இளையோர் மொழிக்களம் | ‘How I wonder what you are' என்ற தொடர் குழந்தை கற்க வேண்டிய தொடரா?

எழுத்தாளர், கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 13
How I wonder what you are
How I wonder what you areFile Image

தாயிடமிருந்து மொழியைக் கற்கும் குழந்தை முதலில் இசைநயமான ஒலித்தொடர்களைத்தான் உணர்கிறது. தாய்ச்சொற்கள் எப்படிப்பட்ட கொஞ்சுமொழியாக இருந்தாலும் அவற்றின் ஏற்றத்தாழ்வுகள்தாம் முதலில் புலப்படும். ஒலிப்பின் ஏற்ற இறக்கத்தையும் நீட்டல் குறுக்கத்தையும்தான் இசை என்கிறோம். கைக்குழந்தையை ஏந்திப் பேசுவோர் யாராயினும் தட்டையான ஒலிப்பில் எதனையும் கூறுவதில்லை. அந்தக் கொஞ்சலில், புகழ்தலில், தானாகவே ஓர் இசைநயம் வந்தமரும். குழந்தையின் எதிர்மொழியின்றி நாமாகவே பேசிக்கொண்டிருந்தாலும் அந்தப் பேச்சின் இசையழகு குன்றுவதில்லை.

கவிஞர் மகுடேசுவரன்
கவிஞர் மகுடேசுவரன்

குழந்தையின் புலன் உணர்வுகளைத் தூண்டும் பாடல் வகைதான் தாலாட்டு. நம் பாட்டிமார்கட்குத் தாலாட்டுப் பாடல்கள் பல தெரியும். இன்றைய தலைமுறைத் தாயார்கட்குத் தாலாட்டுப் பாக்கள் தெரியுமா ? தங்கள் குழந்தைகளைத் தாலாட்டுப் பாட்டு பாடித் தூங்க வைக்கிறார்களா ? உறுதியான விடையைக் கூற முடியவில்லை. ஆனால், தாங்கள் கேட்டறிந்த பாடல் எதனையேனும் பாடக்கூடும். அது திரைப்படப் பாடலாகக்கூட இருக்கலாம். எப்படியோ ஒரு பாடலானது குழந்தையைச் சேர்கிறது.

பாடல் வழியாக இசையைத் துய்க்கும் குழந்தை, கூடவே மொழிச் சொற்களையும் அறிகிறது. அவற்றின் பொருள் தெரியாதுதான். மொழியடிப்படைச் சொற்களின் ஒலிப்பமைப்பு அதன் மனத்தில் பதியத் தொடங்கும். “மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூச் செண்டாலே அத்தை அடிச்சாரோ அரளிப்பூச் செண்டாலே” என்னும் தாலாட்டுப் பாடல் வரிகளின் ஒலியமைப்பைக் கூர்ந்து நோக்குங்கள். எண்ணற்ற வாய்த்திருப்பல்களால்தான் அதனைப் பாட முடியும். ‘ஆராரோ ஆரிரரோ, தாலாலே தாலேலோ, லுலுலுலு ஆயி’ என்னும்போது ஏற்படும் உதட்டசைவுகளும் குவிப்புகளும் அருமையானவை. குழந்தையின் செவிப்புலக்கூர்மை மேம்பட்டு மொழிப்புலக்கூர்மை தோன்றுமிடம் அது. அவ்வொலிப்புகள் தோன்றுவதைக் காணும் குழந்தை அவ்வாறே தன் உதடுகளைத் திருப்பவும் குவிக்கவும் விரிக்கவும் முயல்கிறது. கருவானவுடன் தானாக வளர்த்துத் தந்தது இயற்கையின் செய்கை. அந்தக் குழந்தையை ஒவ்வொரு நொடியாகப் பார்த்து வளர்த்து ஆளாக்குகிறது தாய்மை. தாய் புகட்டுவதில் பால் கண்ணுக்குப் புலப்படுகிறது. மொழி கண்ணுக்குப் புலப்படாதது.

