
2025ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த டாப் 15 விளையாட்டு செய்திகள்..
உங்களது கனவுகளை உயிர்ப்புடன் வைத்திருங்கள்... எத்தனை துயரங்கள் வந்தாலும், உலகமே உங்களுக்கு எதிராக நின்றாலும் உங்களது கனவுகளை மட்டும் உயிர்ப்புடன் வைத்திருங்கள்... எங்கோ படித்த ஞாபகம்.. ஐபிஎல் கோப்பை என்பது ஆர்சிபிக்கு கிட்டத்தட்ட 17 ஆண்டுகால கனவாகவே இருந்தது. ஏகப்பட்ட சூப்பர் ஹீரோ வீரர்கள் அக்கனவுகளை தங்கள் தோள்களில் சுமந்திருந்தாலும், கோப்பையை உச்சிமுகரும் வாய்ப்பு என்பது வாய்க்கவேயில்லை..
ஒருவேளை சூப்பர் ஹீரோ வீரர்கள் தான் ஆர்சிபிக்கு கோப்பை கிடைக்காமல் போக காரணமோ என தற்போது தோன்றுகிறது. ஆம் சூப்பர் ஹீரோ வீரர்கள் இருந்துவிட்டால் நம்மால் கோப்பையை வென்றுவிட முடியும் என்ற எண்ணத்தில் இருந்த ஆர்சிபிக்கு 17 வருடங்களாக சவுக்கடி மட்டுமே விழுந்தது.
ஆர்சிபியா அவங்க ஒரு சோக்கர்ஸ் அணி, ஜோக்கர்ஸ் வீரர்கள், பெண்கள் அணியே கோப்பை வாங்கிட்டாங்க, அவங்களால வாங்க முடியல என்ற ஏகபோக ஏலனங்களை கண்டபிறகு தான், 18வது ஐபிஎல் சீசனில் முதல் கோப்பையை முத்தமிட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆண்கள் அணி. முதல்முறையாக சூப்பர் ஹீரோ கலாச்சாரம் ஆர்சிபி அணியில் இல்லாமல் போனது, ஒரு இளம்வீரர் மீது நம்பிக்கை வைத்து கேப்டன்சி வழங்கப்பட்டது, ஒரு சீசன் முழுவதும் ஒரே வீரர்கள் அணியில் இடம்பெற்றனர், இது உண்மையில் ஆர்சிபி அணிதானா? என்ற கேள்வி ரசிகர்களுக்கே ஏற்பட்டது..
எத்தனை தோல்வியானாலும், எத்தனை அவமானம் ஏற்பட்டாலும் தங்களுடன் நின்ற ஆர்சிபி ரசிகர்களுக்காக கோப்பையை வென்று வெற்றிக்கூச்சலிட்டது ஆர்சிபி அணி. 2025 ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை இறுதிப்போட்டியில் வீழ்த்தி முதல் கோப்பையை முத்தமிட்டது ஆர்சிபி. கோப்பை வென்ற தருணம் விராட் கோலி முதலிய அத்தனை வீரர்களின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.. ஆம் 2025ஆம் ஆண்டானது‘ஈ சாலா கப் நம்தே’ ’இனி நாங்கள் சோக்கர்ஸ் இல்லை’ என்ற வசனங்களுக்கு உயிர்கொடுத்தது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பற்றி சொல்வதென்றால், காயத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட கதை இது.. 47 வருடங்களாக திறமைக்கான அங்கீகாரத்திற்காக நடத்தப்பட்ட போராட்ட களம் இது.. எத்தனை அவமானங்கள், எத்தனை ஏளனங்கள், எத்தனை எத்தனை தோல்விகள், அனைத்தையும் கடந்துவந்திருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஒருவழியாக 2025 உலகக்கோப்பையை வென்று வரலாற்றில் கிரீடத்தை சுமந்தது..
1973-ம் ஆண்டு முதன்முதலாக மகளிர் உலகக்கோப்பை தொடங்கப்பட்டபோது இந்திய பெண்களுக்கு என்று ஒரு அணியே இல்லை.. இரண்டு உலகக்கோப்பைகளில் வீராங்கனைகளை விளையாட அனுப்பவும், செலவிடவும் பணமில்லை என விளையாட அனுப்பாமல் பின்வாங்கிய கதைகளும் இங்கு உண்டு.. கிரிக்கெட் கிட்களும், போதுமான வசதிகளும் இல்லாத இடத்திலிருந்து எங்களுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டுமென போராடிய வீராங்கனைகளின் தோல்வி முகங்களும் இங்கு ஏராளம் உண்டு..
