தரமான சம்பவம்.. டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா சாதனையை முறியடித்த இந்தியா!
இந்திய டி20 அணி, தென்னாப்பிரிக்காவை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து டி20 தொடரை வென்றது. இதன்மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டி20 தொடர்களில் வென்று சாதனை படைத்தது..
செய்தியாளர்- சு.மாதவன்
டி-20 தொடரில் அசத்திய இந்திய..!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது. லக்னோவில் நடைபெற இருந்த 4ஆவது போட்டி, கடுமையான பனி காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி, திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்களை குவித்தது. பிறகு 232 என்ற இமாலய இலக்கை சேஸ்செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு டிகாக் அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தினார். ஆனால் சரியான நேரத்தில் டிகாக்கை பும்ரா வெளியேற்ற, சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை நிலைகுலைய வைத்தார். தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்களை மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா. இதன் மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
தொடரும் தென்னாப்பிரிக்காவின் மோசமான சாதனை..
டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவின் மோசமான ஓட்டம் தொடர்ந்துவருகிறது. இதற்கு முன் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை கடைசியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் 2015-ல் தான் இருதரப்பு டி20 தொடரில் வென்றிருந்தது.
மேலும் ஜனவரி 2023 முதல் தென்னாப்பிரிக்கா அணி 13 இருதரப்பு தொடர்களில் விளையாடியுள்ளது, அதில் டிசம்பர் 2024 இல் சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே ஒரு தொடரை மட்டுமே வென்றுள்ளது. மற்ற அனைத்து டி20 தொடர்களிலும் தோல்வியே கண்டுவருகிறது.
ஆஸ்திரேலியா சாதனையை உடைத்த இந்தியா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 9வது டி20 தொடரை வென்றது. இதன்மூலம் சொந்தமண்ணில் தொடர்ச்சியாக அதிக டி20 தொடர்களை வென்ற அணி என்ற புதிய சாதனையை படைத்த இந்திய அணி, இதற்கு முன்னதாக சொந்த மண்ணில் 8 தொடர்களில் வென்றிருந்த ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்துள்ளது.
