Bihar Election 2025 | ஆட்டநாயகன் ஆவாரா PK? பிகாரில் புது முயற்சி.. களம் சொல்வது என்ன?
பிகார் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்திருக்கிறார். 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும். 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனு தாக்கல் நடைமுறை முதல் கட்ட தேர்தலுக்கு வரும் 10ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தலுக்கு 13ஆம் தேதியும் தொடங்குகிறது.
7 கோடியே 43 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும் இதில் 14 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்கள் படங்கள் வண்ணத்தில் பெரிய எழுத்துகளில் முதன்முறையாக இடம் பெற உள்ளது எனவும் அவர் கூறினார். பிகாரில் உள்ள 243 தொகுதிகளில் 38 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன. 2 தொகுதிகள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக்ஜனசக்தி கட்சி ராம்விலாஸ் பஸ்வான் பிரிவு, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எதிர்த்தரப்பில் உள்ள இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஐ-எம்எல், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் உள்ளன. மேலும், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக்ஜனசக்தி கட்சி ஆகியவையும் கூட்டணியில் உள்ளன. இவர்கள் தவிர ஜன் சுராஜ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம்ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்டவையும் போட்டியிடுகின்றன.
சரி,, இவைகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இப்போது நாம் மிக முக்கியமான ஒருவரைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. வேறுயாரும் இல்லை.. ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர். வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் பிரசாந்த், நடக்கும் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் எனத் தெரிவித்திருக்கிறார். கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 9 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவித்திருக்கும் பிரசாந்த், அதில் தன்னுடைய பெயரும் இருக்கும் என்றும், வேட்பாளர் பட்டியலே ஆச்சரியம் நிறைந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
பிரசாந்த் கிஷோர் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்ததும் பலரும் அவரை அரவிந்த் கெஜ்ரிவாலுடன்தான் ஒப்பிட்டார்கள். உடனடியாக மாற்றத்தை பிரசாந்த் உண்டாக்கிவிடுவாரா என்றும் கேட்டார்கள். ஆனால், மிக முக்கியமான விஷயம் பிகார் என்பது டெல்லி அல்ல. டெல்லி என்பது cosmopolitan. பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட அதுபோன்ற பகுதிகளில் மதம் மற்றும் சாதிய விஷயங்கள் பெரிதாக எடுபடாது. அப்படி ஒரு இடத்தில் முந்தைய அரசுகளின் ஊழல் மற்றும் நிர்வாகம் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாகப் பேசி கெஜ்ரிவாலால் தாக்கத்தை உண்டாக்க முடிந்தது. ஆனால், பிகார் அப்படி கிடையாது. சாதியம் மட்டும்தான் யார் வெற்றி பெறப்போவது என்பதை பெரும்பாலும் தீர்மானிக்கும் சக்தியாக தற்போது வரை இருக்கிறது.
அப்படி ஒரு மாநிலத்தில்தான் பிரஷாந்த் கிஷோர் தேர்தலை எதிர்கொள்வதற்கான வரைமுறைகளை வகுத்திருக்கிறார். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அம்மாநிலத்தின் electoral narrativeஐ மாற்ற முனைகிறார். வேலை வாய்ப்பு, கல்வி, சுயதொழில் இம்மாதிரியான விஷயங்களை தொடர்ச்சியாக பேசுகிறார். சிஸ்டம் சேஞ்ச் எனும் முழக்கத்தை முன்வைத்து அவர்கள் தேர்தலைச் சந்திக்கின்றனர். குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கல்வியில் இருந்துதான் சிஸ்டம் சேஞ்ச்சை கொண்டு வரமுடியும்; அதற்கான முழக்கம்தான் எங்களுடையது என அக்கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர்.