அத்தனை சவால்களையும் கடந்துவந்து மிதாலி ராஜ், அஞ்சும் சோப்ரா, நீது டேவிட், ஜுலன் கோஸ்வாமி, ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனா போன்ற பல தலைசிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளை கண்டது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. ஆனால் தனிப்பட்ட சாதனைகளால் சிகரம் தொட்ட இந்திய வீராங்கனைகளால் ஒருமுறை கூட உலகக்கோப்பையை கையில் ஏந்த முடியவில்லை. ஒவ்வொருமுறையும் ஏமாற்றமும், ஆராத காயமும் மட்டுமே மிஞ்சியது.
இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் 2005, 2017 ஒருநாள் உலகக்கோப்பை, 2020 டி20 உலகக்கோப்பை என 3 முறை உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய அணிக்கு மூன்றுமுறையும் தோல்வியே மிஞ்சியது.. இரண்டு முறை ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும், ஒருமுறை இங்கிலாந்துக்கு எதிராகவும் கோப்பையை கோட்டைவிட்டது இந்திய அணி..
3 உலகக்கோப்பைகளை இழந்தபிறகு வேதனையுடன் பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத், எத்தனை முறைதான் தோற்பது, அனைத்து தோல்வியிலும் முதலில் அழும்ஆள் நான்தான், தோல்வியின் வலி எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும், வெற்றியை ஒருமுறையேனும் ருசிக்க ஆசைப்படுகிறோம் என வேதனையுடன் தெரிவித்தார்..
இந்த சூழலில் தான் 2025 மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணி. கிட்டத்தட்ட இந்திய மகளிர் கிரிக்கெட்டின் 50 ஆண்டு கனவு 2025-ல் மெய்ப்பட்டது. இந்தவெற்றிக்கதையை எப்படி சொன்னாலும் கண்ணீர் சிந்தாமல் சொல்வதென்பது முடியாத காரியம், இவ்வெற்றி இந்தியாவின் மூலைமுடுக்களில் இருக்கும் ஒவ்வொரு பெண் பிள்ளைகள் காணும் கிரிக்கெட் கனவிற்கு உயிர்கொடுத்துள்ளது. இன்னும் உலகக்கோப்பை வென்ற அந்த வெற்றித்தருணம் கண்களில் விரிகிறது, இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வெற்றிக் கேட்ச்சை பிடித்துவிட்டு மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறார், இந்தியா நிமிர்ந்துவிட்டது!
டென்னிஸில் இந்தியாவின் அடையாளம் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டால் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில், சில வீரர்களின் பெயர்களே நம் கண்முன்னால் வந்துநிற்கும். 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வியாண்டர் பயஸ், உலகத்தரவரிசையில் முதலிடம் பிடித்த சானியா மிர்சா,
12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற மகேஷ் பூபதி, டென்னிஸ் வரலாற்றில் இந்தியாவிற்கென முதல் அடையாளத்தை உருவாக்கிய விஜய் அமிர்தராஜ், 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா மற்றும் மகளிர் டென்னிஸ் வீரர்களின் முன்னோடி நிரூபமா சஞ்சீவ், ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன், சோம்தேவ் தேவ்வர்மன், அங்கிதா ரெய்னா போன்ற தலைசிறந்த வீரர்களை தொடர்ந்து, டென்னிஸ் வரலாற்றில் எல்லோருடைய கவனத்தையும் திருப்பியுள்ளார் பதினாறே வயதான மாயா ராஜேஷ்வரன் ரேவதி.
