‘அமாவாச நீதான் பேசுறியா’.. திடீரென தோனியை பாராட்டி பேசும் கவுதம் கம்பீர் - சமீபத்திய 5 புகழுரைகள்!

முன்னாள் இந்திய வீரர்களான கவுதம் கம்பீர் மற்றும் எம்.எஸ். தோனிக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தோனி குறித்து புகழ்ந்து பேசிவருகிறார் கவுதம் கம்பீர்.
MS Dhoni - Gautam Gambhir
MS Dhoni - Gautam GambhirTwitter

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை பற்றி சக வீரரான கவுதம் கம்பீர் விமர்சிப்பதெல்லாம், கிரிக்கெட்டில் புதிய விஷயமல்ல. அதிலும் 2011 உலகக்கோப்பை குறித்து பேசும் போதெல்லாம் ஏதாவதொரு சிக்கலுக்குள்ளாவார் கம்பீர். குறிப்பாக, ‘தோனி மட்டுமே உலகக்கோப்பையை வாங்கிதரவில்லை’ என கம்பீர் பேசும்போதெல்லாம் தோனியின் ரசிகர்களால் விமர்சனத்திற்கு ஆளாவார்.

ஆனால், எவ்வளவு விமர்சனங்களை எதிர்கொண்டாலும் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் தன்னுடைய கருத்தில் தீர்க்கமாக இருப்பார் கவுதம் கம்பீர். ‘தோனி உடனான கருத்து வேறுபாட்டால்தான் கம்பீர் அப்படி கூறுகிறார்’ என்ற குற்றச்சாட்டே அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், சமீபகாலமாக தோனியுடனான விமர்சனத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தோனியை புகழ்ந்து பேசி தோனி ரசிகர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் கம்பீர்.

முன்பெல்லாம் “தோனி சொல்லும் வரை 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நான் 100 ரன்களை நெருங்கிவிட்டேன் என எனக்கு தெரியாது. தோனி மட்டும் தான் உலகக்கோப்பையை வாங்கி கொடுத்தாரா? தோனியின் அந்த ஒரு சிக்சரைத்தான் எல்லோரும் பெரிதாய் பேசுகிறார்கள், கோப்பையை வென்றது தோனி ஒருவர் மட்டும் அல்ல” என தோனி பாராட்டை பெறுவதை விமர்சிப்பார் கம்பீர். தற்போது அவரே தோனியை பாராட்டுவதை பார்த்து, ‘அமாவாச நீதான் பேசுறியா’ எனும் ரேஞ்சுக்கு ஆச்சர்யப்பட்டுள்ளனர் தோனி ஃபேன்ஸ்.

அப்படி கம்பீர் பேசிய சுவாரஸ்யமான 5 தருணங்களை இங்கே பார்ப்போம்...

1. “தோனிக்கு எப்போதாவது தேவை ஏற்பட்டால், அவருக்கு அருகில் நிற்கும் முதல் ஆள் நான்தான்”

2022-ம் ஆண்டு ஜதின் சப்ருவின் ஓவர் & அவுட் ஷோவின் எபிசோட் ஒன்றில் பேசிய கெளதம் கம்பீர், அவருக்கும் எம்எஸ் தோனிக்கும் இடையே பிளவு இருப்பதாக கூறப்படும் வதந்திகளை உடனடியாக மறுத்தார். 41 வயதான கம்பீர், தனது ODI உலகக் கோப்பை வென்ற கேப்டன் மற்றும் சக வீரர் மீது எப்படியான மரியாதை வைத்திருக்கிறார் என்பதைப் பற்றி பேசினார்.

dhoni-gambhir
dhoni-gambhir

அப்போது பேசிய கம்பீர், “தோனி மீது எனக்கு பரஸ்பர மரியாதை உண்டு. அதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். 138 கோடி மக்கள் முன்னிலையில் எங்கு வேண்டுமானாலும் இதை என்னால் தயக்கமின்றி சொல்ல முடியும். தோனிக்கு எப்போதாவது எதாவது தேவைப்பட்டால், அவருக்கு வாழ்க்கையில் எந்த தேவையும் ஏற்படாது நன்றாக இருப்பார்; ஆனால் ஒருவேளை எப்போதாவாது அவருக்கு தேவை ஏற்பட்டால் அவர் அருகில் இருக்கும் முதல் ஆளாக நான்தான் இருப்பேன். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதற்காகவும், ஒரு மனிதனாக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதற்காகவும் என்னுடைய ஆதரவு அவருக்கு எப்போதும் இருக்கும்” என்று கூறியிருந்தார்.

2. சாதனை படைக்க பலர் வருவார்கள், தோனியை போல 3 ஐசிசி கோப்பைகள் வெல்லும் கேப்டன்?

கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை அறையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்தியா தான் கோப்பையை வெல்லும் என்று அதிக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்தியா ஒரு மோசமான தோல்வியை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

MS Dhoni
MS Dhoni

அப்போது இந்தியாவின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத கவுதம் கம்பீர் போஸ்ட் மேட்ச் அனலைஸில் தோனி குறித்து புகழ்ந்து பேசியிருந்தார். அதில், “இந்திய கிரிக்கெட்டில் யாராவது வந்து ரோகித் சர்மாவை விட அதிக இரட்டை சதங்களும், விராட் கோலியை விட அதிக சதங்களும் அடிப்பார்கள். ஆனால் தோனியை போல மூன்று ஐசிசி கோப்பைகளை எந்த இந்திய கேப்டனும் வெல்வார்கள் என்று நான் நம்பவில்லை” என்று கூறியிருந்தார்.

