களத்தில் அடுத்த தலைமுறை.. சாதி அரசியலில் இருந்து மீள்கிறதா பிகார்? கவனிக்க வேண்டியது என்ன?
டபடபடத்துக்கொண்டிருக்கிறது பிகார். வரும் நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கிட்டத்தட்ட தேசமே என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏன் 2025 பிகார் சட்டமன்ற தேர்தல் அவ்வளவு முக்கியம்? விரிவாகப் பார்க்கலாம்.
243 உறுப்பினர்களைக் கொண்டது பிகார் சட்டப்பேரவை. மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலும், அது சட்டப்பேரவைக்கான தேர்தலாக இருந்தாலும் சரி நாடாளுமன்றத்திற்கான தேர்தலாக இருந்தாலும் சரி வாக்குவங்கி, வேட்பாளர் தேர்வு, கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கான இடப்பங்கீடு என அனைத்தையும் தீர்மானிப்பது சாதியாகத் தான் இருக்கிறது. எவ்வளவு கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை நிலவரம். பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு 27 % இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை விபிசிங் நடைமுறைப்படுத்திய பிறகு இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. சமூக நீதியை உயர்த்தி பிடித்த பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள் பலர் எழுச்சி பெற்றனர். முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாத் போன்றவர்கள் கட்சிகளை தொடங்கி மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தனர். சாதி ரீதியான பின் தங்கி இருப்பதை சுட்டிக் காட்டி இவர்கள் அரசியலில் புதிய சக்திகளாக உருவெடுத்தனர். தமிழ்நாட்டில் ராமதாஸும் அப்படித்தான் உருவானார். ஆனால், கெடு வாய்ப்பாக இந்த எழுச்சி பின் நாட்களில் சாதிய ரீதியிலான அரசியல் கணக்குகளுக்குள் அரசியலை சுருக்கவும் வித்திட்டது. அதில்தான், பிகார், உத்திரப்பிரதேச மாநில அரசியல் சூழல் சிக்குண்டு கிடக்கின்றது.
பிகாரில் நடைமுறை என்ன?
"குறிப்பிட்ட ஒரு கட்சி குறிப்பிட்ட சமூக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒன்று. அந்த குறிப்பிட்ட சமூக மக்கள் இத்தனை தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். எனவே அந்தக் கட்சிக்கு இத்தனை இடங்கள்"
இதுதான் பிகார் தேர்தல் அரசியலின் இத்தனை ஆண்டுகால நடைமுறையாக இருந்திருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் சாதிகள் ஆதிக்கம் செலுத்தும். பிகாரிலோ சாதியில் இருக்கும் உட்குழுக்கள் கூட ஆதிக்கம் செலுத்துகின்றன. இது எந்த அளவிற்கு ஆபத்தாக இருந்திருக்கிறது என்றால், கடந்த 30 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சியும் தனித்து 30% வாக்குகளைப் பெற்றதில்லை. கடைசியாக காங்கிரஸ் மட்டுமே 1985 ஆம் ஆண்டு 39.3% வாக்குகளைப் பெற்றிருந்தது. 2000 முதல் 2020 ஆண்டுகளுக்கு இடையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மட்டுமே 2005 மற்றும் 2020 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் 25% வாக்குகளை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றபடி, ஒவ்வொரு தேர்தல்களிலும் பெரும்பான்மையான கட்சிகள் 20%க்கும் கீழ்தான் வாக்குகளைப் பெற்றிருக்கின்றன.
கூட்டணி அரசு என்பது நல்ல விஷயம்; வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அது கொள்கை சார்ந்து அமைந்த கூட்டணி, அதற்குக் கிடைத்த மக்கள் ஆதரவில் அமைந்த ஆட்சியாக இருக்க வேண்டுமே அன்றி சாதிகளின் கூட்டமைப்பாக இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்தத் தேர்தல் சற்றே மாறுபட்டது.