நம்ம தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை சேர்ந்த இந்த சிறுமி இந்த வருடம் முழுவதும் டென்னிஸ் உலகை கலக்கியுள்ளார். யு16 மற்றும் யு18 தரவரிசையில் தமிழகத்தில் முதலிடம் பிடித்திருக்கும் இவர், சர்வதேச தரவரிசை பெறாதவீரராக வைல்டு கார்ட் மூலம் மும்பை ஓபன் 2025 WTA125 போட்டியில் இடம்பிடித்தார். ஒரு 15 வயது சிறுமி அரையிறுதிப்போட்டிவரை முன்னேறுவார் என்ற எண்ணம் பல மூத்தவீரர்களுக்கும் இருக்கவில்லை. ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய மாயா, தன்னுடைய அபார திறமையால் பல மூத்த வீரர்களுக்கே ஷாக் கொடுத்தார். பல அனுபவம் மிக்க வீரர்களை வென்றிகண்ட மாயா, WTA ரேங்கிங் பெற்ற இளம் இந்தியராக வரலாறு படைத்தார். மேலும் இந்த ஆண்டு மதிப்புமிக்க ஆரஞ்சு பவுல் பெண்கள் U18 போட்டியில் இரட்டையர் பிரிவில் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார். அதுமட்டுமில்லாமல் 2025ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் என மூன்று ஜூனியர் ஸ்லாம் போட்டிகளுக்கும் தகுதி பெற்று அசத்தினார்.
இந்தியாவின் டென்னிஸ் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார் 16 வயதேயான மாயா ராஜேஷ்வரன் ரேவதி! இந்த தமிழச்சியின் பெயர் விரைவில் உலக டென்னிஸ் அரங்கில் முத்திரை பதிக்கவருகிறது!
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக்கோப்பை வென்ற கையோடு, 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று வரலாறு படைத்தது. 2013-க்கு பிறகு 12 ஆண்டுகளாக ஒரு ஐசிசி கோப்பையைகூட வெல்லாத இந்திய அணி, 2014 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2015 உலகக்கோப்பை அரையிறுதி, 2016 டி20 உலகக்கோப்பை அரையிறுதி, 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி, 2019 உலகக்கோப்பை அரையிறுதி, 2021 WTC இறுதிப்போட்டி, 2023 WTC இறுதிப்போட்டி மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி என அனைத்திலும் தோல்வியடைந்து 8 ஐசிசி கோப்பைகளை வெல்லும் வாய்ப்புகளை தவறவிட்டது.
இந்தசூழலில் 8 தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்திய அணியை மீட்ட கேப்டன் ரோகித் சர்மா, 2024 மற்றும் 2025 என இரண்டு ஆண்டில் 2 ஐசிசி கோப்பைகளுக்கு இந்தியாவை வழிநடத்தினார். 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா, 7வது ஐசிசி கோப்பையை வென்று வரலாறு படைத்தது. 10 ஐசிசி கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவிற்கு பிறகு அதிக ஐசிசி கோப்பைகள் வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்தது.
தமிழகத்திலிருந்து சென்று இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பது என்பது தமிழக வீரர்களுக்கு பெரிய கனவாகவே இருந்துவருகிறது. அதிலும் தமிழகத்திலிருந்து செல்லும் பெண் கிரிக்கெட்டர்கள் இந்திய அணியில் ஜொலிப்பது என்பது அரிதான ஒன்றாகவே இருந்துவருகிறது. ஆனால் மதுரையைச் சேர்ந்த 17 வயதேயான விக்கெட் கீப்பர் பேட்டர் கமலினி குணாளன், தன்னுடைய அதிரடியான பேட்டிங் திறமை காரணமாக இந்திய அணியின் தேர்வுக்குழு கதவை உடைத்துள்ளார்.
வரும் டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள கமலினி, இந்திய அணிக்காக சர்வதேச அறிமுகத்தை பெறவிருக்கிறார்.இடது கை பேட்டரான கமலினி தன்னுடைய அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர்போனவர். 2024ஆம் ஆண்டு யு19 இந்திய அணியில் இடம்பெற்ற அவர், தன்னுடைய 16 வயதில் 61 பந்தில் 80 ரன்கள், 62 பந்தில் 79 ரன்கள், 44 பந்தில் 63 ரன்கள் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதன்காரணமாக 2025 மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் 1.60 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் விலைக்கு வாங்கப்பட்டார். 16 வயதில் இத்தகைய அதிகபட்ச தொகைக்கு ஏலம்போய் சாதனை படைத்திருந்தார் கமலினி குணாளன்.சமீபத்தில் நடந்துமுடிந்த யு19 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த கமலினி, தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணியாக இருந்தார்.
