இளையோர் மொழிக்களம் | உறவுப் பெயர்களின் விளி வடிவம் உண்மைப் பெயர்களாயின ! - 20

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 20
உறவுப் பெயர்கள்
உறவுப் பெயர்கள்கவிஞர் மகுடேசுவரன்

இளமை வாழ்க்கையில் ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தும் சொற்கள் என்னென்ன என்று பார்க்கலாம். பெரும்பாலும் உறவுப் பெயர்களைத்தான் முதற்கண் அடிக்கடி பயன்படுத்துவோம். உறவுப் பெயர்கள் யாவும் முழுப்பெயராய் நினைவில் தங்கியிருப்பதைக் காட்டிலும் விளி வடிவில்தான் நிறையவே பதிந்திருக்கும். ஒருவரைக் கூப்பிடுவதற்காக அழைக்கிறோமே, அதுதான் விளிப்பு. விளிப்புக்காக ஒரு பெயர்ச்சொல் அடையும் மாற்றம்தான் விளிவடிவம்.

அம்மா, அப்பா என்ற சொற்கள் முழுவடிவில் உள்ள சொற்களல்ல. அச்சொற்கள் அவற்றின் விளி வடிவில் இருப்பவை. அம்மாள், அப்பன் என்பவைதாம் அவற்றின் உண்மையான வடிவம். ஆள் என்பது எவ்வாறு பெண்பால் விகுதி ஆகிறதோ அவ்வாறே ஐ என்பதும் பெண்பால் விகுதியாய்ப் பயிலும். அவ்வாறு பயில்கையில் அம்மாள் என்ற சொல் அம்மை என்றும் ஆகும். அம்மை அப்பன். அவற்றை விளிக்க வேண்டும் என்றால் அம்மையே அப்பனே என்றும் அழைக்கலாம். அப்பா அப்பா பிள்ளையாரப்பா என்றும் அழைக்கலாம், அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே என்றும் அழைக்கலாம்.

இவை யாவும் பேச்சு வழக்கில் பொலிவுறப் பொதிந்திருக்கின்றன. ஒரு சொல் விளித்தன்மை பெறுவதற்கு அதன் ஈற்றில்தான் அழைப்பு விகுதியை, அதாவது விளி விகுதியை ஏற்றவேண்டும் என்பதில்லை. கடைசி எழுத்துக்கு முந்திய எழுத்தையும் சிறிது விகாரப்படுத்தி விளிப்பை ஏற்றலாம்.

மக்கள் என்பது ஒரு பெயர்ச்சொல், மக்களை விளிப்பதற்கு எப்படிச் சொல்லலாம். மக்களே என்று ஈற்றில் ஏகாரத்தை விளிப்பொருளில் ஏற்றலாம். அல்லது கடைசி எழுத்துக்கு முந்திய எழுத்தினை விகாரப் படுத்தலாம். விகாரம் என்றால் மாற்றம். இவ்வகை விகாரங்கள் இலக்கணத்தின் வரையறையின்படி குறிப்பிட்ட சில அமைப்புகளின் வழியாக நிகழ்கின்றன. குறில் நெடிலாகும், நெடில் குறிலாகும். வல்லினம் மெல்லினமாகும், மெல்லினம் வல்லினமாகும். இவை முதன்மையான விகாரங்கள்.

இப்போது மக்கள் என்பதை என்பதை எப்படி விளிக்கலாம் ? கடைசி எழுத்திற்கு முந்திய எழுத்தையும் மாற்றி விளிக்கலாம். மக்கள் என்ற சொல்லில் கடைசி எழுத்திற்கு முந்திய எழுத்து எது ? க என்னும் எழுத்துத்தான் அது. க என்னும் குறில் எழுத்தினை நெடிலாக்குவதுதான் அம்மாற்றம். க கா ஆகிவிடும். மக்கள் என்பது விளிக்கப்படும்போது மக்காள் ஆகும். இந்த மக்காள் என்பதுதான் ஈற்றெழுத்தான ள் மறைந்து பேச்சு வழக்கில் ‘மக்கா’ என்று நிற்கிறது. மக்களே என்பது எழுத்தாளர் வழக்கு. மக்கா என்பதுதான் மக்களிடம் நிலைத்த பேச்சு வழக்கு. இதே முறைப்படி எண்ணற்ற விளிகளை அமைக்கலாம். அவ்வாறே அமைத்தும் வருகிறோம். தோழர்களே என்பது ஏகாரம் சேர்த்த விளி. தோழர்காள் என்பது ஈற்றெழுத்திற்கு முந்திய எழுத்தினை நெடிலாக்கிய விளி. நண்பர்களே என்பது ஒருவிளி, நண்பர்காள் என்பது இன்னொன்று,

