இளையோர் மொழிக்களம் | புரோ எப்போது வழக்கொழியும் ?

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 5
BRO
BROdalle

இந்த உறவு விளிப்பு அண்மைக் காலமாக ஓர் ஆங்கிலப் பெயரினால் படாதபாடு படுகிறது. அதுதான் ‘ப்ரோ’ என்பது. ‘பிரதர்’ என்னும் ஆங்கிலச் சொல்லின் கடைக்குறை விகாரம் என்று தெரிகிறது. இந்தச் சொல் புரோ ஆகி புரூ ஆகி என்னென்னவோ வடிவெடுத்து வாடுகிறது. இளையவர்கள் அனைவரையும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் வாட்டி வதைக்கிறது.எண்பதுகளில் வெளியான திரைப்படங்களைப் பார்த்தவர்கட்கு ஒன்று நினைவிருக்கும். நாயகனோ நாயகியோ செல்வர் வீட்டுப் பிள்ளை எனில் ‘மம்மி, டாடி’ என்று அழைத்தபடியே படியிறங்கி வருவர். பிற்காலத்தில் இந்தப் போக்கு மிகவும் குறைந்து போய்விட்டது. இப்போது ‘அம்மா, அப்பா’ என்று அழைப்பதுதான் இயல்பாகியுள்ளது. அண்மைக் காலமாக ‘ஐயா’ என்று தயங்காமல் விளிக்கும் போக்கும் பெருகியுள்ளது.

மகுடேசுவரன்
மகுடேசுவரன்

குழந்தையிடம் அதன் பெற்றோர் ‘மம்மி பாரு மம்மி பாரு’ என்றா பேசத் தொடங்குவார்கள் ? இல்லை என்றே நான் துணிகிறேன். ‘அம்மா பாரு’ என்றுதான் தொடங்குவார்கள். ‘அம்மா’ என்ற அம்முதற்சொல் மம்மியைத் தகர்த்து மீண்டும் தன் தனியிடத்தைக் கைப்பற்றிவிட்டது. அவ்வாறே அப்பா என்பதும் நின்று நிலைபெற்றுவிட்டது. அங்கே ‘டாடி’க்கு வேலையில்லை. இன்றும் சிலர் ‘மம்மி டாடி’ எனலாம். அது மிகவும் சிறுபான்மையது.

அடுத்தடுத்த உறவுப்பெயர்கள் ஒரு குழந்தைக்குப் பழக்கமாகும்போது அக்குழந்தை தமிழைப் பெறுகிறது. தாத்தா, பாட்டி, ஆயாள், ஆயி, அத்தை, மாமா, அக்கா, அண்ணா, தம்பி, சித்தி, பெரியப்பா, சித்தப்பா என்று நகரும் உறவுப்பெயர்கள் தமிழால் நறுமணம் கமழ்கின்றன. அந்தக் குழந்தைக்குத்தான் எப்படியோ ‘அங்கிள், ஆன்ட்டி’ என்ற பெயர்கள் அறிமுகம் ஆகின்றன. அப்பெயர்களோடு அக்குழந்தைக்கு உணர்வுத் தொடர்பு இருக்குமா ? தமிழ்ச்சூழலில் பிறந்து வளரும் ஒரு குழந்தைக்கு ‘மாமா’ என்ற சொல் தரும் தாய்மையுணர்வினை ‘அங்கிள்’ என்ற சொல் தருமா ?

ஒரு குழந்தை அறியும் மொழியின் முதற்சொற்கள் உறவுப் பெயர்களால் ஆனவை. நாமறிந்த முதற்சொற்களும் அவையே. நாம் பிள்ளைகட்குச் சொன்ன முதன்மொழியும் அவையே. அவ்விடத்தில் அறிந்தோ அறியாமலோ பிறமொழியிலான ஓர் உறவுப் பெயர்ச்சொல்லை ஏன் நுழைக்க வேண்டும் ? அதன் பயன் என்ன ? தன் பிள்ளை பிற்காலத்தில் ஆங்கில வழிக்கல்வி பயின்று பொருளீட்டி உலகை வலம் வரவேண்டும் என்பதே ஒருவரின் விருப்பமாக இருக்கட்டும். அவ்விடத்தில் மம்மியும் டாடியும் அங்கிளும் ஆண்டியும் வருவது என்ன பயனைத் தந்துவிடும் ?