2 அரைசதங்களை விளாசிய அவர், 143 ரன்களுடன் இந்தியாவிற்காக அதிகரன்கள் அடித்த இரண்டாவது வீராங்கனையாக தடம்பதித்தார். மதுரையிலிருந்து கிரிக்கெட் கனவை கண்ட இளம் வீராங்கனை கமலினி, 17 வயதில் இந்திய அணிக்காக விளையாட தகுதிபெற்றிருப்பது, மிகப்பெரிய சாதனையாகும். இது தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு பெண் கிரிக்கெட்டர்களின் நம்பிக்கைக்கு புத்துயிர் கொடுத்துள்ளது.
19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது 2023ஆம் தொடங்கப்பட்டது. முதல் உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி உட்பட 16 அணிகள் கோப்பைக்கு பலப்பரீட்சை நடத்தின. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய யு19 இந்திய மகளிர் அணி, முதல் டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
இந்த நிலையில் இரண்டாவது யு19 டி20 உலகக்கோப்பையானது இந்தாண்டு நடைபெற்றது. ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 9 போட்டியில் ஒன்றில் கூட தோற்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இதில் இந்தியாவின் தொடக்க வீராங்கனைகளான கொங்கடி திரிஷா மற்றும் தமிழக வீராங்கனை கமலினி குணாளன் இருவரும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலித்தனர்.
இந்த 13 வயது சிறுவனின் திறமை நம்பமுடியாததாக இருக்கிறது, இவர்மீது பணத்தை இன்வெஸ்ட் செய்ய தகுதியானவர் என நெதர்லாந்தின் கிராண்ட் மாஸ்டர் அனிஸ் கிரி புகழ்ந்தபோது, செஸ் உலகமே திரும்பி பார்த்த சிறுவன் தான் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பரிதி.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற யு14 செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 9.5/11 என்ற அற்புதமான புள்ளியுடன் வென்ற இளம்பரிதிக்கு டச் கிராண்ட் மாஸ்டர் வழங்கிய 2 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரியின் புகழாரத்திற்கு பிறகு செஸ் உலகில் கவனம் பெற்ற இளம்பரிதி, தமிழக அரசின் ஆதரவை பெற்றார்.
சென்னையில் 2009ஆம் ஆண்டு பிறந்தவரான இளம்பரிதி சிறு வயதிலிருந்தே செஸ் விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்டவராக இருந்தார். தன்னுடைய பயிற்சியாளர் ஷ்யாம் சுந்தரிடம் பயிற்சி பெற்ற இளம்பரிதி, தனது நுட்பங்களையும், வியூகங்களையும் நாளுக்கு நாள் மெருகேற்றிக்கொண்டார்.
தன்னுடைய அபார திறமையை போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் வெளிப்படுத்திய இளம்பரிதி, கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தேவையான கடைசி நார்மை பூர்த்தி செய்தார். அத்துடன் 2500 எலோ புள்ளிகளை கடந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று வரலாறு படைத்தார். இதன்மூலம் இந்தியாவின் 90வது கிராண்ட் மாஸ்டராகவும், தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டராகவும் மாறி சாதனை படைத்தார். தமிழகத்திலிருந்து மற்றொரு திறமையாளன் செஸ் உலகில் பிரகாசித்து உலகை ஆச்சரியப்படுத்த ஆயத்தமாகியுள்ளான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இப்படியொரு விநோதமான சாதனையா என ஆச்சரியப்படவைத்தவர் சிஎஸ்கேவின் அதிரடி வீரர் சிக்சர் துபே. அவரின் இந்த சாதனையை பார்த்த மற்ற அணிகள் எல்லாம், பேசாம எங்க டீமுக்கு அனுப்பிடுங்க என சொல்லுமொரு வித்தியாசமான சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபேவின் இச்சாதனைக்கு தனிப்பதிவு ஒன்றையும் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
2019ஆம் ஆண்டில் இந்திய டி20 அணியில் ஷிவம் துபே இடம்பெற்றபிறகு இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் 37 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றது. மற்ற வீரர்கள் 30க்கும் குறைவான வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், துபேவின் சாதனையை உலகளவில் முதல்சாதனையாக பதிவானது. துபேவின் இந்த வின்னிங் ஸ்ட்ரீக் இந்தாண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற டி20 போட்டியில் தோற்றபிறகு முடிவுக்கு வந்தது.
