ஒரு மொழியிலேனும் புலமையும் ஆற்றலும் வேண்டும் ! அது எந்த மொழியாக இருக்கவேண்டும் ?

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 12
kids

ஒவ்வொரு சொல்லாகக் கற்றுக்கொள்ளும் குழந்தை முதலில் கற்பது அடிப்படைச் சொற்களைத்தான். மொழியில் பலப்பல தொடர்கள் தோன்றுவதற்கு வேராக விளங்கும் இயல்பான சொற்களைக் கற்கிறது. இங்கே சொல்ல வருவதை ஓர் எடுத்துக்காட்டின் வழியே விளக்குகிறேன்.

‘மணிமுத்தாறு’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இந்தச் சொல் ஒரு குழந்தைக்கு முதலில் அறிமுகம் ஆகிறது என்று நினைக்கிறீர்களா ? அவ்வாறு அறிமுகம் ஆனால் அதனால் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா ? அதன் பொருளைப் பகுத்தறிந்து உணர்ந்துகொள்ளுமா ? இல்லை இல்லை என்று துணிந்து கூறலாம்.

மொழியில் இதனைச் சொல் என்பதே ஒரு பழக்கத்தால்தான். இது பல சொற்களால் ஆகிய தொடர். சொல் தொடர் எனப் பிரிபடும் சொற்றொடர். மணி, முத்து, ஆறு என்னும் மூன்று சொற்கள் தொடர்ந்து வருகின்றன. தனியாக வரும் சொல்லைத்தான் சொல் எனல் வேண்டும். சொல் சொல்லாகச் சேர்ந்து வருவனவற்றைத் தொடர் அல்லது தொகை என்பர். ஒரு சொல் தனித்து வரும்போது ஒரு பொருளையும், சேர்ந்து சேர்ந்து தொடராக வரும்போது விரிந்த பொருளையும் தரும்.

kids
kidsImage by Ever Luna from Pixabay

குழந்தைக்கு முதலில் மணி என்பது தெரியவரும். அதன் கழுத்தில் அணிவிக்கப்பட்ட அணிகலனில் மணிகள் கோக்கப்பட்டிருக்கும். ஒளிபுகும் தன்மையுள்ள பளபளப்பான அழகிய மணிகள். ஆடையில் மணிகள் பதிக்கப்பட்டிருக்கலாம். அம்மணிகளில் ஒன்று முத்து. எல்லாக் குழந்தைகளும் கடல் முத்தினைப் பார்த்திருக்கும் என்று கூற முடியாது. அதனை ஈடுசெய்ய மொழிப் பரவலிலேயே மாற்றுவழியும் உண்டு. ஒரு பொருளைப்போல் இன்னொன்றும் இருந்தால் இரண்டாம் பொருளை முதற்பொருளின் சொல்லால் அழைப்பது. சிப்பியிலிருந்து எடுக்கப்பட்ட முத்துகளைப் பார்த்திராத பகுதியினர்க்கு அதன் முத்து இன்னொரு வடிவில் அறியத் தரப்படும். அதுதான் மாதுளை முத்து. மாதுளம் பழத்தின் உட்பொருள் முத்துகள். சிப்பி வயிற்றில் இருப்பதும் முத்து. மாதுளம் பழத்திலிருப்பதும் முத்து.

ஒரு குழந்தை நீர்நிலைகளையும் நீர்வழிகளையும் இயல்பாகவே அறியத் தொடங்குகிறது. குளம், குட்டை, ஓடை, ஆறு, ஏரி என்பனவற்றை அறியும். ஆறு என்பதும் அவ்வாறே அறிய வந்த பெயர். குழந்தைக்கு மணி தெரியும். முத்து தெரியும். ஆறும் தெரியும். மணி முத்து ஆறு => மணிமுத்தாறு என்ற பெயரைக் கேட்டதும் அதற்கு இயல்பாகவே பொருள்விளக்கம் கிடைக்கும். “அங்கே ஓர் ஆறு ஓடுகிறது, அதற்குள் மணி இருக்கும், முத்து இருக்கும்” என்பதுபோல் விளங்கிக்கொள்ளும். இவ்வாறுதான் ஒரு சொற்றொடரைக் குழந்தை அறியப் பழகுகிறது.

மேலோட்டமாகப் பார்க்கையில் இந்த முறை வழக்கமான ஒன்றுதானே என்று தோன்றலாம். ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால் மொழியின் தோன்றுமுறையும் இதுவே. தொன்மக்களிடமிருந்து மொழி தோன்றுகையில் அடிப்படைச் சொற்கள் முதலில் வெளிப்பட்டன. இயற்கையாகக் கிடைத்த நிறப்பளபளப்பு மிகுந்த அரும்பொருள் ஒன்றிற்கு மணி என்று பெயரிட்டனர். அவற்றில் ஒரு வகைதான் முத்து. நிலத்தை அறுத்து ஓடும் தன்மையால் பெரிய நீர்வழிக்கு ஆறு என்ற பெயர் வந்தது. மணிமணியாய் முத்துமுத்தாய்க் காணப்பட்ட ஓர் ஆற்றிற்கு மணிமுத்தாறு என்று பெயர் சூட்டியிருப்பர். இதே வழிமுறையில்தான் சொல்சொல்லாக மொழி தோன்றியது. இதே வழிமுறையில்தான் குழந்தையும் மொழியை அறியத் தொடங்குகிறது. குழந்தையின் மொழியறியும் முறை, மொழி தோன்றிய முறையோடு இயற்கையாகவே ஒத்துப்போகிறது. அதனால்தான் மொழியும் குழந்தை மனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துவிடுகின்றன.

இந்தச் செயல்முறை ஒரு மொழியோடுதான் அமைய வேண்டும். இரண்டு மொழிகளை வைத்துக்கொண்டு ஒரே பொருளுக்கு இந்த மொழியில் இது சொல், அந்த மொழியில் அது சொல் என்று கற்பிப்பதா குழந்தைக்கல்வி ? அது எவ்வளவு பெரிய குழப்பக் கல்விமுறை என்று நாம் எண்ண வேண்டாவா ? முதலில் குழந்தையின் தாய்மொழியில் ஒரு சொல்லைக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு மொழியைப் பழுதறக் கற்ற பின்பு இன்னொரு மொழியை மெல்ல அறிமுகப்படுத்தவேண்டும். ஒரு மொழியில் புலமை, இன்னொரு மொழியை அறியச் செய்தல் என்றுதான் நம் மொழிக்கல்வி இருக்கவேண்டும். ஒரு மொழியிலாவது ஆற்றல் பெற்ற தலைமுறையை நாம் உருவாக்கவேண்டாமா ?

இங்கே என்ன நடக்கிறது ? தாய்மொழியைக் கற்பிப்பதில் அறவே போதாமை உள்ளது. அல்லது அதற்கு இரண்டாம் நோக்கம்தான். இன்னொரு மொழியான ஆங்கிலத்தைக் கற்பிப்பது என்ற பெயரில் தொடர்ச்சியான குத்தியிறக்கல் நடக்கிறது. போதாக்குறைக்கு ஆங்கில வழிக்கல்வியைத் தேர்ந்தெடுத்துவிட்டால் பாடப்பொருள்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்கும். அறிந்துகொள்வதற்குத்தானே அறிவியல் பாடங்கள் ! அவற்றை அடுத்த மொழியில்தான் அறிந்துகொள்ளவேண்டுமா ? தமிழில் அறிந்தால் அறிவு ஆகாதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com