இளையோர் மொழிக்களம் | மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமா ? இளையராஜா பாடல்களைக் கேளுங்கள் - 22 !

இன்றைய தலைமுறையினர் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், இளையராஜா இசையமைத்த புகழ்பெற்ற பாடல்களைத் தொடர்ந்து கேளுங்கள் என்று உறுதியாகப் பரிந்துரைப்பேன்.
இளையராஜா
இளையராஜாஇளையராஜா

நம் வாழ்க்கையில் திரைப்படப் பாடல்களுக்கு இன்றியமையாத பங்கு உண்டு. நல்லதோ கெட்டதோ எங்கும் உடன்வருகின்றவையாக அவை விளங்குகின்றன. பாடல்கள் இல்லாத குமுகாயம் இருக்க முடியாதுதான். பாட்டு என்றதும் நம் நினைவுக்கு வருவன திரைப்படப் பாடல்களே. ஓர் அமெரிக்கருக்குப் பாட்டு என்றால் அவர் பார்த்த திரைப்படத்தின் வழியாக எதுவும் நினைவுக்கு வராது. தனிப்பட்ட பாடல்கள் அங்கே கோலோச்சுகின்றன. நமக்கு அவ்வாறில்லை.

திரைப்படப் பாடல்கள் வருவதற்கு முன்னர் நாட்டுப்புறப் பாடல்களால் நம் வாழ்க்கை ஆகியிருந்தது. கூத்துப் பாடல்களுக்கும் மக்களிடத்தே நல்வரவேற்பு இருந்தது. தாலாட்டும் ஒப்பாரியும் பிறப்பு முதல் இறப்பு வரைக்குமான பாடல்கள். முந்நூறாண்டுகட்கு முன்னர் நாம் பாட்டு என்று எதனைக் கேட்டிருப்போம் ? பாடத் தெரிந்த ஒருவரைப் பாடச்சொல்லிக் கேட்டிருப்போம். மக்களே பாடவல்லாராகவும் விளங்கியிருப்பர். மகளிர்க்குப் பாட்டுத்தான் விருப்பக்கலை. அவர்கள் அறிந்திருந்த பாடல்கள் எவை ? அவை இன்னொருவரிடம் கேள்வியறிவாகக் கேட்டுப் பெற்றவை. பாடலைக் கேட்டவுடனே நினைவிற்கொள்ளத்தக்க நினைவாற்றலும் மக்களிடம் நிறைந்திருந்தது. வில்லுப் பாட்டும் கும்மிப் பாட்டும் பரவியிருந்தன. வேண்டிய இடங்களில் மக்களே பாடல் கோத்துப் பாடத்தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர். மக்களுக்குப் பாடவும் தெரிந்தது, பாடல் புனையவும் தெரிந்தது.

கடந்த எண்பதாண்டுகளாகத் திரைப்படப் பாடல்கள் மிகச்சிறப்பான பதிவு வெளிப்பாட்டு வடிவத்தில் வெளிப்படுகின்றன. மக்கள் வேண்டி விரும்பிக் கேட்ட அனைத்துப் பாடல் வடிவங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவை முதற்பொருளாக நிலைத்துவிட்டன. நம் இளமைக்காலம் திரைப்படப் பாடல்களோடு தொடர்புகொண்டிருப்பது.

என்னுடைய இளமையில் எங்கெங்கும் சில பாடல்கள் தொடர்ந்து காற்றில் உலவியதைக் கேட்டிருக்கிறேன். பேருந்தில் ஊர்க்குச் சென்றிறங்கினால் எங்கோ தொலைவிலிருந்து ’செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ என்று ஒலித்தது இன்னும் நினைவிருக்கிறது. அண்மையில் சென்றபோது ‘பத்தல பத்தல’ என்று ஒலித்தது. வானத்து நீலத்திலிருந்து அந்த ஒலிபெருக்கி ஒளிந்திருந்து ஒலிக்கிறதோ என்னும்படியான நிலைத்த ஒலிப்பு அது. சிற்றூரிலிருந்து நகர்நாடிய இளமையில் நகரமெங்கும் உதயகீதம் படப்பாடல்கள் ஒலித்தன. பிறகு தென்றலே என்னைத் தொடு பாடல்கள். பிறகு சின்ன பூவே மெல்லப் பேசு பாடல்கள். இந்த நகரமானது எங்கெங்கும் பாடல்கள் ஒலித்த பசும்பொழிலாகவே என் நினைவில் தங்கியிருக்கிறது.

