”இதுக்குமேல நான் என்ன பண்ணனும்.. யாரும் என்னிடம் பேசவில்லை” - வேதனையோடு ஷமி சொன்ன வார்த்தைகள்!
இந்திய ஒருநாள் அணியில் முகமது ஷமிக்கு இடம் வழங்கப்படாத நிலையில், அவரை பற்றிய அப்டேட் எதுவும் கிடைக்கவில்லை என்று பதிலளித்தார் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர்.. அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன் என்று ஷமி பதிலளித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. அக்டோபர் 19-ம் தேதி தொடங்கும் தொட்ருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில் ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன், வருண் சக்கரவர்த்தி, ஜடேஜா, முகமது ஷமி போன்ற வீரர்கள் இடம்பெறாததற்கும், ODI மற்றும் டி20 இரண்டு அணியிலும் ஹர்சித் ராணா இடம்பெற்றதற்கும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
யாரும் என்னிடம் பேசவில்லை..
சஞ்சு சாம்சன் ஏன் அணியில் இல்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அகர்கர், எங்களுக்கு மிடில் ஆர்டர் விக்கெட் கீப்பர் மட்டுமே தேவை, சஞ்சு சாம்சன் தொடக்க வீரர். அதனால் தான் அவருக்கு அணியில் இடமில்லை என்று பதிலளித்தார்.
அதற்கு டி20 போட்டியில் மட்டும் ஏன் மிடில் ஆர்டரில் களமிறக்கி விளையாட வைக்கிறீர்கள் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.
அதேபோல ஜடேஜா ஏன் அணியில் இல்லை என்பதற்கு பதிலளித்த அவர், அணியில் இன்னொரு ஸ்பின்னருக்கு இடமில்லை என்றும், நாங்கள் ஜடேஜாவை ஒருநாள் போட்டிகளில் இருந்து விடுவிக்கவில்லை என்றும் பேசியிருந்தார்.
அதற்கு ஜடேஜா என்ன எக்ஸ்ட்ரா லக்கேஜா? அவர் தான் ஸ்பின்னருக்கான முதல் தேர்வாக இருந்திருக்க வேண்டும் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.
அதுபோல முகமது ஷமி இடம்பெறாததற்கு, அவர் குறித்து முழுமையான அப்டேட் கிடைக்கவில்லை என்ற பதிலை அகர்கர் சொன்னார். இந்தசூழலில் அஜித் அகர்கர் தன்னிடம் பேசவில்லை என்று முகமது ஷமி வேதனை தெரிவித்துள்ளார்.
அணியில் இடம்பிடிக்காதது குறித்து பேசியிருக்கும் முகமது ஷமி, “நான் 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 ஐபிஎல் தொடர் மற்றும் துலீப் டிராபி என அனைத்திலும் விளையாடினேன். நான் நல்ல டச்சில் தான் இருக்கிறேன். இதற்குமேல் என்ன செய்யவேண்டும்.
என்னை பற்றிய அப்டேட் வேண்டுமென்றால் அவர்கள் தான் அதைக் கேட்க வேண்டும், யாருமே கேட்கவில்லை என்றால் அப்டேட்டை வழங்குவது என் வேலை அல்ல” என்று ஷமி வேதனையுடனும் காட்டமாகவும் தெரிவித்துள்ளார்.
ஷமியின் இந்த கருத்தை தொடர்ந்து கம்பீரும், அஜித் அகர்கரும் இப்படிதான் மூத்தவீரர்களை அவமரியாதையா நடத்துகிறார்கள் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.