத்தில் மட்டுமே வாழும் தன்மையுடையது. குருதியினால் உயிர்ப்பொருளிடம்தான் வாழமுடியுமே, அவ்வாறு மொழியினால் மொழியைக் கையாளும் மக்களிடம்தான் பயன்பாட்டு வடிவத்தில் வாழமுடியும். அதனால்தான் ஒரு பெயர்ச்சொல் முதற்கொண்டு ஒவ்வொரு சொல்லும் மொழிக்கு இன்றியமையாதது. மொழி பேசும் கடைசி ஆள் இறக்கும்போது அம்மொழியும் அவனோடு இறந்துவிடுகிறது. அதனால்தான் சிந்துவெளி மக்களின் மொழியை நம்மால் கண்டறிய இயலவில்லை. இத்தனை அறிவியல் தொழில்நுட்பங்கள் இருந்தும்கூட.

வானம்பாடி என்று ஒரு பறவைக்குப் பெயர். அந்தப் பெயரில் என்ன பொருளுண்டு ? வானத்தில் பாடியபடி பறக்கும் பறவை என்ற செறிந்த பொருளுண்டு. வான் என்ற சொல் மேலும் அம் விகுதி பெற்று வானம் என்ற அழகிய சொல்லாகிறது. பாடு என்ற வினைவேர் இ விகுதி பெற்று தொழிற்படுபொருளுக்குப் பெயராகிறது. இரண்டும் சேர்ந்து வானத்தில் பாடி என்ற பொருளுரைக்கிறது. அம்பலத்தாடி என்றால் அம்பலத்தில் ஆடுபவர். சூதாடி என்றால் சூது ஆடுபவர். வாயாடி என்றால் வாயால் சொல்லாடுபவர். ஆடும் வினையைச் செய்தால் ஆடி. பாடும் வினையைச் செய்தால் பாடி. ஆளும் வினையைச் செய்தால் ஆளி. முதலை ஆள்பவர் முதலாளி. தொழிலை ஆள்பவர் தொழிலாளி. போரை ஆள்பவர் போராளி. ஓடும் வினையைச் செய்பவர் ஓடி. நாடு நாடாகக் கடந்து செல்பவர் நாடோடி. கடல் கடலாகச் செல்பவர் கடலோடி. யாவும் தலைசிறந்த பெயர்ச்சொற்களாகி மொழியோடும் பொருளோடும் எப்படிப் பிணைந்து நிற்கின்றன, பாருங்கள் !

நல்ல தம்பி, சின்ன தம்பி, பெரிய தம்பி என்று பெயர் வைக்கும் வழக்கும் ஊர்ப்புறங்களில் இருந்தது. இச்சொற்கள் மூத்த பிள்ளைக்கு மாறும்போது அப்படியே நல்லண்ணன், சின்னண்ணன், பெரியண்ணன் என்றாகும். பெண்பாலர்க்கு நல்லம்மை, சின்ன பொண்ணு, பெரியம்மை என்று பெயர் சூட்டிக்கொண்டுதானே இருந்தோம் ? இம்முறைகள் யாவும் மாறிப்போய் வாயில் நுழையாத பொருளற்ற சொற்களைப் பெயராக்கும் பழக்கம் எப்படித் தோன்றியது ?

‘நல்ல தம்பி’ என்றதும் அது ஈர்ப்பில்லாதபடி பழைய காலத்துக்குரியதாக இருக்கிறதே என்று கருத வேண்டா. அங்கே அனைத்தும் மொழித்தகைமை பெற்ற தொடராக தழைத்தோங்குவதை மறந்துவிடாதீர். எப்படி ? நல்ல தம்பி என்பது குறிப்புப் பெயரெச்சத் தொடர். நல்ல, சின்ன, பெரிய என்பவை பண்படியாகத் தோன்றிய குறிப்புப் பெயரெச்சங்கள். நல்ல தம்பி, பெரிய தம்பி என்றால் அவை தமிழ் இலக்கணப்படியான குறிப்புப் பெயரெச்சத் தொடர்கள். நர்விக்‌ஷா, ப்ரிஜித் என்று பெயரிட்டால் அவை என்ன தொடர்கள் ? அவற்றுக்கு என்ன பொருள் ?