உலக கிரிக்கெட் அரங்கில் 8 பந்தில் தொடர்ச்சியாக 8 சிக்சர்கள் அடிக்கப்பட்டதும், 11 பந்தில் அரைசதம் அடிக்கப்பட்டதும் நடப்பாண்டான 2025-ல் நடந்துள்ளது.
2025 ரஞ்சிக்கோப்பை பிளேட் போட்டியில் மேகாலயா அணி வீரர் ஆகாஷ் சவுத்ரி 11 பந்தில் அரைசதமடித்து உலகசாதனை படைத்தார். இதில் 8 பந்தில் தொடர்ச்சியாக அவரடித்த 8 சிக்சர்கள் அடித்து முதல்தர கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது. இதற்குமுன்பு 12 பந்தில் அரைசதமடித்ததே முதல்தர கிரிக்கெட்டில் உலகசாதனையாக இருந்த நிலையில், அதனை உடைத்தார் ஆகாஷ் சவுத்ரி.. மேலும் முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 சிக்சர்கள் விளாசிய முதல் வீரராகவும் வரலாற்றில் தடம்பதித்தார்.
சென்னையில் இருக்கும் ஒரு சிறிய குடிசை பகுதியிலிருந்து, ஒரு ஆட்டோ ட்ரைவரின் மகள் இந்திய அணிக்கு உலக அரங்கில் கபடி போட்டியில் தங்கம்பெற்றுத்தருவார் என்று சொல்லியிருந்தால் பலபேர் நம்பியிருக்க மாட்டார்கள், உண்மையை சொல்லபோனால் நம்பவே மறுத்தார்கள்.
ஆனால் அத்தனை அவநம்பிக்கையையும் உடைத்தெறிந்து இந்தியாவிற்கே தங்கம் வென்றுகொடுத்து சென்னையின் அடையாளமாக, கண்ணகி நகரின் அடையாளமாக, இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளார் ஒரு ஆட்டோ ட்ரைவரின் 17 வயது மகள் கார்த்திகா.சென்னை கண்ணகி நகரின் 17 வயது கபடி வீராங்கனையான கார்த்திகா, தன்னுடைய அபாரமான திறமையினால் இந்திய யு18 கபடி அணிக்கான துணைக்கேப்டனாக உயர்ந்ததோடு இந்தியாவிற்காக தங்கத்தையும் வென்றுகொடுத்து வரலாறு படைத்துள்ளார்.
நடப்பாண்டு 2025-ல் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று வரலாறு படைத்தது. இறுதிப்போட்டியில் ஈரான் அணியை 75-21 என்ற கணக்கில் தூசுத்தட்டிய இந்திய மகளிர் அணி, தங்கத்தை தட்டிச்சென்றது.
பெரிய கட்டமைப்பு இல்லாத சென்னையின் சிறிய இடத்திலிருந்து உலகையே திரும்பிபார்க்க வைத்த கார்த்திகா, முறையான இருப்பிட வசதி, விளையாட்டு பொருட்கள் வசதி, போட்டிகளுக்கு சென்றுவர பணவசதி என எதுவுமே இல்லாமல், மிகவும் கஷ்டமான பின்னணியிலிருந்து அயராது உழைத்து இந்திய அணியின் துணைக்கேப்டனாக உயர்ந்துள்ளார். சக வீரர்களால் எக்ஸ்பிரஸ் கார்த்திகா என அழைக்கப்படும் கண்ணகி நகர் கார்த்திகா, இந்தியாவின் அடையாளமாக விரைவில் உயர்ந்து சிகரம் தொடும்நாள் தொலைவில் இல்லை!
இந்திய அணிக்காக உலகக்கோப்பை வெல்லவேண்டும் என்பதே ஒவ்வொரு விளையாட்டு வீரனின் பெரிய கனவாக இருக்கும், அதிலும் ஒரு விளையாட்டுப்பிரிவுன் முதல் உலகக்கோப்பையை இந்தியாவிற்கு வென்றுகொடுத்தால் அது எப்படியான வெற்றியாக இருக்கும்.
அதையே ஒரு தமிழன் உலகக்கோப்பையை இந்தியாவிற்காக வென்றால் அது ஆனந்தத்திலும் பேரானந்தமாக இருக்கும் அல்லவா, அப்படி ஒரு சாதனையை தான் படைத்துள்ளார் தமிழகத்தின் கோ-கோ வீரர் சுப்பிரமணி.சர்வதேச 'கோ கோ' கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக 'கோ கோ' உலக கோப்பையானது 2025-ம் ஆண்டு நடத்தப்பட்டது. கோ கோ உலகக்கோப்பையின் முதல் சீசன் இந்தியாவில் உள்ள புதுடெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 19 அணிகளும் முதல் உலகக்கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.
தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் நேபாள அணிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் இறுதிப்போட்டியை எட்டி அசத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 78-40 என்ற புள்ளி கணக்கில் இந்திய பெண்கள் அணியும், 54-36 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஆண்கள் அணியும் நேபாளத்தை வீழ்த்தி கோப்பை வென்று வரலாறு படைத்தனர்.
அறிமுக சீசனிலேயே முதல் கோ-கோ உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது சுப்ரமணி கீ பிளேயராக உருவெடுத்தார். தமிழகத்திலிருந்து கோகோ போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் வீரர் சுப்பிரமணி ஆவார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவருடைய தந்தை ஒரு லாரி ஓட்டுநர் மற்றும் தாய் தினசரி கூலி தொழிலாளி தான். மிகவும் கடினமான சூழல் இருந்தபோதும் மகன் மீது நம்பிக்கை இழக்காத பெற்றோர்கள் இருவரும், மகன் படிப்பதற்காக லோன் எடுத்து கல்வியை தொடரச்செய்துள்ளனர். இரண்டு மகன்கள் மீது எப்போதும் அவர்களுக்கு நம்பிக்கை குறைந்ததே இல்லை.
தந்தை மற்றும் தாய் இருவரின் மன உறுதியை பிடிப்பாக பற்றிக்கொண்ட சுப்பிரமணி, பசி மற்றும் தொழில்முறை விளையாட்டை பின்தொடர பணமில்லாத சூழலில் துவண்டு போகும்போதெல்லாம் அவருடைய பாட்டி தான் அவரை முன்னேக்கி செல்ல உந்தினார் என கூறியுள்ளார்.
குடும்பம் பக்கபலமாகவும், மூத்தசகோதரர் சரவணன் முன்னோடியாகவும் இருக்க தமிழ்நாடு அளவில் பட்டையை கிளப்பிய சுப்ரமணி, கோகோ உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். உலகக்கோப்பை காலிறுதியில் இலங்கை அணிக்கு எதிராக தனியாளாக போட்டியை வென்றுகொடுத்த சுப்பிரமணி சிறந்த தாக்குதல்வீரருக்கான விருதை வென்றார். இந்த இளம் தமிழனின் பாதம் பல கோப்பைகளை இந்தியாவிற்காக வென்றுகொடுக்க தயாராக இருக்கிறது.
2025 உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயதேயான எல் கீர்த்தனா, ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, குழுப்பிரிவு என மூன்றிலும் 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். மூட்டைத்துக்கும் கூலி தொழிலாளியான லோகநாதன் தான், தன்னுடைய மகள் கீர்த்தனாவின் 3 வயதில் அவருடைய கையை பிடித்து கேரம் விளையாட கற்றுத்தந்துள்ளார். ஆனால் அனைத்துமாக இருந்த தந்தையின் மறைவு கீர்த்தனாவின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டது.
15 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திய கீர்த்தனா, தன்னுடைய கேரம் விளையாட்டையும் பாதியிலேயே நிறுத்தும் நிலை ஏற்பட்டது. குடிசை வீடு, பசி, நிதித்தேவை அனைத்தையும் கடந்துவந்து வெற்றி கண்டிருக்கும் கீர்த்தனா, வண்ணாரப்பேட்டையிலிருந்து கனவுகண்டு வெற்றிக்கண்டுள்ளார். தான் மட்டுமில்லாமல் அங்கு கஷ்டப்படும் அனைத்து இளம் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையையும் முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளை கண்டுள்ளார் உலகக்கோப்பை சாம்பியன் எல் கீர்த்தனா.
அதேபோல சென்னை காசிமேட்டை சேர்ந்த காசிமாவும் கேரம் உலகக்கோப்பை ஒற்றையர் பிரிவில் வெண்கலமும், இரட்டையர் பிரிவில் வெள்ளி மற்றும் குழுவாக தங்கமும் வென்று அசத்தினார்.