3. ரோகித் சர்மா தற்போது பெற்றிருக்கும் நிலைக்கு தோனியே காரணம்!

நடப்பு ஆசியக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற பெரிய மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையை கோலிக்கு பிறகு அதிவேகமாக படைத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். சச்சினை பின்னுக்கு தள்ளியிருக்கும் ரோகித் 241 போட்டிகளில் இச்சாதனையை செய்துள்ளார். அப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியிருந்த கவுதம் கம்பீர் 10000 ரன்களுக்கு ரோகித் சர்மாவை பாராட்டியது மட்டுமில்லாமல், ரோகித் தற்போது இருக்கும் நிலைக்கு தோனிதான் காரணம் என சுட்டிக்காட்டினார்.

rohit sharma
rohit sharma

கம்பீர் பேசுகையில், “ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுப்பதென்பது எளிதான விஷயம் அல்ல. இந்த சாதனைக்கான இடைப்பட்ட காலத்தில் ரோகித் பல ஏற்ற-இறக்கங்களை கண்டார். ரோகித்தின் அத்தகைய கடினமான காலகட்டத்தில் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி தான் அவரை அதிகமாக தாங்கிப்பிடித்தார். ரோகித் சர்மா இன்று ரோகித் சர்மாவாக இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் எம்எஸ் தோனிதான். ஒரு கேப்டனாக எவ்வாறு இளம் வீரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும், அவர்களுடைய திறன்கள் அடிப்படையில் எப்படி அவர்களை பேக்கப் செய்யவேண்டும் என்ற பெரிய லெகசியை தோனி விட்டுச்சென்றுள்ளார். அதே போல ரோகித்தும் எவ்வாறு வரவிருக்கும் வீரர்களை வளர்க்கிறார் என்பதைப் பார்க்கவேண்டும். நிச்சயம் அது சுவாரஸ்யமாக இருக்கும்” என்றார்.

4. தோனி இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த வரம்! - கவுதம் கம்பீர்

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி 8வது முறையாக ஆசியக்கோப்பையை கைப்பற்றி அசத்தியிருந்தது. அப்போது போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கமெண்டரியில் பேசியிருந்த கவுதம் காம்பீர் தோனியை இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த ப்ளெஸிங் என்று கூறியிருந்தார்.

அப்போது பேசுகையில், “கேப்டன்சியின் காரணமாக தோனியால் அவருடைய பேட்டிங் திறனுக்கான சாதனையை படைக்க முடியாமல் போய்விட்டது. ஒருவேளை எம்எஸ் தோனி கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால், அவர் 3-வது இடத்தில் பேட்டிங் செய்திருப்பார். அப்படி டாப் ஆர்டரில் தொடர்ந்து விளையாடியிருந்தால் பல ODI சாதனைகளை அவரால் முறியடித்திருக்க முடியும். தோனி கேப்டனாக நிறைய கோப்பைகளை வென்றுள்ளார், ஆனால் அதற்காகவெல்லாம் ஒரு பேட்ஸ்மேனாக சர்வதேச ரன்கள் அடிப்பதில் அணிக்காக தியாகம் செய்தார். தோனி இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்றுதான் சொல்லவேண்டும். 7வது இடத்தில் களமிறங்கி போட்டிகளை வெல்லக்கூடிய ஒரு விக்கெட் கீப்பர்-பேட்டரை நாங்கள் பெற்றோம், அவரிடம் அந்த ஆற்றல் இருந்தது” என்று புகழ்ந்து பேசியிருந்தார்.

5. ராணுவத்தில் சேரும் தோனியின் முடிவு ஒரு அருமையான மூவ்!

2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு, இந்திய முன்னாள் கேப்டன் தோனி ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 15 வரை 106 டெரிடோரியல் ஆர்மி பட்டாலியனில் (பாரா) சேரப் போவதாக இந்திய இராணுவம் அறிவித்தது.

Dhoni
Dhoni

இந்திய ராணுவத்தில் சேரும் தோனியின் முடிவை பாராட்டி பேசியிருந்த கவுதம் கம்பீர், “தோனி ராணுவத்தில் சேர முடிவு எடுத்தது ஒரு அற்புதமான நடவடிக்கை. உண்மையிலேயே நீங்கள் ராணுவ சீருடை அணிய விரும்பினால், இந்திய ராணுவத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று பல முறை நான் அவரிடம் கூறியுள்ளேன். இப்போது ராணுவத்திற்கு உண்மையிலேயே சேவை செய்ய முடிவு செய்ததன் மூலம் அவர் தனது அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளார். தோனியின் இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான இளைஞர்களை இந்திய ராணுவத்தில் சேர ஊக்குவிக்கும்” என்று புகழ்ந்து கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com