2026 ஐபிஎல் ஏலம்| ’கேமரூன் க்ரீன் முதல் கார்த்திக் சர்மா வரை..’ கவனம் ஈர்த்த வீரர்கள் பட்டியல்!
2026 ஐபிஎல் ஏலத்திற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு நடக்கவிருக்கிறது. ஏலத்திற்கு முன்னதாக தங்களுடைய தக்கவைப்பு மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் பட்டியலை அனைத்து ஐபிஎல் அணிகளும் வெளியிட்டன. குறிப்பிடத்தக்க மாற்றமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஜடேஜாவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சனும் வர்த்தகம் செய்யப்பட்டு அணி மாற்றப்பட்டுள்ளனர்..
2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஒட்டுமொத்த அணியையே கலைத்திருக்கும் கேகேஆர் அணி 64.3 கோடி பர்ஸ் உடனும், பதிரானா, கான்வே, ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்களை வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43.4 கோடி ரூபாய் பர்ஸ் உடனும் ஏலத்தில் களம்புகவிருக்கின்றன.
இந்தசூழலில் 2026 ஐபிஎல் ஏலத்திற்கான வீரர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 77 இடங்களுக்கு மொத்தம் 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அதில் 240 இந்திய வீரர்கள், 110 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கான்வே, க்ரீன், ஜேக் ஃபிரேசர், சர்பராஸ் கான், டேவிட் மில்லர், பிரித்வி ஷா பெயர்கள் முதலில் பட்டியலிப்பட உள்ளது. மேலும் கவனித்தக்க பெயர்களாக வெங்கடேஷ் ஐயர், ரவி பிஸ்னோய், ஸ்டீவ் ஸ்மித், ராகுல் சாஹர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய வீரர்கள்
நல்ல ஃபார்மில் இருக்கும் சர்பராஸ் கான், பிரித்வி ஷா போன்ற வீரர்கள் ரூ.75 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்தில் நுழைகின்றனர். அவர்களுடன் தீபக் ஹூடா, கே.எஸ். பரத் மற்றும் சிவம் மாவி போன்ற பிற இந்திய வீரர்களும் 75 லட்ச ரூபாய் விலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அதிகபட்ச அடிப்படை விலையாடன் 2 கோடி ரூபாய் பட்டியலில் வெங்கடேஷ் ஐயர், ரவி பிஸ்னோய் போன்ற வீரர்களும், ராகுல் சாஹர், ஆகாஷ் தீப் போன்ற வீரர்கள் ரூ.1 கோடி அடிப்படை விலையில் உள்ளனர் .
வெளிநாட்டு வீரர்கள்
நியூசிலாந்து - டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஃபின் ஆலன், மாட் ஹென்றி மற்றும் ஜேக்கப் டஃபி போன்ற 5 நியூசிலாந்து வீரர்கள் ரூ.2 கோடி அடிப்படை விலையில் இடம்பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா - ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா ரூ.2 கோடி பட்டியலிலும், ஸ்பென்சர் ஜான்சன் ரூ.1.5 கோடி பட்டியலிலும் உள்ளனர்.
தென்னாப்பிரிக்கா - டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் ரூ.2 கோடி அடிப்படை விலையிலும், குயின்டன் டி காக் மற்றும் வியான் முல்டர் ஆகியோர் ரூ.1 கோடி பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து - கஸ் அட்கின்சன், ஜேமி ஸ்மித், பென் டக்கெட் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் ரூ.2 கோடியில் பட்டியலிடப்பட்டுள்ளனர் . ஜானி பேர்ஸ்டோ அடிப்படை விலை ரூ.1 கோடி பட்டியலில் உள்ளார்.
இலங்கை - மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரானா, வனிந்து ஹசரங்க ஆகியோர் அடிப்படை விலையான ரூ.2 கோடியுடன் நுழைகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் - முஜீப் ரஹ்மான் ஆப்கானிஸ்தானில் இருந்து ரூ.2 கோடியுடன் அதிக விலை கொண்ட வீரராகவும், ரஹ்மானுல்லா குர்பாஸ் ரூ.1.5 கோடியிலும், ஃபசல்ஹாக் ஃபரூக்கி ரூ.1 கோடியில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் - சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைன் அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு பதிவுசெய்துள்ளார். இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கும் என சொல்லப்பட்டு வருகிறது.
அன்கேப்டு வீரர்கள்
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிக்ஸ் ஹிட்டிங், ஸ்ட்ரைக் ரேட் போன்றவற்றால் கவனம் ஈர்த்துவரும் 19 வயது வீரரான கார்த்திக் சர்மா அதிக விலைக்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அவருடன் சேர்ந்து அபினவ் மனோகர், ஆகாஷ் மத்வால், விக்னேஷ் புதூர், கரண் சர்மா, மஹிபால் லோம்ரார் போன்ற வீரர்கள் கவனம் ஈர்ப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

