இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, 123 போட்டிகளில் 30 சதங்கள் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலி இந்தியா டெஸ்ட் அணிக்கு வீரராக மட்டும் பயணிக்காமல் சிறந்த கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அவர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாகவே யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டெஸ்ட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சில சாதனைகளை இங்கே பார்க்கலாம்.
செய்தியாளர் - சு.மாதவன்
இந்திய அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள விராட் கோலி, அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அவரது ஆக்ரோஷமான தலைமைத்துவமும், உடற்தகுதி சார்ந்த கலாச்சாரமும் இந்தியாவை உள்நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாகவும், வெளிநாடுகளில் அதிக போட்டித்தன்மை கொண்டதாகவும் மாற்றியது.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த 4ஆவது இந்திய வீரர் (9,230 ரன்கள்) விராட் கோலி ஆவார். 2014-15 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒரே வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் நான்கு சதங்களை அடித்த முதல் இந்தியராக விராட் கோலி சாதனை படைத்தார்.
மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 டெஸ்ட் சதங்களுடன், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கருடன் கோலி பகிர்ந்து கொள்கிறார். ஆஸ்திரேலியாவில், பெரும்பாலும் அவர்களின் சிறந்த பந்துவீச்சு வரிசைகளுக்கு எதிராக அவரது செயல்திறன், சிறப்பானதாக இருந்தது.
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர்.
டெஸ்ட் வரலாற்றில் கேப்டனாக அதிக சதங்கள் அடித்த 2-வது வீரர் கோலி (20 சதங்கள்) ஆவார். தென் ஆப்பிரிக்காவின் சுமித் 25 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் இவர் ஆவார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர் விராட் கோலிதான்.
டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக இரட்டை சதங்கள் (7 முறை) அடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கோலி.
இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் கோலி.
கோலி வெறும் 81 போட்டிகளில் 7,000 டெஸ்ட் ரன்கள் மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் வேகமாக இந்த சாதனையை நிகழ்த்திய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாட்டு சூழ்நிலைகளிலும் அவரது நிலைத்தன்மை மற்றும் திறமைக்கு உறுதியான சான்றாக இது அமைந்தது.
2016-17ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் கோலி 1,059 ரன்கள் குவித்தார், இது சொந்த மண்ணில் ஒரு இந்தியர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.
2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக, கோலி வெறும் 93 பந்துகளில் சதம் அடித்து, வேகமாக சதம் அடித்த இந்திய டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.
முழு உறுப்பினர்களைக் கொண்ட 11 டெஸ்ட் விளையாடும் நாடுகளுக்கு எதிராக சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை கோலி ப்டைத்தார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளுக்கு எதிராக டெஸ்ட் சதமடித்துள்ளார் கோலி
கேப்டனாக 5,800-க்கும் மேற்பட்ட டெஸ்ட் ரன்களுடன், இந்தியாவின் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்களில் கோலி முதலிடத்தில் உள்ளார். தலைமைத்துவத்தையும் தனிப்பட்ட செயல்திறனையும் சமநிலைப்படுத்தும் அவரது திறன், நவீன யுகத்தின் மிகவும் முழுமையான கேப்டன்களில் ஒருவராக அவரை வேறுபடுத்துகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகள் அடித்ததன் மூலம் பிரத்யேகமான சாதனைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியும் இணைந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை அடித்த இந்தியாவின் ஆறாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக 113 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 5,864 ரன்கள் எடுத்துள்ளார், அவருடைய சராசரி 54.80 என உச்சத்தில் இருக்கிறது. குறைந்தபட்சம் 5,000 ரன்கள் எடுத்த வேறு எந்த கேப்டனும் சராசரியில் 52ஐ கூட எட்டவில்லை.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 51.51 சராசரியுடன் இந்தப் பட்டியலில் கோலிக்கு பின்னால் உள்ளார்.