தலையெடுக்கும் இளம் தலைகள்
1970களில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முக்கிய தளபதிகளாக இருந்தவர்கள் பலரும் பின்னர் தனித்தனியாகப் பிரிந்து தங்களது கட்சிகளின் வழியே மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்தனர். தற்போதோ, மண்டல் கமிஷனுக்குப் பின் பிகார் அரசியலில் ஏற்பட்ட எழுச்சி, நன்மைகள் மற்றும் தீமைகளைக் கடந்து தனது முழு சுற்றை நிறைவு செய்திருக்கிறது.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், பிகார் அரசியல் களம் கடந்த 30 ஆண்டுகளாக இருவரைச் சுற்றியே அமைந்திருந்தது. ஒருவர் நிதிஷ் குமார். அடுத்தவர் லாலு பிரசாத் யாதவ். தற்போதும் நிதிஷ் குமார் முதல்வர் வேட்பாளராக இருக்கிறார்; லாலு பிரசாத் மஹாகத்பந்தன் (Mahagathbandhan) கூட்டணியின் மிக முக்கியமான ஆலோசகராக களத்தில் இருக்கிறார். ஆனால், பிகார் அரசியல் இந்தத் தேர்தலில் முழுமையாக அடுத்தத் தலைமுறைக்குக் கைமாற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் இந்த இரு பிரம்மாண்டங்களின் கடைசித் தேர்தலாக இருக்குமென்று கூட எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த மக்களவைத் தேர்தலின்போதும் இந்த வார்த்தைகள் குறிப்பிடப்பட்டன.
அதற்குக் காரணங்கள் இரண்டு.. ஒன்று உடல்நலம்.. அடுத்தது, பிகார் அரசியலின் முக்கிய முகங்களாக இளைஞர்கள் மாறியிருக்கிறார்கள். இந்த மாற்றம் கட்சிகளின் கொள்கைகளையும் வாக்குறுதிகளையும் மறுக்கட்டுமானம் செய்திருக்கிறது. சாலை வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, நீர் வசதி போன்ற வாக்குறுதிகள் தமிழ்நாடு, டெல்லி போன்ற ஓரளவு வளரும், வளர்ந்த மாநிலங்களில் மலையேறி பல ஆண்டுகள் ஆகின்றன. பிகாரிலோ கடந்த தேர்தல் வரை இதுபோன்ற வாக்குறிகளை கட்சிகள் அளித்துக்கொண்டிருந்தன. ஆனால், தற்போது சூழல்கள் மாறியிருக்கின்றன. வேலைவாய்ப்பு, கல்வி, முதலீடு போன்ற விஷயங்களை கட்சிகள் பேச ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக இளம் தலைவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
முக்கியமாகும் சாதிவாரி கணக்கெடுப்பு
இந்த மாற்றங்களுக்கு மிக முக்கியமான காரணம் தேஜஸ்வி யாதவ், சிராக் பஸ்வான், பிரஷாந்த் கிஷோர் போன்றோர்.. சமீபத்தில் வெளியிடப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு கூட அரசியல் கட்சிகளின் தேர்தல் அணுகுமுறைகளை மாற்றியிருக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பின்படி பிகாரில் இருக்கும் மக்களில்,
மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBCs): 36.01%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs): 27.12%
பட்டியலின மக்கள் (SCs): 19.65%
பொது வகுப்பு (General Category): 15.52%
பட்டியலின பழங்குடி மக்கள் (STs): 1.68%
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி 5 முறைக்கும் மேல் பிகாருக்கு வந்திருக்கிறார். மிக முக்கியமான பட்டியலின மக்களது சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, ராஜேஷ் ராம் எனும் பட்டியலின சமூகத்தவர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவற்றுக்கெல்லாம் காரணம் பட்டியலின மக்களது வாக்கு சதவீதம் என்பது 19.65% என தெரிய வந்திருப்பதுதான். ராகுல் மட்டுமல்ல.. அனைத்து கட்சிகளும் பட்டியலின மக்களை நோக்கி தங்களது கவனத்தை திருப்பியிருக்கின்றன. 19.65% வாக்காளர்கள் எனும் உண்மை அம்மக்களை ஒன்றுபட வைத்திருக்கிறது என்றுகூட சொல்லலாம். அடையாள அரசியலே பிரதானமாக இருக்கும் மாநிலத்தில், பட்டியலின மக்களிடையே அதிகரித்து வரும் அரசியல் விழிப்புணர்வு அம்மக்களை முக்கிய சக்தியாக மாற்றியிருக்கிறது.