நாங்கள் கேட்ட பாடல்களில் மொழி வாழ்ந்தது. எங்களை அறியாமல் பாடலோடு மொழி கற்றுக்கொண்டோம். ’புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே… கிளியே ! உந்தன் பூவுடல் பார்த்த பின் சிற்பம் வடித்தனரோ… கனியே !’ என்ற பாடல் வரியைக் கேட்ட பிறகு யார்க்கேனும் தமிழ் வராமல் இருக்குமா ? ‘பழைய ராகம் மறந்து.. நீ பறந்ததென்ன பிரிந்து… இரவுதோறும் அழுது… என் இரண்டு கண்ணும் பழுது…’ என்ற வரிகளில் தோயாத நெஞ்சமுண்டா ? ‘சென்றது கண்ணுறக்கம்… கண்ணில் நின்றது உன் மயக்கம்… இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்’ என்ற சொற்களில் நாங்கள் எவ்வளவு நெகிழ்ந்திருப்போம் ! எங்கள் இளமை இளையராஜாவினால் ஆனது. நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் !

ஈராயிரக் குழவியரின் தலைமுறை தமக்கு வாய்த்த திரைப்பாடல்களை எவ்வாறு கேட்டுத் துய்த்தார்கள் என்பதைக் கணிப்பது கடினமாக இருக்கிறது. சொற்கள் மிதக்கும் காற்றலைகளை இவர்களுக்குக் காலம் வழங்கவில்லையோ என்று அஞ்சுகிறேன். சொற்களை மீறிய இசையொலிகளால் ஆனவை பிற்காலப் பாடல்கள். அன்று திரைப்படத்தினைப் பார்த்துவிட்டு பாடல்வரிகளை முணுமுணுத்துக்கொண்டு வெளியே வருவோம். கரகாட்டக்காரன் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் ‘மாங்குயிலே பூங்குயிலே’ என்றபடிதான் உலவுவார்கள். இன்றைக்கு எந்தப் பாடலை அவ்வாறு முணுமுணுத்துக்கொண்டே வெளியே வருகிறார்கள் ?

பாடல் ஒலிப்பதிவு முறைகளும், பாடல் பதிவு அறிவியற் கருவிகளும் வளர்ந்து நிற்கும் இந்நேரத்தில் பாடல் வரிகளின் தரம் எவ்வாறு இருக்கிறது ? ஆங்கிலக் கலப்பினால் மொழித்தூய்மை கெட்டுக் கிடக்கிறது. கருத்து வடிவம் கைவரப்பெறாத வெற்றுச் சொற்கள். அச்சொற்களும் இசையளவைக்குள் அமராமல் துருத்திக்கொண்டு நிற்கின்றன. மென்மையான பாடலுக்கு வல்லின மெய்யெழுத்துகளை வாரி இறைக்கிறார்கள். இசையமைப்பாளர்க்கு மொழியின் ஒலி தெரியவில்லை. பாடலாசிரியர்க்கு ஒலியின் மொழி தெரியவில்லை.

