இளையோர் மொழிக்களம் 23 | 'செவன் அண்ட் ஆப் சனி’ என்று ஏன் சொல்வதில்லை ?

‘ஏழரைச் சனி நடக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். ‘செவன் அண்ட் ஆப் சனி நடக்கிறது’ என்று யாருமே சொல்லமாட்டார்கள். சனி என்றுதான் சொல்வார்கள். சாடர்ன் என்று ஆங்கிலத்தில் வாய்தவறிக்கூடச் சொல்லமாட்டார்கள். ஏன் சொல்வதில்லை ?
எண்கள்
எண்கள்கோப்புப்படம்

இளமையில் நாம் அடிக்கடி பயன்படுத்த நேர்கின்ற சொற்கள் எவை ? அவை பெரும்பாலும் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களாக இருக்கும். அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களில் எண்ணுப் பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் எல்லார்க்கும் உண்டு. எண்ணும் பெயர்களைத் தமிழில் சொல்வதுதான் எங்கள் வழக்கம்.

ஆங்கிலக் கல்வியினால் நுழைந்த மிகப்பெரிய கேடு எண்ணுப் பெயர்களைத் தமிழில் சொல்வதைத் தவிர்த்து ஆங்கிலத்திலேயே சொல்வதுதான்.  

- ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது

- பத்து, நூறு, ஆயிரம், கோடி

முதலானவை தமிழில் உள்ள எண்ணுப் பெயர்கள். கால், அரை, முக்கால், சுழியம் ஆகியவையும் உண்டு.

விரல்விட்டு எண்ணக்கூடிய இந்தச் சொற்களைத் தமிழில் சொல்வதற்கு என்ன தயக்கம் ? யார் தடுப்பவர்கள் ? நூறாண்டுகட்கு முந்திய தமிழ் நூல்கள் இணையத்திலேயே பலப்பல கிடைக்கின்றன. அவற்றில் பக்க எண்களாகக் குறிப்பிடப்பட்டிருப்பவை தமிழ் எண்ணெழுத்துகளாகத்தாம் இருந்தன.

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்று எழுதப்படுகின்ற இவ்வெண்ணெழுத்துகட்குத் தமிழ் வடிவம் உண்டு. க உ ங ச ரு சா எ அ கூ 0 என்பவையே தமிழில் எண்களைக் குறிக்கும் எழுத்து வடிவங்கள். இவை உயிர்மெய்யெழுத்து வடிவத்திலேயே இருந்தன என்று கூறவில்லை. அவற்றில் சிறு திருத்தங்களோடு எண்ணுப் பெயர்களாக விளங்கின.

எடுத்துக்காட்டாக,

சா என்ற எண்ணெழுத்து ச என்பதற்குரிய எழுத்து வடிவிலும், அருகிலுள்ள துணைக்கால் பாதி உயரத்திலும் இருக்கும்.

சு என்பதற்கு ஈற்றில் சிறு மேல்கீழ்க் கோடு தோன்றுகிறதே, அந்தக் கோடு இருமுறை தோன்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

மூன்றைக் குறிக்க எழுதப்பட்ட ங என்பது ஈற்றில் உள்ள மேல்கீழ்க் கோடு இல்லாமல் இருக்கும்.

இவற்றின் வரிவடிவத்தை இணையத் தேடலில் எளிதில் பெறலாம். தமிழ் எண்களை இன்றைய தலைமுறையினர் எப்படி நினைவிற்கொள்ளலாம்? அதற்கு எளிய தொடர் ஒன்று உள்ளது.

‘கடுகு உழுந்து ஙனைச்சுச் சமைச்சு ருசிச்சுச் சாப்பிட்டேன் என்று அவன் கூறினான்’

என்ற தொடரை நினைவு வைத்துக்கொண்டால் போதும். அத்தொடரின் முதலெழுத்துகள் யாவும் வரிசைப்படியான தமிழ் எண்கள். 

எண்ணுப் பெயர்களைத் தமிழில் எழுதலாம் என்பது உரிமை. அவ்வுரிமையின் அடிப்படையில் சிலர் தத்தம் வண்டிகளில் எண்ணுப் பெயர்களைத் தமிழில் எழுதியிருப்பதைக் காணலாம். சட்டப்படி அவ்வாறும் எழுதலாகும். இன்றும் அரசுப் பேருந்துப் பதிவெண்களில் G என்பதற்கு ஈடான தமிழாக நா என்று உயிர்மெய் முதலெழுத்து இருப்பது அவ்வகையில்தான். அவ்வாறு எழுதியதன் வழியாகப் பெரும்போக்கிற்கு மாற்றாக எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லைதான்.

