"அப்பா இந்தமுறையும் வாய்ப்பு கிடைக்கல..” தந்தையிடம் குமுறிய அபிமன்யு! 5 ஆண்டாக ஏமாற்றும் இந்திய அணி!
இவருக்கு ஏன் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை..? என பல்வேறு விமர்சனங்களும், பல்வேறு கேள்விகளும் இந்திய நிர்வாகத்தின் மீது வைக்கப்பட்ட பின்னர் ‘சர்பராஸ் கானுக்கு’ இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. அவர் நாட்டிற்கான டெஸ்ட் கேப்பையும் பெற்றுவிட்டார்.
ஆனால் அவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய அணியின் ஸ்குவாடில் இடம்பெற்றபோதும், அபிமன்யு ஈஸ்வரன் இன்னும் பெஞ்சில் மட்டுமே அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு முறை தொடக்க வீரருக்கான பேக்கப் வீரராக இந்திய அணியில் இடம்பெறும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு 5 ஆண்டுகளாக இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் 2021 முதல் இந்திய அணியுடன் பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.
ஒரு வீரருக்கு இந்திய அணியுடன் இருக்க வாய்ப்பு கிடைக்காதது எவ்வளவு பெரிய வலியோ, அதேபோல ஒவ்வொரு முறை அணியுடன் அழைத்துச்சென்று ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காமல் திரும்பிவருவது அதைவிட பெரிய வலியானது. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் ஃபீல்டிங்கில் இருந்த அபிமன்யு ஈஸ்வரனுக்கு அது எப்படியான வெற்றியாக இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.
5 ஆண்டுகளாக பெஞ்சில் அமர்ந்திருக்கும் அபிமன்யு..
முதல் தர கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடியிருக்கும் அபிமன்யு ஈஸ்வரன் 48.70 சராசரியுடன் 7841 ரன்களை குவித்துள்ளார். அதில் 27 சதங்களும், 31 அரைசதங்களும் அடங்கும். 16 முறை நாட் அவுட்டில் இருந்திருக்கும் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 233.
அதேபோல லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 47 சராசரியுடன் கிட்டத்தட்ட 4000 ரன்களை அடித்துள்ளார். அதில் 9 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. டி20 கிரிக்கெட்டிலும் சதமடித்து அசத்தியுள்ளார், ஸ்பின்னரான அவரால் இந்திய அணிக்கு தேவையான துணை பவுலராகவும் இருக்க முடியும்.
கடந்த 2018ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் 6 போட்டிகளில் 861 ரன்கள் குவித்தபிறகு, இந்தியா ஏ அணியில் இடம்பிடித்தார் அபிமன்யு ஈஸ்வரன். அதன்பிறகு துலீப் டிராபியில் இந்தியா ரெட் டீமில் இடம்பிடித்த அவர், இறுதிப்போட்டியில் 153 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்த சூழலில் 2021-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஹோம் தொடரில் இந்திய அணி ஸ்குவாடில் இடம்பிடித்த அபிமன்யு, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பேக்கப் தொடக்கவீரராக இடம்பெற்றிருந்தார். அதே ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்திருந்தார்.
அதன்பிறகு கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இடம்பிடித்த அபிமன்யு, நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் ஸ்குவாடில் இடம்பிடித்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக இந்திய அணியுடன் பயணப்படும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது.
ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கல..
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என என் மகன் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு இருந்தான், ஆனால் வாய்ப்பு கிடைக்காதபோது கலக்கமடைந்தான் என்று அபிமன்யுவின் தந்தை கூறியுள்ளார்.
விக்கி லால்வானியுடன் தனது யூடியூப் சேனலில் பேசிய ஈஸ்வரனின் தந்தை பரமேஸ்வரன், ”ஐந்தாவது டெஸ்டுக்கு தேர்வு செய்யப்படாததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார், அந்த அழைப்பை அவர் எதிர்பார்த்திருந்தார். வாய்ப்பு கிடைக்காததால் கோபமாக இருந்தார். நான் அவருக்கு அழைத்தபோது, 'அப்பா, எனக்கு இன்னும் இடம் கிடைக்கவில்லை' என்று கலக்கமாக பேசினார்.
நான் அவரிடம், 'மகனே, நீ உன் கனவை நனவாக்கிவிட்டாய்' என்று சொன்னேன். அவர், 'எனக்குப் புரிகிறது. நான் 23 வருடங்களாக என் கனவை வாழ்ந்து வருகிறேன், ஒன்று அல்லது இரண்டு போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படாமல் இருப்பது அதை உடைத்துவிடாது” என்று பதிலளித்ததாக அபிமன்யுவின் தந்தை வெளிப்படுத்தியுள்ளார்.