இதுக்கு ஏன் சஞ்சுவை அணியில் எடுத்தீங்க.. கில்லின் வளர்ச்சிக்கு இன்னும் எத்தனைபேர் பலியாகணும்?
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது பேசுபொருளாகி இருக்கிறது. அதேபோல், சுப்மன் கில்லிற்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்கப்படுவதாகவும் அதனால் மற்ற வீரர்களின் கேரியர்கள் பாதிக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டியை தென்னாப்ரிக்கா 2-0 என முழுமையாக வென்ற நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்கியுள்ளது. கட்டாக்கில் இன்று தொடங்கியுள்ள முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.
சூர்ய குமார் யாதவ் தலைமையிலான அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, அக்ஷர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மன் கில் 4 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, டி20 விளையாட்டில் ஃபார்மில் இருந்து வரும் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நேற்று ஒருநாள்தொடர்.. இன்று டி20.. தொடரும் சஞ்சு சாம்சன் சோகம்
சையது முஷ்டக் அலி தொடரில் கேரள அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், சிறப்பான ஆட்டத்தால் கவனம் பெற்று வருகிறார். அதனால், டி20 அணிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஆடும் லெவனில் அவர் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தொடர்ந்து ஓரம்கட்டப்படுவதாக சமீப காலமாகவே பேச்சு இருந்து வருகிறது.
ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி உள்ளபோதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. 16 போட்டிகளில் 510 ரன்கள் எடுத்து 50+ சராசரி வைத்திருந்த போதும் ஒருநாள் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஒருநாள் அணியில்தான் இடம் கிடைக்கவில்லை, டி20 அணியிலாவது கிடைத்திருக்கிறதே என்று நினைத்தபோது தற்போது அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
எல்லாம் கில்லின் வளர்ச்சிக்காகவா?
சுப்மன் கில் திறமையான வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. விராட் கோலியைப்போல் ஒரு கிளாசிக் பேட்ஸ்மேன் ஆக வளர்வதற்கான அறிகுறிகள் அவரிடம் தென்படவே செய்தன. ஆனால், சுப்மன் கில்லை வளர்ப்பதற்காக, அவரின் வளர்ச்சிக்காக அவருக்கு கூடுதலான வாய்ப்பு கொடுக்கப்படுகிறதோ என்ற விமர்சனங்கள் சமீப காலமாகவே வைக்கப்பட்டு வருகிறது. டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஓப்பனர் ஆக இருப்பவர் ஜெய்ஸ்வால். அதிரடி வீரரான அவருக்கு சுப்மன் கில் காரணமாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இஷான் கிஷனின் டி20 கிரிக்கெட் வாழ்க்கையும் இதேபோல்தான் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக ஒரு பேச்சு உண்டு.
அந்த வரிசையில், விராட் கோலி டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு கேப்டன்ஷிப் பொறுப்பை கில்லிற்கு கொடுக்க நினைத்ததுதான் காரணம் என்ற பார்வை இருக்கிறது. அதனால்தான், விராட் கட்டாயத்தின் பெயரில் ஓய்வை அறிவிக்க வேண்டிய நிலைமை உருவானது. டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது அதீத காதல் கொண்ட விராட் கோலிக்கே இந்த நிலைமை என்றால், அது தற்போது சஞ்சுவின் மீது விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது சஞ்சு சாம்சனின் டி20 கேரியரும் கில்லின் வளர்ச்சிக்காக பலி கொடுக்கப்படுவதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. காயத்தால் பாதிக்கப்பட்டு ஒருநாள் தொடரின் போது ஓய்வில் இருந்த கில், திடீரென அணியில் நுழைந்துள்ளார். ஆனால், அவரது ஓப்பனிங் இடத்திற்காக சஞ்சு சாம்சன் இடம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் சுஞ்சு இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. டி20 கிரிக்கெட்டில் கில்லைவிட ருதுராஜ் கெய்க்வாட்கூட அதிக ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால், கில்லிற்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவும் கடைசி 15 இன்னிங்ஸ்களில் சொதப்பி வருகிறார். ஆனாலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. கடைசி 15 போட்டிகளில் வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே முகமது ஷமியை அணியில் எடுக்காததும் அணி தேர்வின் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்து வருகிறது. அந்த வரிசையில் சஞ்சு சாம்சன் இறக்கப்படாததும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