விழிச்சவால் உடைய பெண்கள் கலந்துகொண்ட முதல் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2025ஆம் ஆண்டு டெல்லி மற்றும் இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது.
லீக் போட்டிகளில் நம்பமுடியாத திறமையை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி, இலங்கை மற்றும் அமெரிக்காவை 10 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 209 ரன்கள் வித்தியாசத்திலும், நேபாளத்தை 85 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
முதல் டி20 உலகக்கோப்பையை வெல்லப்போவது யார், முதல் உலகச் சாம்பியனாக யார் மாறப்போகிறார்கள் என்ற இறுதிப்போட்டியில் நேபாளத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் முதல் உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. கோப்பை வென்ற தருணத்தின்போது கண்ணீர்விட்ட பார்வைகுறைபாடு உடைய இந்திய மகளிர் வீரர்களை பார்க்கும்போது ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் உணர்ச்சிமிக்க தருணமாகவே இருந்தது.. டி20 உலகக்கோப்பை வென்ற பார்வையற்ற இந்திய மகளிர் அணியை கிரிக்கெட் ஜாம்பவான் மிதாலி ராஜ் புகழ்ந்து பாராட்டினார்.
பெண்கள் கபடி உலகக்கோப்பை இதுவரை 2 முறை மட்டுமே நடந்துள்ளது. இந்த இரண்டு முறையும் இந்திய மகளிர் அணியே கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.
2012ஆம் நடந்த முதல் உலகக்கோப்பையில் ஈரானை இறுதிப்போட்டியில் வீழ்த்தி கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி, 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கபடி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சீனா தைபே அணியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை தட்டிச்சென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்ற இந்திய மகளிர் கபடி அணியின் பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த கவிதா செல்வராஜ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
2026ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பைக்கு செல்வதற்கான தகுதிப்போட்டிகள் இந்தாண்டு நடைபெற்றது. கடந்த நவம்பர் மாதம் அகமதாபாத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றுக்கான இறுதிப்போட்டியில் ஆசிய அணியான ஈரானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் யு17 கால்பந்து அணி வரலாறு படைத்தது.
இதன்மூலம் அடுத்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஆசியக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் வியப்பான செய்தி என்னவென்றால், ஈரானை திகைக்க வைத்த இரண்டு கோல்களும் மணிப்பூரின் போராட்டம் நடத்திவரும் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களைச் சேர்ந்த வீரர்களிடமிருந்து அடிக்கப்பட்டவை. இதில் முதல் கோல் அடித்தவர் டல்லால்முவான் என்ற குக்கி இனத்தைச் சேர்ந்தவர். 2வது கோலை அடித்தவர் ஃபார்வர்டு குன்லீபா என்ற மெய்தி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த வீரர்களும் ஒன்றுசேர்ந்து இந்திய அணியை கால்பந்து ஆசியக்கோப்பைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் AFC யு17 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றிருப்பது இது மூன்றாவது முறையாகும். சவூதி அரேபியாவில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தால், 2027ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறும் FIFA U-17 உலகக் கோப்பைக்கான அணிகளில் ஒன்றாக இந்திய அணி இடம்பிடிக்கலாம்.
இரண்டரை ஆண்டு காலமாக குக்கி-மெய்தி இரண்டு சமூகத்தின் மோதல் பிரச்னை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த வந்த நிலையில், கால்பந்து விளையாட்டின் மூலமும் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்தது பாராட்டைபெற்றது. இதுகுறித்து மெய்ட்டே ஹெரிடேஜ் சொசைட்டி வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். விளையாட்டில் ஒன்றுபடுங்கள். விரைவில் நமது மணிப்பூர் மாநிலத்தில் அமைதி வரும் என்று நம்புவோம்” என பதிவிட்டு வாழ்த்தியிருந்தது.
மணிப்பூரில் ஒருபுறம் பிரச்னைகள், கலவரங்கள் இருந்துவந்தாலும், மறுபுறம் இந்திய கால்பந்தின் உற்பத்தி தொழிற்சாலையாக மணிப்பூர் திகழ்ந்துவருகிறது. அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்ட 23 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ அணியில் மணிப்பூரைச் சேர்ந்த 9 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் மொத்தம் 7 மெய்தி இன வீரர்களும் 2 குக்கி இன வீரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வெறும் வார்த்தை அல்ல, அது ஒரு உணர்வு என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது இச்சம்பவம்!