சுப்மன் கில் நீக்கம்.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டுள்ளனர். வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். அக்சர் பட்டேல் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் போட்டியிட உள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 20 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தவிருக்கும் நிலையில், ஐந்து ஐந்து அணிகளாக 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களுடன் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன.
2026 டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவிருக்கும் நிலையில், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது. 2011 உலகக்கோப்பைக்கு பிறகு சொந்தமண்ணில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா தோல்வியையே சந்தித்துள்ளது.
இந்த நிலையில் 2026 டி20 உலகக்கோப்பைக்கு எந்த ஆடும் 11 வீரர்களை இந்தியா எடுத்துச்செல்லப்போகிறது என்ற கேள்வியும், எதிர்ப்பார்ப்பும் அதிகமாக இருந்தநிலையில் தற்போது அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்மன் கில், ஜிதேஷ் சர்மா நீக்கம்..
சமீப நாட்களாக இந்திய டி20 அணியில் சுப்மன் கில் இடம்பெற்றிருந்தது பல்வேறு விமர்சனங்களை பெற்றுவந்தது. சுப்மன் கில்லால் டி20 வடிவத்தில் 3 சதங்கள் அடித்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும், இதனால் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் நல்ல தொடக்கத்தை பெறமுடியாமல் தடுமாறுகிறது என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மேலும் சுப்மன் கில் அணியிலிருப்பது முக்கியமா? அல்லது இந்தியா உலகக்கோப்பை வெல்வது முக்கியமா? என்ற கேள்விகளும் அதிகமாக வைக்கப்பட்டது.
இந்தசூழலில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம்பெறவில்லை. அவருடன் சேர்ந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவிற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் துணைக்கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் நேரடியாக இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து தமிழக வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. ரிங்கு சிங் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரு வலுவான அணியை தேர்வுக்குழு களத்தில் இறக்கியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் பட்டேல் (துணைக்கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜஸ்பிரிதி பும்ரா, ஹர்சித் ரானா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்
2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியே 5 டி20 போட்டிகள் கொண்ட நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

