இளையோர் மொழிக்களம் |மொழியின் மடியில் விளைந்த சொற்கள் - 18

எழுத்தாளர், கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 18
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம்Canva

ஒருவர் எம்மொழிக்கு உரியவராயினும் அவருடைய வாழ்க்கையில் புதுப்புதுச் சொற்கள் தொடர்ந்து இடம்பெற்றபடி இருக்கும். அவர் ஒருமொழிக்காரராக இருந்துவிட்டால் ஒரு துன்பமுமில்லை. அவர் பெறுகின்ற புதுச்சொற்கள் யாவும் அவருடைய மொழியின் ஈகை. புதிய சொற்களைப் பயன்படுத்தத் தேவையற்ற வாழ்க்கையை நாம் யாரும் வாழவில்லை. இளமைப் பருவத்தில் இடம்பெறுகின்ற புதுச்சொற்கள்தாம் ஒருவரை வியக்கவைத்த சொற்களாகவும் இருக்கும்.

இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம்

முறம் என்ற சொல்லைப் பயன்படுத்தி வாழ்கின்ற வாழ்க்கையினர்க்கு அவ்வொரு சொல்லே அப்பொருளைக் குறிக்கப் போதுமானது. ஆனால், அவர் தென்தமிழ்நாட்டிற்குச் செல்லும்போது ‘சுளகு’ என்ற இன்னொரு சொல்லை அறியப்பெறுகிறார். ‘முறம்’ என்ற சொல் எப்பொருளை உணர்த்தியதோ அதே பொருளைத்தான் ‘சுளகு’ என்ற சொல்லும் உணர்த்துகிறது. ஆனால், சுளகு என்ற சொல் இப்போது புதுவருகையாய் அவருடைய மொழியுலகிற்குள் அடியெடுத்து வைக்கிறது. அச்சொல் அவர்க்குச் சிறிய வியப்பையும் தரவல்லது.

நம்மில் பலரும் எளிய ஊர்ப்புற வாழ்க்கையினராக இருந்திருப்போம். பிறகு கல்வி கற்பதற்காக அருகிலுள்ள நகரங்களை நாடினோம். நானும் அப்படித்தான் இருந்தேன். என்னுடைய மேல்நிலைப் பள்ளி வாழ்க்கையில் நான் முற்றிலும் புதிய நகர்ப்புறச் சூழலை எதிர்க்கொண்டேன். பள்ளி நண்பர்கள் வாயிலாகச் சில புதிய சொற்கள் அறிமுகமாயின. அவற்றில் ‘பந்தா’ என்ற சொல்லும் ஒன்று. ’அவன் பந்தா பண்றான்’ என்று சொல்லும்போது பொருள் தெரியாமல் விழித்தேன். அவர்களுடைய விளக்கத்திற்குப் பிறகே ‘செருக்குறத் திரிதல், பீற்றல்’ என்று ஒருவாறு விளங்கியது. அச்சொல் அகராதியில் இல்லையெனினும் அது ஒருவகையான ‘குழூஉக்குறிச் சொல்’ என்று கொள்ளலாம். ஒரு காலத்தில் எல்லாராலும் பயன்படுத்தப்பட்ட ‘பந்தா’ என்னும் சொல் தற்காலத்தில் அருகிப் போய்விட்டதையும் காணலாம்.

இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | நிலக்கரிக்கு ஆங்கிலச் சொல் தெரியுமா?

பல்வேறு வாழ்க்கைச் சூழலிலிருந்து வரும் மாணாக்கர்கள் தத்தம் தனிச்சொற்களைப் பள்ளி வாழ்க்கையில்தான் அறிமுகப்படுத்திக்கொள்கின்றனர். புதிய சொற்களைப் பரிமாறிக்கொள்வதில் பள்ளி வாழ்க்கைக்கு ஒரு பங்குண்டு. மாணாக்கர்கள் மட்டுமில்லை, ஆசிரியர்களும் தனிச்சொல் உடைமையாளர்கள்தாம். “புரிந்ததா ?” என்று வினவும் ஆசிரியர்களை மட்டுமே அறிந்திருந்த நான் “விளங்குதா ?” என்று கேட்கும் ஆசிரியரையும் பெற்றேன். என்னைப் பொறுத்தவரையில் ‘விளங்குதா’ என்ற சொல்லைப் பேச்சு மொழியில் வழங்கிய முதல் ஆசிரியர் அவர்தான்.