தாலாட்டு
தாலாட்டு

இத்தகைய பாடல்களைக் கேட்டு வளர்ந்த குழந்தைதான் பள்ளியில் சேர்க்கப்படுகிறது. அதற்கு முதன்முதலில் கற்றுத் தரப்படுவது ஓர் ஆங்கிலப் பாடலாக இருப்பின் அது எப்படிச் சரியாகும் ? எம் அகவையர் அன்று முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டபோது எங்களுக்குச் சொல்லித் தரப்பட்ட பாடல்கள் யாவும் தமிழ்ப் பாடல்களே. “அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா” என்னும் பாடல்தான் முதன்முதலில் சொல்லித் தரப்பட்டது. அந்தப் பாடலைப் பயில்வதற்கு அவ்வளவு பிடித்தமானதாக இருந்தது. சொல்லித் தரும்போதே மனப்பாடம் ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்து சொல்லிக்காட்டும்போது தாய்தந்தையர் எவ்வளவு மகிழ்ந்திருப்பர் ! அன்றைய அமைதியான கல்விச் சூழ்நிலையில் பாடல்களை ஊன்றிக் கற்றது எங்களது பெரும்பேறு. அதன் பிறகு “மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்” என்ற பாடலைக் கற்றோம். ‘அ இதுவோர் அத்திப்பழம் ஆ என்பவன் ஆசைப்பட்டான்’ என்ற பாடல் புதிர்போல் இருக்கும். குழந்தைப் பாட்டு குழந்தை அறிந்த மொழியில் குழந்தைப்பாங்கு மாறாமல் இருந்தது.

அதே குழந்தைக்குத்தான் இன்று ‘ஏ பார் ஆப்பிள்’ என்று கற்றுத்தரப்படுகிறது. அந்தக் குழந்தைக்குத் தமிழ் மழலைப் பாடல்கள் சொல்லித் தரப்படுகின்றனவா ? “நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா ! மலைமீது ஏறிவா ! மல்லிகைப் பூக்கொண்டுவா !” என்னும் பாடல் கற்றுத் தரப்படுகிறதா ? தெரியவில்லை. ஆனால், உறுதியாகச் சொல்ல முடியும் - ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்ற பாடல் கற்றுத் தரப்படுகிறது. தமிழ் மொழியில் ஒரு பாடலைக் கற்பது பாடலின்பத்தைத் தருமா ? ஆங்கிலத்தில் ஒரு பாடலைப் பாடப் பழகுவது பாடலின்பத்தைத் தருமா ? தமிழை வீட்டு மொழியாகப் பேசிப் பழகி வரும் குழந்தைக்குத் தமிழ்ப்பாடல் விலக்கப்பொருளாகத் தோன்றாது. பாடலும் இசையும் குழந்தைக்கு இனிமைச் செயலாகும். ஆனால், ஆங்கிலம் கற்றேயாக வேண்டும் என்ற பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் கற்பிக்கப்படும் ஆங்கிலப் பாடல் அதற்கு முதல் ஒவ்வாமையை ஏற்படுத்தாதா ? தமிழ்ப்பாடலில் குழந்தைக்கு விளங்கும் பொருள் ஆங்கிலப் பாடலில் விளங்கியிருக்குமா ? ஆங்கிலத் தொடரை வாய் குதப்பியபடி வெளிப்படுத்தும் அதன் மழலையில் மகிழ வேண்டியவர்களா நாம் ?

தமிழ்
தமிழ்

“அம்மா இங்கே வா வா” என்ற தொடரின் குழந்தைக்கு நெருக்கமான பொருள் அழகு என்ன ! “How I wonder what you are” என்ற தொடர் ஆங்கிலம் கற்ற பெரியவர்களுக்கே புரிந்துகொள்வதற்குப் புலமை கோரும் தொடரில்லையா ? அதனை எப்படி நாம் குழந்தைகட்குச் சொல்லிக் கொடுக்கத் துணிந்தோம் ? பொருள் விளங்காச் சொற்களைக் குழந்தைக்குப் புகட்டுவோம், பிறகு எப்படியோ கற்றுத்தானே ஆகவேண்டும் என்னும் மனநிலையா ?

- கவிஞர் மகுடேசுவரன்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com