கரூர் துயரம் | விஜய் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்?
சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுகிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்வி. ஏதேனும் அசம்பாவிதங்களோ அல்லது தவறுகளோ நிகழ்கிறது என்றால் அதற்குக் காரணமானவர்கள் அரசியல்வாதிகளாக, அதிகாரம் வாய்ந்தவர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் மீது வழக்கு தொடருவதும் நடவடிக்கை எடுப்பதும் சட்டப்பூர்வமானது என்பதைக் கடந்து அரசியல்நலன் சார்ந்தே இருந்திருக்கிறது. பிற கட்சிகளின் விமர்சனங்களையும் இதில் உள்ளடக்கிக்கொள்ளலாம். எல்லா விவகரங்களிலும் இதைச் சொல்லவில்லை. ஆனால், அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் தவெக தலைவர் விஜய் விவகாரத்தில் அரசும் பிற கட்சிகளும் நடந்துகொள்ளும்முறை. குறைந்தபட்சம் விஜயிடம் விசாரணையாவது நடத்த வேண்டுமென்று கோரிக்கை வையுங்கள் என்றுதான் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகப் பேசுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
2026 தமிழ்நாடு அரசியல் களத்தில் விஜய் இன்னும் முக்கிய பாத்திரமாகவே இருக்கிறார். அதாவது X Factor. எனவே, இந்த சம்பவத்திற்கான நடவடிக்கையோ அல்லது பொறுப்போ அவர்மீது சுமத்தப்படமாட்டாது என்றே பலரும் தெரிவித்திருக்கின்றனர். அப்படியே சுமத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கில் அதன் விளைவு இன்னும் மோசமாகலாம் என்பதையும் மறுத்துவிட முடியாது.
இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், 41 பேர் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணமோ, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழக்கூடாது என்ற எண்ணமோ இந்த விவகாரத்தை கொண்டு செல்லவில்லை. முழுமுற்றாக அரசியல் பாதையில் கரூர் துயரம் நடைபோடுகிறது.
இப்புதியவகை நடைமுறைகள் எல்லாம் ஆபத்தான, ஜனநாயக விரோத போக்கை அடுத்த தலைமுறை அரசியலுக்கு கொண்டு செல்லும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விஜய்க்கு மட்டும் ஏன் இந்த சலுகை அளிக்கப்படுகிறது?
அவர் மட்டும் ஏன் பொறுப்பு கூறலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்?
பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கும் இருக்கிறதுதானே?
திமுக அரசு இதில் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறது? என்று ஏகப்பட்ட கேள்விகள் இந்த துயரத்தை ஒட்டி எழுகின்றன.
திருமா கடும் விமர்சனம்
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியிருக்கிறார். தவெக - திமுக இடையே அண்டர்கிரவுண்ட் டீலிங் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். "ஆனந்த் மீது வழக்கு தொடுத்திருக்கும் தமிழ்நாடு காவல்துறை விஜய் மீது வழக்கு தொடுக்காதது ஏன்? அவருக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். திமுகவுக்கும் விஜய்க்கும் அண்டர் கிரவுண்ட் டீலிங் இருக்கிறது என சொல்லலாமா? அவர்கள் பாஜகவுக்கும் திமுகவுக்கும் டீலிங் இருக்கிறது என சொல்வதுபோல் இதையும் சொல்லலாமா? தமிழ்நாடு காவல்துறையின் அணுகுமுறை நல்லதல்ல” எனத் தெரிவித்திருக்கிறார்.
திமுக சொல்வதென்ன?
திமுக செய்தி தொடர்பாளர் TKS இளங்கோவன் புதியதலைமுறை டிஜிட்டலுக்கு மிக முக்கியமான விஷயம் ஒன்றைப் பகிந்திருக்கிறார். “ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. காவல்துறை விசாரிக்கிறது. அறிக்கை வெளிவந்தப்பின்தான் யார் குற்றவாளி என்று முடிவு செய்து நடவடிக்கை எடுக்கமுடியும். உள்ளூரில் சில நிர்வாகிகள் செய்த தவறு தெரியவந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். விஜய் மீது நடவடிக்கை வேண்டுமா இல்லையா என்பது விசாரணை ஆணையத்தின் அறிக்கைக்கு பின்தான் முடிவெடுக்க முடியும். விஜய் வந்தார் பேசினார் சென்றுவிட்டார். அங்கு நடந்த நிகழ்வுகளுக்கு அவரைப் பொறுப்பாக்குவது எப்படி என்பதை ஆணையம்தான் முடிவு செய்யும்” எனத் தெரிவித்திருக்கிறார். எப்படி இதை ஏற்றுக்கொள்ளமுடியும். விஜய் தாமதமாக வந்ததும் சம்பவத்திற்கு காரணம் என அரசு முன்வைக்கும் கேள்விகளை எங்கு கொண்டுசெல்வது?
