’நக்கல் யா உனக்கு..’ அர்ஷ்தீப் சிங்கை கலாய்த்த விராட் கோலி! வைரல் வீடியோ!
இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு, அர்ஷ்தீப் சிங் மற்றும் விராட் கோலியின் நகைச்சுவை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை அவர்களின் சொந்தமண்ணில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என வென்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு பதிலடி கொடுத்தது. முதலிரண்டு போட்டியில் சதமடித்த விராட் கோலி, 3வது போட்டியிலும் 45 பந்துகளுக்கு 65 ரன்களை அடித்து மிரட்டினார். அவருடைய அதிரடியான ஆட்டம் 2016-ல் அவருடைய பிரைம் ஃபார்மில் இருந்ததைபோல வெளிப்பட்டது..
இந்த சூழலில் தென்னாப்பிரிக்கா அணி 270 ரன்கள் மட்டுமே அடித்ததால், விராட் கோலிக்கு மற்றொரு சதமடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என அர்ஷ்தீப் சிங் விராட் கோலியுடன் இணைந்து ஒரு வீடியோவில் கூறியுள்ளார். அதற்கு கோலி சொன்ன பதில்தான் இணையத்தில் வைரலாகிவருகிறது..
பஞ்சாப் கிங்ஸ் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், “பையா, டார்கெட் குறைவாக இருந்தது, இல்லையென்றால் இன்னொரு சதம் வந்திருக்கும்” என விராட் கோலியிடம் அர்ஷ்தீப் சிங் கூறுகிறார். அதற்கு கோலி, “நாம் டாஸை வென்றதற்கு நன்றி சொல்லுங்கள், இல்லையென்றால் பனிப்பொழிவு காரணமாக நீங்கள் பௌலிங்கில் சதமடித்திருப்பீர்கள்’ என அர்ஷ்தீப் சிங்கை கலாய்த்தார். உடனிருந்த குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா இருவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
முதலிரண்டு போட்டிகளில் 350 ரன்களை அடித்தபோதும் இந்திய அணியின் பவுலர்கள் பனிப்பொழிவில் பந்துவீச கடினப்பட்டனர்.. இந்தசூழலில் கடைசி போட்டியில் இந்தியா டாஸ் வென்றது சாதகமாக மாறியது..

