ஒவ்வொரு சொல்லாய்ப் பழகி அறியும் குழந்தை !

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 7
babies
babiespixabay

ஒரு குழந்தை தன் மொழியுலகத்தை ஒவ்வொரு சொல்லாகக் கட்டமைக்கிறது. அதன் முதற் பத்துச் சொற்கள், முதல் ஐம்பது சொற்கள் எனக் கணிக்கையில் அவை உறவுப் பெயர்கள், உணவுப் பெயர்கள் என இருப்பதைப் பார்த்தோம். குழந்தைக்குக் களிப்பூட்டும் வினைச்சொற்களும் இடையிடையே சேர்கின்றன. ‘பூனை போகுது பாரு, நிலா வெளிச்சம் பாரு’ என்று அக்குழந்தை கேட்கத் தொடங்கும். தனக்குள் மெல்ல இறங்கும் மொழியை அக்குழந்தை சேர்த்து வைக்கிறது. வளர வளர அதன் மொழியுலகம் திரண்டு உருப்பெற்றுவிடுகிறது. அதன் நினைவுத்திறன் இன்னொரு வலிமையான காரணம்.

இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம்

இரண்டாம் அகவை நிறைந்து மூன்றாம் அகவைக்குள் அடியெடுத்து வைக்கும் குழந்தை மொழியினை அறியும் பெருந்தொடர் வினையில் தன்னை இணைத்துக்கொள்கிறது. குழவிப் பருவத்தைக் கடந்து வர சில நூறு சொற்களே போதும்தான். ஆனால், அச்சில நூறு சொற்கள் அதன் மொழியுலகத்தைக் கட்டமைத்துவிடுகின்றன. அச்சொற்களைப் பற்றிக்கொண்டே அதன் மொழிப் பயன்பாட்டில் அடுத்தடுத்த சொற்களை நோக்கி நகர முடியும். பொருளை உணர்ந்துகொள்ளவும் முடியும்.

குழந்தையாய் இருக்கையில் நம் பேச்சு மொழி உருவாகிவிடுகிறது. அதற்கு இடப்பட்ட அடித்தளமே மொழிமனமாகிறது. அங்கேதான் தாய்மொழிக் கட்டுமானம் நடந்தது. குழந்தை செவிமடுக்கும் பேச்சுச் சொற்கள் அனைத்தும் அதற்கு விளங்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், விளக்கத்திற்குரிய கருவிகள் அதற்குக் கைவந்திருக்கும். அப்படித்தான் நம் உள்ளே மொழி வளர்கிறது. ஒருவகையில் அது தானாகவே வளரும் இயல்புடையது எனலாம்.

‘கண்ணு’ என்று அழைக்கையில் ஒன்று விளங்கும். ‘கண்ணு மூடு’ என்கையில் ஒன்று விளங்கும். ‘கண்ணைக் குத்திருவேன், காதைத் திருகிருவேன்’ என்று செல்லமாய் மிரட்டுகையில் அது தானாகவே வேறொன்றாக விளங்கிக்கொள்கிறது. இவ்வாறுதான் ஒரு சொல் இன்னொரு சொல்லை அழைத்து வந்து அறிமுகப்படுத்தும்.

மழலைப் பாட்டு கேளாத குழந்தை இருக்க முடியாது. பேச்சுக்கும் பாட்டுக்குமான வேறுபாடு பிஞ்சு நிலையிலேயே ஒரு குழந்தைக்குத் தெரிகிறது. பேச்சின் இயற்கையான ஒலிப்பு ஒரு வகையில் இருக்கையில் பாட்டின் ஏற்ற இறக்கம் அதற்குப் பிடித்துப்போய்விடுகிறது.

வலைக்காணொளிகளில் பார்வை எண்ணிக்கையில் மிகுந்திருக்கும் காணொளிகள் எவை என்று தெரியுமா ? குழந்தைப் பாடல்கள்தாம். அவைதாம் பல கோடிக்கணக்கில் ஓடவிடப்பட்டிருக்கின்றன. மேலும் மேலும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஒரு குழந்தைப் பாட்டுக்குரிய சொற்கள், பொருள்வெளி, கற்பனை, சொல்லிசை, மொழியமைப்பு எனப் பலவாறு ஆராய்ந்து பார்த்தால் எண்ணற்ற உண்மைகள் புலப்படுகின்றன.

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலைமீது ஏறி வா
மல்லிகைப்பூக்கொண்டு வா !

ஒரு பாடலில் எவ்வளவு எளிய சொற்கள் ! இடம்பெற்றவை யாவும் இயற்கைப் பொருட்பெயர்கள் ! வினைச்சொற்களாய் இருப்பவை யாவும் இயல்பாய் நிகழக்கூடிய எளிய வினைகள் ! இவைதாம் குழந்தையின் மொழியுலகத்துத் தலைச்சொற்கள்.

நிலா, மலை, மல்லிகைப்பூ என்பன பெயர்ச்சொற்கள். வா, ஓடு, ஏறு, கொள் என்பன வினைச்சொற்கள். எல்லாமே அடிப்படையான முதற்சொற்கள். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையான தொடர்போல் தெரிவதுதான். ஆனால் இங்கே மொழியானது அதன் செவ்வியல் வடிவத்தில் பதியனிடப்படுகிறது என்பதை அறிவீர்களா ?

நிலா என்று ஒரு பொருட்பெயர். நிலா நிலா என்று ஓர் அடுக்குத் தொடர். ஓடி வா என்று ஒரு வினையெச்சத் தொடர். நிலா ஓடிவா என்று விளித்தொடர். பாருங்கள், எல்லாமே மொழிக்கட்டுமான முன்னெடுப்புகள்.

எல்லாச் சொற்களும் ஓர் அசை, ஈர் அசை என்று அமைந்தவை. குழந்தை பழகும் முதலொலிப்புகள் யாவும் ஒற்றை அசையளவுக்குள் இருக்கும். ‘ங்ஙா’ என்பது போல மெய்ம்முதலான பயிற்சிகள் நடக்கும்தான். பிறகு அதன் தாய் தந்தையர் சொல்வதைப்போலவே போலச்சொல்ல முயலும். நாளடைவில் அதற்கு மொழிச்சொற்கள் பழக்கமாகின்றன.

எல்லாமே முறையாகத்தான் நடந்துகொண்டிருந்தன. இன்றைய குறுக்கீடுகள்தாம் எல்லாவற்றையும் குலைத்துவிட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com