ஆங்கில ஆசிரியர்கள் நூல்களை எழுதுகிறார்களா ?

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 15
English teaching
English teachingImage by Tumisu from Pixabay

நம் குழந்தைகள் தம் கல்வியைத் தொடங்கும் பள்ளிச் சூழல் எப்படி இருக்கிறது ? ஒரு பள்ளியின் பெருமை அதன் ஆசிரியர்களால் கட்டமைக்கப்படுகிறது. நாம் நம் ஆசிரியர்களால் ஆக்கப்பட்டவர்கள். அவர்கள் புகட்டிய அறிவும் கல்வியுமே நம்மை இதுவரை அழைத்து வந்தவை. ஆசிரியர்கள் சிறந்து விளங்குவதற்குத் தோதான பள்ளிகள் மணிமணியான மாணாக்கர்களை வளர்த்தெடுக்கின்றன. நல்லாசிரியர்களிடம் பயின்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம்

இளமையில் கல் என்கிறோம். இளமை தவறிப்போய்விட்டால் கற்பது கடிதாகிவிடும். ஒரு குறிப்பிட்ட அகவைக்கு மேல் நம்மால் எதனையும் கற்றுக்கொள்வது இயலாது. ஏனென்றால் களிமண்ணில்தான் நாம் விரும்பும் உருவத்தை வனைய முடியும். ஈரங்காய்ந்த மண்ணைக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரு குழந்தைக்குப் புகட்டப்படும் மொழிக்கல்வியிலும் ஆசிரியரின் பங்களிப்பே முதன்மையானது.

பொதுவாக, ஓர் ஆசிரியரால் தமிழை எளிதாகக் கற்றுத்தந்துவிட முடியும். தமிழைப் போலவே ஆங்கிலத்தையும் எளிமையாகக் கற்பிக்க முடியுமா ? தமிழைக் கற்பிப்பதில் பற்பல இலகு வாய்ப்புகள் உடன்வருகின்றன. ஆங்கிலம் கற்பிப்பது தொடக்க நிலையில் அவ்வளவு எளிதானது அன்று. தமிழைப் பேசிக்கொண்டே தமிழைக் கற்பிக்கலாம். குழந்தைக்குக் கற்றுத் தருபவை பலவும் எளிதில் விளங்கும். ஆங்கிலம் பேசிக்கொண்டே ஆங்கிலத்தைக் கற்பித்தால் அதன் கற்றல் தடுமாறும். இந்நிலை இருமொழிக் கல்வியை ஒரே நேரத்தில் கற்றுத் தருமிடமெங்கும் காணப்படும்.

English teaching
குழந்தையின் தாய்மொழி மனம் சுக்குநூறாக உடையும் இடம்

மாணாக்கர் ஒருவரின் நினைவில் மிகவும் பிடித்தவராகத் திகழ்பவர் தமிழாசிரியர்தான். தமிழாசிரியரின் இடத்தை இன்னொரு பாடத்து ஆசிரியர் கைப்பற்றவே இயலாது. பள்ளிகளின் செல்வாக்கு மிக்க ஆசிரியர்களாகத் தமிழாசிரியர்களே வலம்வந்த காலம் ஒன்றிருந்தது. இப்போதும் பெரிதாக நிலைமை மாறியிருக்காது என்றே நம்புகிறேன். தமிழ்நாட்டில் தமிழாசிரியர் சங்கங்கள் வலிமையாக இருந்தன.

பாரதிதாசனாரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் சிலவற்றை உணர முடியும். அவர் தமிழாசிரியராகப் பணியாற்றிய காலத்தைப் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. அக்காலத்தில் புதுவைத் தேர்தல் அரசியலில்கூட அவர் கைகாட்டுகின்ற வேட்பாளரே வெல்லும் நிலை இருந்ததாம். அந்தச் செல்வாக்கினை அவருடைய தமிழாசிரியர் தகைமையால் பெற்றிருந்தார். அவரிடம் பயின்ற மாணாக்கர்கள் என்று ஒரு படையே இருந்தது. அவர்கள் கவிதையிலும் இலக்கியத்திலும் சுவடு பதித்து வளர்ந்தனர். அவரிடம் நேரடியாகத் தமிழ் பயிலாதபோதும் உடனிருந்த பலரும் உயர்வு பெற்றனர்.

English teaching
இளையோர் மொழிக்களம் | தமிழிலும் தள்ளாட்டம் ஆங்கிலத்திலும் அரைகுறை!