பாடல் வெற்றியடைவதற்கு இசைவளமான, மொழிச்செம்மையான, கருத்துச் செறிவான, கவிதைப் பிழிவான அடிகள்தாம் வேண்டும். அப்பாடல்களைச் செவிமடுக்கும் பிள்ளைகள் பாடலோடு மொழியையும் கற்றுக்கொள்வார்கள். எங்களுக்கு அந்த வாய்ப்பு வான்மழையெனக் கொட்டியது. இளையராஜாவை நான் மீண்டும் மீண்டும் புகழ்ந்து பேசக் காரணமே இவ்வொன்றுதான். இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த பாடல்களைக் கேட்டாலே போதும், தமிழ் நன்கு பழகிவிடும். மொழி கைவந்துவிடும். இசையும் மொழியும் அருமையாய்க் கலந்திருப்பதால்தான் அவர் பாடல்கள் காலத்தை விஞ்சுகின்றன. இன்றைய தலைமுறையினரும் இளையராஜாவைத் தொடர்ந்து விரும்புவதற்கு அப்பாடல்களில் இலங்குகின்ற மொழியழகே முதற்காரணம் என்பேன். பாடல் வரிகளைச் சிதைக்காமல், சொற்களை இசையொலிகளுக்குள் அடக்கம் செய்யாமல் இசையமைத்தார் இளையராஜா. அவருடைய இசையில் எந்தப் பாடகரும் சொற்களைப் பிழையாக உச்சரித்துவிட முடியாது.

இன்றைய தலைமுறையினர் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், இளையராஜா இசையமைத்த புகழ்பெற்ற பாடல்களைத் தொடர்ந்து கேளுங்கள் என்று உறுதியாகப் பரிந்துரைப்பேன்.

முந்தைய பகுதிகள்

இளையராஜா
மொழி மட்டும் தப்பித்துவிடுமா ?
இளையராஜா
தமிழுக்குத் தலைப்பில்கூட இடமில்லையா?
இளையராஜா
பூமர் என்பவர் யார் ?
இளையராஜா
தாய்மொழிக் கல்விக்கு முன்னரே பிறமொழி கற்பது வன்முறை
இளையராஜா
இளையோர் மொழிக்களம் | புரோ எப்போது வழக்கொழியும் ?
இளையராஜா
நம்புங்கள், குழந்தையாய் இருக்கும்போதே சொற்களை உருவாக்கினீர்கள் !
இளையராஜா
ஒவ்வொரு சொல்லாய்ப் பழகி அறியும் குழந்தை !
இளையராஜா
கோழியை ஒன்றும் செய்ய முடியாது !
இளையராஜா
எடுத்த எடுப்பில் ஏபிசிடியைக் கற்றுக்கொடுக்கலாமா ?
இளையராஜா
வீட்டில் பந்தாக இருந்தது, பள்ளியில் பால் ஆகிறது !
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம்
இளையராஜா
குழந்தையின் தாய்மொழி மனம் சுக்குநூறாக உடையும் இடம்
இளையராஜா
ஒரு மொழியிலேனும் புலமையும் ஆற்றலும் வேண்டும் ! அது எந்த மொழியாக இருக்கவேண்டும் ?
இளையராஜா
இளையோர் மொழிக்களம் | ‘How I wonder what you are' என்ற தொடர் குழந்தை கற்க வேண்டிய தொடரா?
இளையராஜா
இளையோர் மொழிக்களம் | தமிழிலும் தள்ளாட்டம் ஆங்கிலத்திலும் அரைகுறை!
இளையராஜா
ஆங்கில ஆசிரியர்கள் நூல்களை எழுதுகிறார்களா ?
இளையராஜா
இளையோர் மொழிக்களம் | விளையாட்டில் வளர்ந்த மொழி
இளையராஜா
இளையோர் மொழிக்களம் | நிலக்கரிக்கு ஆங்கிலச் சொல் தெரியுமா?
இளையராஜா
இளையோர் மொழிக்களம் |மொழியின் மடியில் விளைந்த சொற்கள் - 18
இளையராஜா
இளையோர் மொழிக்களம் பகுதி 19 - செம்மி ஜிம்மி ஆனது எப்படி?
இளையராஜா
இளையோர் மொழிக்களம் | உறவுப் பெயர்களின் விளி வடிவம் உண்மைப் பெயர்களாயின ! - 20
இளையராஜா
இளையோர் மொழிக்களம் | பேசத் தெரிந்தவரே எல்லாராலும் விரும்பப்படுகிறார் -21..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com