தேஜஸ்வி எனும் முகம்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் இஸ்லாம் மற்றும் யாதவ சமூக மக்களது வாக்குகளை மட்டுமே நம்பியிருக்கிறது என்ற பார்வை இருந்தது. இதற்கு லாலு பிரசாத் யாதவ்தான் காரணம் என்று கூட சொல்லலாம். அவர் ஏதோ ஒரு காலத்தில் உயர்சாதியினரை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டுமென்று கூறியது அக்கட்சியை இரு தரப்புக்கான கட்சியாக மாற்றிவிட்டது என்றுகூட சொல்லலாம். ஆனால், தேஜஸ்வி யாதவ் தலைமை ஏற்றபின் தனது கட்சியின் வாக்குவங்கியை மாற்றி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதிலும், சமீபத்திய சாதிவாரி கணக்கெடுப்பு விபரம் வெளியான பிறகு அது இன்னும் தெளிவாகத் தெரிகிறது.
MY+BAAP இது தேஜஸ்வி முன்வைக்கும் ஒரு செயல்திட்டம். அதாவது, Muslim-Yadav, Bahujan (Scheduled Castes and Scheduled Tribes), Aghda (forward, i.e. upper castes), Aadi aabaadi (half the population, i.e. women) and poor.. இது அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசத்தில் செயல்படுத்திய PDA போன்றது. pichda (marginalised), Dalit (Scheduled Castes and Scheduled Tribes) and Alpasankhyak (minorities). அதேபோல், மாயாவதி ஃபார்முலா ஒன்றையும் தேஜஸ்வி கைகொண்டிருக்கிறார். அதாவது, தேர்தலில் தங்களது வாக்கு வங்கி இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தையும் தாண்டி அனைத்து சமூகத்திலிருந்தும் வேட்பாளர்களை நிறுத்துவது. இது அவருக்கு 2024 ஆம் ஆண்டு பலனளித்தது. இந்த யுத்தி பிகாரில் அதிக வாக்கு சதவீதம் உள்ள கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை மாற்றியிருக்கிறது.
அதோடு தேஜஸ்வியை மாற்றத்தின் முகமாக அம்மாநில மக்கள் பார்க்கிறார்கள். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று, அம்மாநிலத்தின் 41% மக்கள் தேஜஸ்வியையே முதல்வராக பார்க்க ஆசைப்படுவதாகத் தெரிவிக்கிறது. அந்த வரிசையில், நிதிஷ்18%, பிரஷாந்த் கிஷோர்15%, சாம்ராட் சவுத்தரி 8%, சிராக் பஸ்வான் 4% எனும் ரீதியில் மக்களது நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றனர். தேஜஸ்விக்கு இந்த நம்பிக்கை ஒன்றும் பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பம் என்பதால் மட்டுமே கிடைத்துவிடவில்லை. தனக்கான அடையாளத்தை அவரே உருவாக்கிக் கொண்டார். அவர் துணை முதலமைச்சராக இருந்தபோது வேலைவாய்ப்புகளை வழங்குவது மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். கிட்டத்தட்ட 17 மாதங்களில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். தற்போதும், SIRக்கு எதிராக தீவிரமாக களமாடும் தேஜஸ்வி வேலைவாய்ப்பு, கல்வி குறித்தும் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்.