வடிவேல் என்று ஒரு பெயர்ச்சொல் இருக்கிறது. அதற்கு என்ன பொருள் ? வடி என்பது வடிப்பாயாக என்கின்ற ‘வேல் வடிக்கும் செயலைச் செய்’ என்று ஏவும்படி கூறும் வினைச்சொல்லாகும். வேல் வடிப்பது என்றால் வேல் செய்வது. வடித்த வேல், வடிக்கின்ற வேல், வடிக்கும் வேல் என்று முக்காலத்திற்கும் உரிய பொருளை உணர்த்தும் தூய வினைத்தொகைச் சொல்தான் வடிவேல் என்பது. ஆழ்ந்த பொருளுணர்ச்சியோடும் மொழியிலக்கணத்தின் பேரழகோடும் விளங்குகின்ற தலைசிறந்த பெயர்ச்சொல்தான் வடிவேல் என்பது. வடிவேல் என்றால் நகைச்சுவை மட்டுமில்லை, ஐயா ! வடிவேல் என்றால் வினைத்தொகை. வடிவேல் என்றால் தமிழ் இலக்கணம். வளர்மதி என்று மகளுக்குப் பெயர் வைத்தால் அதுவும் வினைத்தொகைதானே ? வளர்ந்த மதி, வளர்கின்ற மதி, வளரும் மதி என்று முக்காலத்திற்கும் பொருந்தும் பொருளுடைய தொகைச்சொல் ஆயிற்றே. பெயரை மட்டுமா நாம் சூட்டினோம் ? பெயரின் வழியாக மொழியைக் கட்டிக்காத்துத் தரும் இலக்கணத்தையன்றோ முதற்கண் வைத்தோம் ?

இளங்கோ, இளம்பரிதி, இளஞ்செழியன், வெண்ணிலா, செந்தாமரை, செங்கோடன் என்று பெயர் வைக்கிறோம். இவை தூய தமிழ்ப்பெயர்கள்தாம் என்கின்ற அளவில் சரிதான் என்று போயிவிடமுடியுமா ? இவை ஒவ்வொன்றும் மொழியிலக்கணத்தின் செம்மாந்த சொற்றொடர்களான பண்புத்தொகைகள். வெண்மை + நிலா என்பதன் பண்புத் தொகைப் புணர்ச்சிதானே வெண்ணிலா ? செம்மை + தாமரை என்பதுதான் செந்தாமரை. ஈறுபோதல் விதிப்படி மை விகுதி கெட்டு, செம் தாமரை என்று நின்று, இனமிகல் விதிப்படி ம் என்ற மெய்யானது வருமொழி தாமரைக்கேற்ப ந் ஆவதால் பிறப்பதன்றோ செந்தாமரை ? செங்கோடன், செங்கோட்டையன் என்ற பெயர்களும் அவ்வழியே. கோடு என்றால் மலை. செங்கோடு என்றால் செம்மலை. செம்மலை என்றே முன்னாள் அமைச்சர் ஒருவர்க்குப் பெயர். காவிரியின் வடகரை ஊரொன்றில் செக்கச் சிவந்த மலையொன்று நாகம் படமெடுப்பதுபோல் நீண்டு படுத்திருக்கிறது. அந்த மலை, அந்தக் கோடு சிவப்பாக இருப்பதனால் செங்கோடு. அம்மலைக்கண் உள்ள கோவிலினால் அவ்வூரானது திரு விகுதி பெற்றுக்கொண்டு ‘திருச்செங்கோடு’ ஆனது. செங்கோட்டு மலைவாழ் இறைவன் செங்கோட்டு ஐயன் => செங்கோட்டையன். நம் மொழியின் அருமையான பெயர்த்தொடர்கள் எப்படியெல்லாம் தோன்றி மலர்ந்து மாண்புற்று ஒளிவீசின பாருங்கள் !

முந்தைய பகுதிகள்

இளையோர் மொழிக்களம்

பெயரும் பொருளும் அவ்வழியே மொழியும் இலக்கணமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து வாழ்ந்தன. இன்று நாம் சூட்டிக் கொண்டாடவேண்டிய தமிழ்ப் பெயர்ச்சொற்களின் அருமை பெருமை தெரியாமல் வாழ்கின்றோமே, வாயில் நுழையாத பெயர்களை நம் பிள்ளைகட்குச் சூட்டி நமக்கும் பொருள் விளங்காமல் அவர்கட்கும் தம்பெயர்ப்பொருள் தெரியாமல் இருக்கின்றோமே, சற்றே எண்ணிப் பார்ப்பீர் !