ஆனால், தமிழில் எழுதுவோரின் உணர்வுகளையும் மதிக்கத்தான் வேண்டும். நம் மாநிலத்தில்தான் எண்களை எழுதுமிடங்களில் தமிழ் எண்களைக் காணமுடியவில்லை. நான் மகாராட்டிர மாநிலத்தில் அலைந்தபோது அங்கே சாலையோரத்தில் தொலைவுக்குறிக் கற்களில்கூட நாமறிந்த எண்முறையில் எழுதப்பட்டிருக்கவில்லை. அவர்கள் மொழியெண்கள்தாம் எழுதப்பட்டிருந்தன. 

எண்களைத் தமிழில் எழுதுவது தமிழில் எழுதும் முறைகளில் ஒன்று. எண்களைத் தமிழில் கூறுவது தமிழில் பேசும் முறைகளில் தலையாயது. தமிழ் எண்களைத் தமிழில் சொல்வதற்கு மாற்றான ஆங்கிலக் கலப்பு தோன்றுமிடத்தில் ஒரு குழப்பம் இருக்கிறது. அது ஒன்று என்ற எண்ணின் இருமொழிப் பயன்பாட்டு ஒற்றுமை. தமிழில் ஒன்று என்பதனைப் பேச்சு வழக்கில் ‘ஒன்னு’ என்கிறோம்.

ஆங்கிலத்திலும் ஒன்று என்ற எண்ணுக்கு ‘One’ என்பதே பெயர். ஒன்று என்ற எண்ணின் தமிழ்ப் பேச்சு வழக்கு ஒலிப்பும், ஆங்கில ஒலிப்பும் முற்றிலும் ஒன்றே. இந்தக் குழப்பமானது ஒன்னு என்பதைத் தமிழில் சொல்கிறோமா, ஆங்கிலத்தில் சொல்கிறோமா என்ற பாகுபாட்டினை உணர்த்துவதில்லை. ஆனால், அடுத்தடுத்த எண்களைச் சொல்லும்போதுதான் தமிழா ஆங்கிலமா என்ற தெளிவே பிறக்கிறது.

நான் தமிழில்தான் பேசுவேன் என்ற கொள்கையுடையவர் என்றால் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டா. எண்களைத் தமிழில் சொன்னாலே போதும். என்ன படிக்கிறீர்கள் ? ‘டுவெல்த்து’ என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடாது. ‘பன்னிரண்டாவது’ என்று தமிழில் சொல்ல வேண்டும். ‘பர்ஸ்ட் மார்க் எடுக்கவேண்டும்’ என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடாது. ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டும்’ என்று தமிழில் கூறவேண்டும். ‘செகண்ட் ஷோ போகிறேன்’ என்று ஆங்கிலத்தில் சொல்வானேன்? ‘இரண்டாவதாட்டம் போகிறேன்’ என்று தமிழில் சொல்லலாமே.

தமிழ்
தமிழ்

இவ்வாறு மதிப்பான சொற்களில் எல்லாம் ஆங்கிலத்தில் சொல்வது இங்கே போலி நாகரிகமாகப் பரவியது. அதே நேரத்தில் சற்றே இழிவான, சிறுமையான நிலைகளில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதைக் கமுக்கமாகத் தவிர்ப்பதைப் பார்க்கலாம். ‘ஏழரைச் சனி நடக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். ‘செவன் அண்ட் ஆப் சனி நடக்கிறது’ என்று யாருமே சொல்லமாட்டார்கள். சனி என்றுதான் சொல்வார்கள். சாடர்ன் என்று ஆங்கிலத்தில் வாய்தவறிக்கூடச் சொல்லமாட்டார்கள். ஏன் சொல்வதில்லை ?

எண்ணுப் பெயர்களைப் பயன்படுத்துவதில் பல நுணுக்கமான தன்மைகள் செயல்படுகின்றன. இந்த முறைகளில் பலவகையான பண்பாட்டு நொடிப்புகள் அடங்கியுள்ளதைக் காணலாம்.  ஆங்கிலத்தையும் தமிழையும் ஒருவர் எத்தகைய படிநிலையில் வைத்துப் பார்க்கிறார் என்பது புலப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com