இளையவர்களிடையே அம்மா, அப்பா என்னும் பெயர்கள் அவர்கள் விளித்த வடிவிலேயே நிலைபெற்றதைப்போல் பிற உறவுப் பெயர்களும் விளி வடிவிலேயே நிலைத்துவிட்டன. ‘சித்தப்பா வந்தாரு, பெரியப்பா பேசினாரு, மாமா சொன்னாரு’ என்று மிக இயல்பாகச் சொல்கிறோம். அவைதாம் அவ்வுறவுக்குரிய பெயர்களாகவும் பல்லோரால் ஏற்கப்பட்டுவிட்டன. அவற்றின் முழுமையான பெயர்ச்சொல் வடிவங்கள் எவை ? சிற்றப்பன், பெரியப்பன், மாமன் என்பவைதாம் அவை. இச்சொற்களின் ஈற்றில் உள்ள அன் விகுதி ஒருமையாய் இருப்பதால் சொல்வதற்கு மனத்தடை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அகவையில் மூத்தவர்கள் அவ்வுறவுப் பெயர்களைக் கூறுகையில் ‘உன் சித்தப்பன் எங்கே, பெரியப்பன்கிட்டே சொல்லிட்டியா, உன் மாமனுக்குத் தெரியாதா’ என்று மிக இயல்பாகக் கேட்பார்கள்.

நம் இயல்பு வாழ்க்கையில் கலந்துவிட்ட ‘பெரியோரை மதித்தல்’ என்னும் பண்பாட்டு உணர்ச்சியால் இப்பெயர்களை ஒருமை வடிவில் பயன்படுத்த விரும்பாமல் விளிவடிவிலேயே பயன்படுத்துகிறோம். இன்னும் ஒருபடி மேலே போய் இவ்வகை உறவுப்பெயர்களின் ஒருமை விகுதியோடு பன்மை விகுதியைச் சேர்த்தும் பயன்படுத்துவதுண்டு. அப்பனை அப்பாரு என்பது ஒருவகை. அப்பன் என்பது அப்பனார் ஆன வடிவத்தைத்தான் அப்பாரு என்றும் வழங்குவார்கள். அம்மதிப்பு வடிவம் அப்பனின் அப்பனுக்குச் சென்றது. அவ்வாறே மாமன் என்பது மாமனார் ஆகிறது. தாய் தந்தை என்பனவும் தாயார் தந்தையார் என்றாகின்றன. தம் அப்பன் என்பதே காலப்போக்கில் தமப்பன், தகப்பன் என்றான வடிவம். அதுவே தகப்பனார் ஆகிறது.

உறவுகளின் பெயர்கள் இளையோர் மனத்தில் விளிவடிவிலேயே தங்கிவிட்டமையால் அவற்றையே முழுப்பெயராகப் பயன்படுத்துவதும் வழக்காகி நிலைத்துவிட்டது.

முந்தைய பகுதிகள்

உறவுப் பெயர்கள்
மொழி மட்டும் தப்பித்துவிடுமா ?
உறவுப் பெயர்கள்
தமிழுக்குத் தலைப்பில்கூட இடமில்லையா?
உறவுப் பெயர்கள்
பூமர் என்பவர் யார் ?
உறவுப் பெயர்கள்
தாய்மொழிக் கல்விக்கு முன்னரே பிறமொழி கற்பது வன்முறை
உறவுப் பெயர்கள்
இளையோர் மொழிக்களம் | புரோ எப்போது வழக்கொழியும் ?
உறவுப் பெயர்கள்
நம்புங்கள், குழந்தையாய் இருக்கும்போதே சொற்களை உருவாக்கினீர்கள் !
உறவுப் பெயர்கள்
ஒவ்வொரு சொல்லாய்ப் பழகி அறியும் குழந்தை !
உறவுப் பெயர்கள்
கோழியை ஒன்றும் செய்ய முடியாது !
உறவுப் பெயர்கள்
எடுத்த எடுப்பில் ஏபிசிடியைக் கற்றுக்கொடுக்கலாமா ?
உறவுப் பெயர்கள்
வீட்டில் பந்தாக இருந்தது, பள்ளியில் பால் ஆகிறது !
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம்
உறவுப் பெயர்கள்
குழந்தையின் தாய்மொழி மனம் சுக்குநூறாக உடையும் இடம்
உறவுப் பெயர்கள்
ஒரு மொழியிலேனும் புலமையும் ஆற்றலும் வேண்டும் ! அது எந்த மொழியாக இருக்கவேண்டும் ?
உறவுப் பெயர்கள்
இளையோர் மொழிக்களம் | ‘How I wonder what you are' என்ற தொடர் குழந்தை கற்க வேண்டிய தொடரா?
உறவுப் பெயர்கள்
இளையோர் மொழிக்களம் | தமிழிலும் தள்ளாட்டம் ஆங்கிலத்திலும் அரைகுறை!
உறவுப் பெயர்கள்
ஆங்கில ஆசிரியர்கள் நூல்களை எழுதுகிறார்களா ?
உறவுப் பெயர்கள்
இளையோர் மொழிக்களம் | விளையாட்டில் வளர்ந்த மொழி
உறவுப் பெயர்கள்
இளையோர் மொழிக்களம் | நிலக்கரிக்கு ஆங்கிலச் சொல் தெரியுமா?
உறவுப் பெயர்கள்
இளையோர் மொழிக்களம் |மொழியின் மடியில் விளைந்த சொற்கள் - 18
உறவுப் பெயர்கள்
இளையோர் மொழிக்களம் பகுதி 19 - செம்மி ஜிம்மி ஆனது எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com