அம்மா, அப்பா, மாமா, அத்தை என்று பேசிப் பயின்று வளரும் குழந்தை ஆங்கிலத்தை அறியாது தடுமாறி நிற்குமா ? தமிழை நன்கு பயின்று வளர்ந்தால் பிறமொழி அறிதல் எட்டாக் கனியாகிவிடுமா ? நம் பிள்ளைகள் தமிழை நன்கு கற்று வளரட்டுமே, அதற்கும் மேலாக ஐந்தாறு மொழிகளைக் கற்று உலகாளட்டுமே, என்ன கெட்டுப் போய்விடும் ? பெற்றோர்கட்கு ஏன் இந்நம்பிக்கை வருவதில்லை ?

தாய்மொழியைக் கற்ற பிறகு இன்னொரு மொழியைக் கற்க முடியாது என்று நினைக்கிறோமா ? தாய்மொழி கிடக்கட்டும் ஒருபக்கம், அது யாருக்கு வேண்டும், முதலில் ஆங்கிலத்தைப் பயிற்றுவிப்போம் என்று நினைக்கிறோமா ? நாம் என்ன நினைக்கிறோம் ? நம்மையும் நம் எண்ணங்களையும் சீராய்வு செய்த பிறகு நம் பிள்ளைகளின் மொழிக்கல்வியைப் பற்றி எண்ணுவோம்.

உறவுப் பெயர்களை முன்வைத்து விளிப்பெயர்களைப் பற்றிய பேசுபொருள் வந்துவிட்டதால் இங்கே இன்னொன்றையும் சேர்த்துச் சொல்வது பொருத்தமாக இருக்கும். மதுரைப் புறத்துப் பேச்சு வழக்கு ‘அண்ணே’ என்பது. கோயம்புத்தூர் வழக்கு ‘அண்ணா’ என்பது. சென்னைப் பகுதியில் ‘அண்ணாத்தே’ என்கிறார்கள். இது மூத்தவரை அழைக்கும் பெயர். இளையவர்களை எல்லா ஊரினரும் ‘தம்பி’ என்றே அழைப்பர்.

இந்த உறவு விளிப்பு அண்மைக் காலமாக ஓர் ஆங்கிலப் பெயரினால் படாதபாடு படுகிறது. அதுதான் ‘ப்ரோ’ என்பது. ‘பிரதர்’ என்னும் ஆங்கிலச் சொல்லின் கடைக்குறை விகாரம் என்று தெரிகிறது. இந்தச் சொல் புரோ ஆகி புரூ ஆகி என்னென்னவோ வடிவெடுத்து வாடுகிறது. இளையவர்கள் அனைவரையும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் வாட்டி வதைக்கிறது.

’புரோ’ என்ற ஆங்கிலச் சொல் எதனைக் குறிக்கிறது ? உடன்பிறப்பு முறையுள்ள ஆண்பால் ஒருமையைக் குறிக்கிறது. இச்சொல் மூத்தவரைக் குறிக்கிறதா, இளையவரைக் குறிக்கிறதா ? தெளிவில்லை. இச்சொல் ஆண்பாலுக்குப் பரவலானதுபோல் பெண்பாலுக்கு ஒரு சொல்லைத் தேடி எங்கே போவது ? பெண்டிர் பலர் தம் குழாத்திற்குள் இன்னொரு பெண்பாலரையே ‘மச்சி’ என்று அழைப்பதுபோல் ஆகிவிட்டதா ? பெண்பாலரும் தமக்குள் ‘புரோ’ என்று அழைத்துக்கொள்கிறார்களா ? நம் கேள்வி மிக எளியது. புரோ என்ற ஆங்கிலக்குறைசொல் ஆண்பாலர்க்கிடையே பரவலானதுபோல் பெண்பாலர்க்கு என்ன சொல் பயன்படுத்துவது ? அவர்கள் இன்னமும் ‘சிஸ்’ என்று அழைக்கப்படுகிறார்களா ?

‘புரோ’ என்று அழைக்கும் தலைமுறைக்கு எப்போது முடி நரைக்கிறதோ எய்துகிறதோ அப்போதுதான் இந்தச் சொல்லும் வழக்கொழியும். அங்கே மீண்டும் அண்ணா செழித்து எழும். தமிழ் இப்படித்தான் எப்போதும் மீண்டெழுந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com