அப்போ ராயுடு.. இப்போ ஜிதேஷ் சர்மா.. என்ன தப்பு பண்ணார்..? முன்னாள் இந்திய வீரர் பதிவு!
2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டு, இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார். இது 2019 உலகக்கோப்பையில் அம்பத்தி ராயுடுவை நீக்கியதை நினைவுபடுத்துகிறது. முன்னாள் இந்திய வீரர் ஜிதேஷ் சர்மா நீக்கத்தை கேள்வி எழுப்பியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கிறது. 20 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தவிருக்கும் நிலையில், ஐந்து ஐந்து அணிகளாக 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா முதலிய அணிகளுடன் இந்தியா இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவையும், பிப்ரவரி 15ஆம் தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது இந்திய அணி.
இந்தசூழலில் உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து துணைக்கேப்டனாக இருந்த சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் துணைக்கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கில்லை நீக்கவேண்டும் என்ற கருத்து பல வாரங்களாக சொல்லப்பட்டுவரும் நிலையில், அந்த மாற்றம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. ஆனால் ஃபினிசிங் ரோலில் அணியில் இருந்த விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவருக்கு பதிலாக சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி கோப்பை வென்ற இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், ஃபினிசிங் ரோலிற்கு என ஜிதேஷ் சர்மாவிற்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு தற்போது நீக்கியுள்ளது, 2019 உலகக்கோப்பையில் அம்பத்தி ராயுடுவை நீக்கியது போல உள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில் முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில், ”ஜிதேஷ் சர்மா நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு என்னை அணியிலிருந்து நீக்கிட்டாங்க என யோசிப்பார்? அதேபோல உலகக் கோப்பைக்கு முன்னாடி கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஃபார்மிற்கு திரும்பவேண்டும். நியூசிலாந்துக்கு எதிராக அவரிடமிருந்து ரன்கள் வரும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