அரசு தயங்குவது ஏன்?
அசு ஏன் தயங்குகிறது என்பது குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய பத்திரிகையாளர் சுவாமிநாதன், “விஜய் மீது நடவடிக்கை எடுத்தாலோ அல்லது அவரைக் கைது செய்தாலோ நேரடியாக களத்தில் அது பிரதிபலிக்கும் என திமுக அரசு பயப்படுகிறது. மற்ற கட்சியினர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அது பழிவாங்கும் நடவடிக்கை என்றே புரிந்துகொள்ளப்படும். முக்கியமாக, அரசியல் கட்சியினர் மத்தியில்தான் அந்த உரையாடல் நடக்கும். ஆனால், விஜய் அப்படியல்ல. இதற்கு இரு விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்து தேர்தலைச் சந்தித்தபின், திமுகவால் ஆட்சிக் கட்டிலை நெருங்கமுடியவில்லை. அதனால், விஜய்க்கும் அதைப் பொருத்திப் பார்க்கிறார்கள். ஆனால், அந்த அச்சம் தேவையற்ற ஒன்று. தவறுகள் நடக்கும்பட்சத்தில் அரசு அதை துணிச்சலாகக் கையாள வேண்டும். அந்த இடத்தில் திமுகவிடம் ஒரு தேக்கம் இருக்கிறது. ஒருவேளை விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது சட்டம் ஒழுங்கிலும் எதிரொலிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு இருக்கும் முக்கியப் பிரச்னை என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக நேர்ப்பட பேசு யூடியூப் தளத்திற்கு பேட்டியளித்த பத்திரிகையாளர் ப்ரியன், “விஜய் மீது முதலில் வழக்குப்பதிவாவது செய்ய வேண்டும். கைது செய்வதென்பது அடுத்தகட்டம்தான். வழக்குபதிவு செய்து முதலில் விசாரிக்கவாவது வேண்டும். அவரைக் கைது செய்தால் அவர் இன்னும் பேசுபொருளாவார்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என அரசு நினைக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்னை அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் வருகிறது. எனவே, ஒவ்வொரு அடியையும் அவர் அளந்து வைக்க வேண்டியதாக இருக்கிறது. நீங்கள் முதலமைச்சராக இருக்கிறீர்கள். சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். பொது இடத்தில் நடந்த ஒரு நிகழ்வில் 41 பேர் இறந்திருக்கிறார்கள். அதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கும்போது சிலரைக் கைது செய்ய வேண்டியிருக்கும். அந்தப் பட்டியலில் விஜயும் வரவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் ஏதேனும் ஒரு அரசியல் காரணங்களுக்காகத்தான் அதை செய்யாமல் இருக்கிறீர்கள் என்ற எண்ணம்தானே எழுகிறது. அப்படியானால், சட்டத்தின் ஆட்சியை நடத்துவதிலோ அல்லது முதலமைச்சர் எனும் பொறுப்பில் இருந்தோ நீங்கள் தவறுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்” என்றார்.
விஜயும் இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறார் என்பது பெரும்பாலானோரின் வாதம். இதுதொடர்பாகப் பேசிய சுவாமிநாதன், “100% விஜய் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார். இது தவறான அரசியல் என்பதைத்தாண்டி மிக ஆபத்தான அரசியல். தலைவர் என்பவர் தொண்டர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தான் தாமதமாக வந்தது ஏன் என விஜய் விளக்கவில்லை. கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது எனப் பேசுகிறார். விஜய் ஒரு அஜெண்டாவுடன் செயல்படுகிறார். தன் ரசிகர்கள் மரணத்தையும் தாண்டி திமுக எதிர் தவெக என நிலைநிறுத்துவதில்தான் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இது அபாயகரமான அரசியல். உயிரிழந்தவர்களின் மீது செய்யப்படும் அரசியல் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாத அரசியல்” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இதை இன்று மேற்கோள் காட்டியிருக்கிறார். இந்த சம்பவத்தில் முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் தேட நினைப்பது விஜய்தான் என்றும் சாடியிருக்கிறார்.
41 உயிர்களைப் பறிகொடுத்தவர்களின் கண்ணீர் கூட இன்னும் காயவில்லை. அதற்குள் இந்த விவகாரம் 2026 தேர்தலுக்கான களமாகிப்போனதுதான் பெருந்துயரம்..