காலப்போக்கில் நமக்கு ஏதேனும் ஒரு புதிய சொல் தேவைப்படுகிறது. அத்தகைய தேவை எழும்போதெல்லாம் மொழியே தன் கருவூலத்திலிருந்து ஒரு சொல்லை எடுத்துத் தருகிறது. நன்கு தோய்ந்த மொழிமனம் அத்தகைய புதுச்சொல் ஒன்றை மொழியின் மடியிலிருந்து எடுத்துக் கொடுக்கும். அவ்வாறு அண்மைக் காலத்தில் வரவான சொல்தான் ‘செம’ என்பது. இந்தச் சொல்லைத் தற்போது பயன்படுத்தாதவரே இல்லை எனலாம். மேலோட்டமாகப் பார்த்தால் இச்சொல்லானது தோற்றுவாய் இல்லாத தான்தோன்றிச் சொல் என்பதுபோல் தெரியலாம். உண்மை அதுவன்று. ‘செம்மை’ என்கின்ற மிகவும் அழகிய சொல்தான் ‘செம’ என்று பயன்பாட்டில் வந்தது. செம்மையாக இருக்கிறது என்பதுதான் செமையா இருக்கு. செம்மை என்கின்ற சொல்லின் பண்புத்தொகை வடிவம்தான் செந்தமிழ். செம்மை என்றவுடன் சிவப்பு என்ற பொருளுக்குப் போய்விடக்கூடாது. செம்மை என்பதற்கு நிறத்தளவில் சிவப்பு என்ற பொருளும் உண்டுதான். ஒழுங்கில் மேன்மையில் அழகில் பெருமையில் செப்பமுற்ற ஒரு தன்மைதான் செம்மை. செம்மையுற்ற ஒன்று இனி மாறாது.

இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | தமிழிலும் தள்ளாட்டம் ஆங்கிலத்திலும் அரைகுறை!

ஒன்றின் சிறப்பினைக் குறிக்க ஒரு சொல் தேவைப்பட்டபோது ‘செம’ என்ற சொல்லை நம்மை அறியாமல் எடுத்தாண்டோம். அது மொழியின் மடியில் விளைந்த பெருஞ்சொல். தானாக நம் பேச்சு மொழியில் இடம்பெற்றுவிட்டது. இனி அந்தச் சொல்லை யாராலும் தவிர்க்கமுடியாது.

இவ்வாறு மொழியின் ஈகையாலேயே பல சூழ்நிலைகட்கு வேண்டிய புதுச்சொற்களை ஈடுகட்டுகிறோம் நாம். “காத்து என்னப்பா விசுவிசுன்னு வீசுது !” என்கிறோம். காற்றின் இயங்கும் ஒலி ‘விசுவிசு’ என்பதைப்போன்ற ஒன்று. அதுவே அதன் இயக்கத்தைக் குறிக்கும் வீசு என்ற வினையாகியிருக்கலாம். மீண்டும் அதன் வீசுநிலையைக் குறிக்க விசுவிசு என்ற இரட்டைக் கிளவியை ஆக்கிப் பயன்படுத்துகிறோம். இவ்வாறு எல்லா நிலைமைகட்கும் சூழல்கட்கும் தேவைகட்கும் தன்னைத் தகவமைத்துக்கொள்ள மொழி அணியமாக இருக்கிறது. அதனை அவ்வடிவில்தான் நாமும் பேச்சில் பயன்படுத்துகிறோம். மொழியின் பயன்பாட்டு இயற்கை இதுதான் என்பதனை உணர்ந்தவர்கள் இக்கூற்றின் வலிமையை ஏற்றுக்கொள்வார்கள். இங்கே பிறமொழிச் சொல் உள்ளே வரவேண்டிய தேவையே இல்லை.

இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் | ‘How I wonder what you are' என்ற தொடர் குழந்தை கற்க வேண்டிய தொடரா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com