சமீபத்தில் பிகாரில் நடந்த Public Commission Examination முறைக்கேடு புகார்கள் அவருக்கான களத்தை இன்னும் விரிவு படுத்தியது. இளைஞர்களிடமும் இளம் வாக்காளர்களிடமும் பிரசாந்த் கிஷோருக்கு குறிப்பிடத்தகுந்த அளவில் ஆதரவு இருப்பதைப் பார்க்க முடிகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ஜன் சுராஜ் கட்சியின் வாக்காளர்களில் 5ல் ஒருவர் 18 முதல் 24 வயதுக்கும் உட்பட்டவர்கள். முதல்முறை வாக்காளர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
இந்த இடம்தான் மிக முக்கியமானது. யாருடைய வாக்குகளை பிரசாந்த் பிரிப்பார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கான வாக்குகளையா? அல்லது இந்தியா கூட்டணியின் வாக்குகளையா?
பாஜகவின் பி டீம் தான் பிரசாந்த் கிஷோர் என சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர் பிரசாந்த் கிஷோர் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகளைத்தான் பிரிக்கப்போகிறார் என்கிறார்கள். ஏனெனில், பாஜகவிற்கு பொது வகுப்பில் இருக்கக்கூடிய வாக்குகள் அதிகளவில் செல்லும் எனும் பார்வை இருக்கிறது. அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் core base. இங்கு பிரசாந்த் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாஜகவின் வாக்குகளை பிரிப்பார் என்ற பார்வை இருக்கிறது. அதோடு பிரசாந்த் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரின் அரசைத்தான் அதிகம் குறிவைத்துப் பேசுகிறார். இதுவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பாதிக்கும் என்கின்றனர் சிலர்.
இங்குதான் இன்னும் முக்கியமான விஷயத்தை குறிப்பிடுகிறார்கள் பிகார் அரசியல் பார்வையாளர்கள். அதாவது, மாநில அளவில் பார்க்கும்போது பிரசாந்த் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற பார்வை இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு தொகுதியாக பார்த்தால் பிரசாந்த் இன்னும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று சொல்கிறார்கள். அதாவது, குறிப்பிட்ட தொகுதியில் பிரசந்த் நிறுத்தும் வேட்பாளரைப் பொறுத்துதான் அந்த குறிப்பிட்ட தொகுதியில் அவர் யாருக்கு சேதத்தை உண்டாக்கப்போகிறார் என்பது தெரியும் என்கின்றனர். உதாரணத்திற்கு அவர் முற்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் அது தேசிய ஜனநாயக்கூட்டணிக்கு சேதாரத்தை உண்டுபண்ணும். இல்லை, இஸ்லாமைச் சேர்ந்தவரையோ அல்லது யாதவ சமூகத்தை சேர்ந்தவரையோ வேட்பாளராக நிறுத்தினால் அது இந்தியா கூட்டணிக்கான சேதாரமாக அமையும் என்கின்றனர்.
‘இருவிதமாகவும் இருக்காது’ என்பது அக்கட்சியினரின் வாதம்.. ‘அனைத்து சமுதாய மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்போம்; அனைத்து மக்களிடமும் எங்களுக்கான ஆதரவு இருக்கிறது’ என்கின்றனர். இதை வலியுறுத்துவதுபோல்தான் Vote Vibe சர்வேயின் கணக்கெடுப்பும் இருக்கிறது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களின் முடிவுகளின்படி, அவர்களுக்கு கிடைத்த வாக்குகளில், 15% பொது வகுப்பை சார்ந்த மக்களுடையது. 13% இஸ்லாமிய மக்களுடையது. 9% ஓபிசி, 6% எஸ் சி, 11% எஸ் டி.. இப்படிதான் ஜன் சுராஜின் வாக்கு வங்கி இருக்கிறது,.
பிகாரில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் மிகப்பெரிய அளவில் இருக்குமென கருதப்படுகிறது. வோட் வைப் சர்வேயின்படி, அம்மாநிலத்தில் இருக்கும் 54% வாக்காளர்கள் தற்போது பொறுப்பில் இருக்கும் அதே எம் எல் ஏ மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு வாக்களிக்க மாட்டோம் எனத் தெரிவித்ததாக அந்த சர்வே தெரிவிக்கிறது.
