U19 Asia Cup | தவறவிட்ட சூர்யவன்ஷி.. இரட்டை சதம் அடித்த அபிக்யான் குண்டு.. 408 ரன்கள் குவித்த IND!
யு19 ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி, மலேசியாவுக்கு எதிராக 408 ரன்கள் குவித்துள்ளது. இதில் அபிக்யான் குண்டு ஆட்டமிழக்காமல் 209 ரன்கள் எடுத்தார்.
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கெனவே தங்களுடைய முதல் போட்டியில் கத்துக்குட்டி அணிகளை வென்றிருந்தன. இந்திய அணி, யுஏஇயையும், பாகிஸ்தான் அணி மலேசிய அணியையும் சுலபமாக வென்றிருந்தன. அதிலும், யுஏஇவிற்கான போட்டியின்போது இந்தியாவின் புதிய புயலாக அறியப்படும் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி 95 பந்தில் 171 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
இந்த நிலையில் தொடரில் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, இன்று இன்னொரு கத்துக்குட்டி அணியான மலேசியாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் ஜெயித்த மலேசியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்தது. இன்றைய போட்டியில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 14 ரன்களில் ஏமாற்றினாலும், வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியைக் கைவிடவில்லை. அவர் 26 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்குப் பிற்கு விகான் மல்கோத்ரா 7 ரன்களில் வெளியேறினாலும், வேதந்த் திரிவேதியும் அபிக்யான் குண்டுவும் கைகோர்த்தனர். இந்த இணை, நிலையான ஆட்டத்தை விளையாடியதுடன், ஏதுவான பந்துகளையும் பவுண்டரி எல்லைக்கு விரட்டினர். தவிர, இந்த இணை, 400 ரன்களையும் விரட்டியது. இறுதியில் வேதந்த் திரிவேதி 90 ரன்களில் வெளியேறினார். ஆனால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபிக்யான் குண்டு 125 பந்துகளில் 17 பவுண்டரி, 9 சிக்ஸருடன் 209 ரன்கள் எடுத்தார்.
இந்த தொடரில் வைபவ் தவறவிட்ட இரட்டைச் சதத்தை அபிக்யான் குண்டு எடுத்து பெருமை சேர்த்துள்ளார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் எடுத்துள்ளது. மலேசிய அணி தரப்பில், முகமது அக்ரம் 5 விக்கெட்கள் எடுத்தார்.