ஒருமுறை கவிஞர் சிற்பி பாரதிதாசனைக் காணச் சென்றிருக்கிறார். அவர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றவர் அல்லர். ஆனால், பாரதிதாசனின் மாணக்கரைத் தமிழாசிரியராகப் பெற்றவர். நேர்காணச் சென்றபோது கூறியிருக்கிறார் : “ஐயா, நான் தங்கள் மாணவரான இன்னாரிடம் தமிழ் கற்றேன்.” அதற்குப் பாரதிதாசனார் கூறினாராம் : “அப்படியானால் நீ என் பேரன்”. இதுதான் தமிழாசிரியர்க்கே உரிய பண்பு ! தமிழாசிரியர்க்கும் மாணாக்கர்க்கும் இடையே தொன்று தொட்டுத் தொடரும் உறவு.

இன்றைக்குத் தமிழில் எழுதப்பட்டுள்ள நூல்களைக் கணக்கில் எடுத்துப் பார்ப்போம். அவற்றில் பெரும்பான்மையானவை தமிழாசிரியர்களால், தமிழ்ப்பேராசிரியர்களால் எழுதப்பட்டவை என்று துணிந்து கூறலாம். தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் ஆசிரியர்களாக இருப்பர். அவர்களில் தமிழாசிரியர்கள் பெரும்பான்மையர். தமிழ்ப்பேராசிரியர்கள் பலரும் நூல்களை எழுதியவர்கள். அண்மைக் காலத்தில் இவ்வெண்ணிக்கையில் ஏதேனும் தாழ்விருக்கலாமே தவிர, முந்தைய தலைமுறைப் பேராசிரியர்கள் தமிழில் எழுதிய நூல்கள் எண்ணற்றவை. இவர்கள்தாம் கல்விக் கூடங்களில் மாணாக்கர்கட்குத் தமிழைக் கற்றுக்கொடுத்தார்கள். நூல்களையும் இயற்றினார்கள். ஒரு மொழிக்குச் செய்ய வேண்டிய பணியைத் தொடர்ந்து செய்தார்கள்.

இந்தக் காட்சியை அப்படியே ஆங்கில மொழிக்குப் பொருத்திப் பார்ப்போம். மொழியாசிரியர்களுக்கே உரிய சிறப்பும் பெருமையும் ஆங்கிலம் கற்றுத் தருபவர்களையும் சேரட்டும். எனக்கும் சிறப்பான ஆசிரியர்கள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்தாம். ஓர் ஆசிரியராக அவர்களுடைய செந்தகைமையை நாம் நுனியளவும் குறுக்கி மதிப்பிடவில்லை. ஓர் ஒப்பீட்டுக்காக இதனைக் கேட்க நேர்கிறது. தமிழ்நாட்டுப் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றுகின்ற ஆங்கில மொழியாசிரியர் பெருமக்களை எடுத்துக்கொள்வோம். இவர்களில் யார் ஆங்கில நூல்களை எழுதியிருக்கின்றார்கள் ? தமிழாசிரியர் பெருமக்கள் தமிழ் நூல்களை எழுதியதுபோல் ஆங்கிலத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில நூல்களை இயற்றி வருகிறார்களா ? நூல் எழுதுவதுகூடப் பெரும்பணி என்று ஒதுக்கிவிடலாம். தொடர்ச்சியாக ஆங்கிலக் கட்டுரைகள் ஏதேனும் எழுதிக்கொண்டுள்ளார்களா ?

எனக்குத் தெரிந்தவரைக்கும் தமிழாசிரியர்கள் தமிழில் எழுதும் நூலெண்ணிக்கைக்கு அருகில்கூட ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில நூல்களை எழுதுவதில்லை. அவர்கள் அதனை ஒரு கல்விப் பணியாகச் செய்கிறார்கள். படைப்பாற்றலோடு எழுத்தில் இயங்குவது இன்றைய சூழலிலேயே எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. மிஞ்சிப் போனால் ஆங்கில நாளிதழ்களில் ஆசிரியர் மடல்களோ, சிறுகருத்துரைகளோ எழுதுவார்கள். தமிழ்நாட்டுத் தமிழாசிரியர்கள் நூல்களையும் படைப்புகளையும் எழுதுவதைப்போல, ஆங்கில மொழியாசிரியர்கள் நூல்களையும் படைப்புகளையும் மிகுந்த எண்ணிக்கையில் எழுதுவதில்லை.

English teaching
ஒரு மொழியிலேனும் புலமையும் ஆற்றலும் வேண்டும் ! அது எந்த மொழியாக இருக்கவேண்டும் ?

இவ்விடத்தில் நான் துணிந்து கேட்கிறேன், ஆசிரியர்களின் நிலையே இப்படி இருக்கின்றது. இங்கே ஆங்கிலம் கற்று, ஆங்கில வழியில் அறிவியல் கற்று, அடுத்தடுத்துச் செல்லும் நம் குழந்தைகள் எப்படி அறிவுத் துறையில் தமிழ்கற்றோரைக் காட்டிலும் மேம்பட்டு விளங்குவதாகக் கருத முடியும் ?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com