அடுத்தது பிரசாந்தின் பரப்புரையை குறிப்பிட வேண்டும். 2022 ஆம் ஆண்டில் இருந்து 30 மாதங்களுக்கும் மேலாக 5000 கிராமங்களுக்கும் அதிகமாக நடந்தே சென்றிருக்கிறார். இதன் காரணமாக ஒவ்வோரு கிராமத்திற்கும் ஏற்றவாறு எங்களிடம் திட்டங்கள் இருக்கிறது என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். எந்தக் கூட்டத்தில் பேச ஆரம்பித்தாலும் நான் வாக்கு கேட்டு வரவில்லை என்றுதான் பேசவே ஆரம்பிக்கிறார். தனிப்பட்ட தலைவர்கள் மீதான விமர்சனங்களை முற்றிலும் தவிர்க்கிறார். 56 இன்ச் மோடிக்காக வாக்களிக்கப்போகிறீர்களா அல்லது ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கும் 15 இன்ச் மார்பு கொண்ட உங்களது குழந்தைகளுக்காக வாக்களிக்கப்போகிறீர்களா எனக் கேட்கிறார். உங்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி வேண்டுமென எப்போதாவது வாக்களித்திருக்கிறீர்களா என்று கேட்கிறார். இந்த முறையாவது சாதிகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு வேலைவாய்ப்புக்காக வாக்களியுங்கள் எனக் கூறுகிறார்.
சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் அளித்திருந்த நேர்காணலில், மூன்று முக்கியமான விஷயங்களை முதலில் செயல்படுத்துவதற்கு நாங்கள் கைகளில் வைத்திருக்கிறோம் என தெரிவிக்கிறார். குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி சிறப்பாக கிடைத்திட அதற்கான கட்டமைப்புகளில் அதிகளவில் முதலீடு செய்து அதை சீராக்க வேண்டும். இளைஞர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கிக்கொடுக்க வேண்டும். மூன்றாவது மாநிலத்தில் 1.25 கோடி மக்கள் முதியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கண்ணியமாக வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் இளம் வயதினர் முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் மேம்படுத்தும் விதமாக எங்களது வாக்குறுதிகள் இருக்குமென அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பிரசாந்த் கிஷோருக்கு எல்லாமுமே பாசிட்டிவாக இல்லை என்பதும் முக்கியமானது. புதிய வேட்பாளர்கள், புதிய கட்சி, புதிய கொள்கை.. இது எல்லாம் இளம் தலைமுறை வாக்காளர்களை கவரும். ஆனால், கொள்கையில் இன்னும் தெளிவு இல்லாதது, கட்டமைப்பு ரீதியாக இன்னும் வலிமை பெறாதது இவையெல்லாம் அக்கட்சிக்கு இருக்கும் சிக்கல். பிரசாந்த் கிஷோர் பற்றி பெரும்பான்மையான மக்கள் பேசுகிறார்கள். ஆனால், இரண்டாம் கட்டத்தலைவர்கள் தொடர்பாக மக்களுக்கு பெரிய அளவில் தெரியவில்லை. கட்சி பிரசாந்தை சுற்றி மட்டுமே இருக்கிறது. பழமைவாத அரசியலில் இருக்கும் ஒரு மாநிலத்தில் பிரசாந்த் முன்வைக்கும் யோசனைகள் எந்த அளவுக்கு எடுபடும் என்ற பார்வையும் இருக்கிறது.
மொத்தமாக பிரசாந்த் வாக்குகளைப் பிரிப்பார். ஆனால், அது மறைமுகமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே கைகொடுக்கும் என்பதும் சிலருடைய பார்வையாக இருக்கிறது,. பிரசாந்த் இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் அப்படி இல்லாமலும் ஆகலாம். ஆனால், அவர் முன்னெடுத்திருக்கும் பாதை வரும் காலத்திற்கானது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.