பிரசாந்த் கிஷோர் எனும் மாற்றம்
அடுத்தது ஜன் சூராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர். கிட்டத்தட்ட சாதியின் பிடியில் இருக்கும் பிகாரில், அம்மாநில வாக்காளர்களை தொடர்ச்சியாக சந்தித்துக்கொண்டு இருக்கிறார். தற்கால பிகார் அரசியலில் அதிகமாக பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த அரசியல் தலைவர் யார் என்றால் அது கிஷோர்தான். 30 மாதங்களை மக்களைச் சந்திப்பதற்காகச் செலவிட்டிருக்கும் பிரஷாந்த் கிட்டத்தட்ட 5000 கிராமங்களுக்குச் சென்றிருக்கிறார். இதன்மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனியான திட்டங்களை வகுத்திருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதைத்தாண்டி, Vyavastha parivarthan (system change) எனும் இயக்கத்தையே முன்னெடுத்திருக்கிறார். தொடர்ச்சியாக மக்களிடையே 'வேலை வாய்ப்புக்காக வாக்களியுங்கள்.. ஜாதிக்கு வாக்களிக்காதீர்கள்' என தனக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். கடந்த ஆண்டு அம்மாநிலத்தில் நடந்த 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அக்கட்சி 10% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கல்வியை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலமே சிஸ்டத்தை மாற்ற முடியும்.. அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தற்போதுவரை 1.25 கோடி உறுப்பினர்கள் தங்களது கட்சியில் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் பிரஷாந்த். அதாவது இந்தியாவில் எந்தக் கட்சியை வேண்டுமானாலும் ஆட்சியில் அமர்த்த முடியும் என்று, மிகப்பெரிய அளவில் ஆஃபீஸ், டேட்டா என எல்லாம் வைத்திருக்கும், 'கிங்மேக்கர்' பிரசாந்த் கிஷோர் வீதிக்கு வந்து மக்களைச் சந்திருக்கிறார். ஜன் சூராஜ்க்கு மூன்று முக்கியத் திட்டங்கள் இருக்கின்றன. முதலில் ஆரம்ப கல்வியில் அதிகம் கவனம் செலுத்தி சீராக்குவது. அடுத்தது, இளைஞர்களை சுயதொழில் செய்வதற்கு ஊக்குவிப்பது. மூன்றாவது மாநிலத்தில் இருக்கும் மூத்த குடிமக்கள் மரியாதையோடு வாழ்வதை உறுதிசெய்வது.
வெற்றியை நிர்ணயிக்கும் பெண்கள்
இதைத்தாண்டி ஆண் பெண் வாக்கு சதவீதமும் மிக முக்கியமான பங்காற்றி வருகிறது. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். பெண் வாக்காளர்கள் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அதோடு அம்மாநிலத்தில் கடந்த சில தேர்தல்களில் வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக பெண்களே இருக்கின்றனர். இது ஒவ்வொரு தேர்தலிலும், பெண்களை முன்னிலைப்படுத்திய வாக்குறுதிகளையும் கொள்கைகளையும் வகுக்க அரசியல் கட்சிகளைத் தள்ளுகிறது. இந்த இடத்தில் நிதிஷ்குமார் முன்னிலை வகிக்கிறார். அவரது அரசாங்கம் சமீபத்தில் மாநில அரசு வேலைகளில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தது. சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் கூட பெண்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. தொடர்ச்சியாக, பெண்களை மையப்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.
இன்னும் ஏராளம் பிகார் அரசியல் களத்தினைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. அவ்வப்போது பேசலாம்.. மற்ற மாநிலங்களைப் போல் அல்ல பிகார். தமிழ்நாட்டில் ஒரு தேசிய கட்சியை அகற்றி மாநிலக் கட்சி எப்போது ஆட்சியைப் பிடித்ததோ, அதேபோல்தான் அப்போது பிகாரிலும் நடந்தது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டிருந்தால் தற்போது தமிழ்நாட்டுடன் பிகார் போட்டி போட்டுக்கொண்டு இருக்கும்.. அம்மாநில இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்றிருக்க மாட்டார்கள். ஆனால், தற்போதைய அரசியல் மாறியிருக்கிறது.. வருங்காலம் முன்னேற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்கும் என நம்பலாம்