Madras Day | “சென்னையில் சாதிய சொல்வதற்கே அஞ்சுவாங்க; இங்க நிலைமையே வேறு” - கரன் கார்க்கி நேர்காணல்
சென்னை கோடிக்கணக்கான மக்களின் கனவு நகரம்.. எண்ணற்றோரை இருகரம் நீட்டி வரவேற்று தனது பரப்பை விரித்துக்கொண்டே போகும் பெருநகரம். இந்நகரத்தை கொண்டாட பல காரணங்கள் உள்ளன. அவற்றின் ஒன்று சென்னை தினம். இந்நகரத்தை கொண்டாடும் அதே வேளையில், மக்களின் வாழ்வியலை எத்தனை சென்னை தினங்கள் பேசின என்றால் அது மிகவும் குறைவே. இம்முறை சென்னையில் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வியலைப் பேசலாம் என முடிவெடுத்ததும் எழுத்தாளர் கரன் கார்க்கியே நினைவுக்கு வந்தார். அவரது ‘கறுப்பர் நகரம்’ எளிய மக்களது வாழ்வியலை அத்தனை காத்திரமாக சொல்லியிருக்கும். தொடர்பு கொண்டதும் தனது கடுமையான பணிச்சூழலுக்கு இடையே ஒப்புக்கொண்டார். ஒரு மாலை வேளை அவரது வீட்டில் சந்தித்தோம்.
மாலை வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சின்னச்சின்னதாய் தூறல்கள். அந்தக் குளிர்மையான வேளையில் வீட்டிற்குள் சென்றதும் மனதை நிறைக்கும் மணத்துடன் தேநீரைக் கொடுத்தார்கள். தேநீரில் இருந்தே உரையாடலைத் தொடங்கினோம். (விரிவான நேர்காணல் புதிய தலைமுறை யூடியூப் தளத்தில் இருக்கிறது)
20 -30 வருடங்களுக்கு முன் - வடசென்னையில் - எளிய மக்கள் தேநீரை கடைகளில் வாங்கிவந்துதான் அருந்துவார்களாமே? வீடுகளில் தேநீர் போடும் பழக்கமே இல்லையென்று சொல்கிறார்களே?
அப்போதெல்லாம் நகரங்களில் 70%க்கும் மேல் குடிசைப் பகுதிகளாகத்தான் இருக்கும். அங்கு எல்லோரும் உழைக்கும் மக்களாகவும் நடுத்தர மக்களாகவும்தான் இருப்பார்கள். எனவே, 80% ஆட்கள் கடைகளில் சென்று தேநீர் வாங்கி வருவதுதான் வழக்கத்தில் இருந்தது. மிகக்குறைவாகவே வீடுகளில் தேநீர் போடுவார்கள்.
வீடுகளில் தேநீர் போட ஆரம்பித்ததில் மிகப்பெரிய பின்னணி இருக்கிறது. மகப்பேறு மருத்துவமனைகளில் வாரத்திற்கு ஒருமுறை ரவையும் பால் பவுடரும் கொடுப்பார்கள். குடிசைப் பகுதிகளின் அருகில் இருக்கும் தேவாலயங்களில் இருந்தும் இவற்றைக் கொடுப்பார்கள். கிறித்தவர்களுக்கு மட்டும் என்றில்லாமல் அப்பகுதி முழுக்கவே பால் கொடுப்பார்கள். இதனைத் தொடர்ந்து, மக்கள் வீடுகளிலேயே தேநீர் தயாரிப்பதற்கும், தயிர் தயார் செய்யவும் பழக்கமானார்கள்.
நகரத்தின் உருவாக்கம் என்பது உழைக்கும் மக்களால் கட்டமைக்கப்பட்டது. நவீன தொழில்நுட்ப யுகத்தில் அப்போது சென்னைக்கு வந்த மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது ?
கிராமங்களில் தங்களால் வாழமுடியாமல் சமூக நெருக்கடிக்கு ஆளாகி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பின் தப்பிவந்து இங்கிருந்த வெளிநாட்டவர்களிடம் வேலை செய்து, அதன்மூலம் உருவான சந்ததியினர் உருவாக்கிய நகரம்தான் சென்னை. ஆனால், இன்று நிலைமை மாறியிருக்கிறது.
அண்ணா நகரில் இருக்கும் மக்களில் கிட்டத்தட்ட 35% பேர் சென்னைக்கு வந்து வாழ்ந்த தொல்குடி மக்கள்தான். தொல்குடி என்றாலே சாலையோரங்களில் இருப்பவர்களும், விளிம்பு நிலையில் இருப்பவர்களும், தூய்மைப் பணியாளர்களும்தான் என்று நினைப்பதே தவறு. அவர்கள் மிகக் குறைவான தொகுதியில்தான் இருக்கிறார்கள். பெரும்பாலானோர் கல்வி பெற்று வளர்ச்சி அடைந்து அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றிருக்கிறார்கள். இதை கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். இவ்வளவு காலங்களில் மொழி மாறியிருக்கிறது, நிலம் மாறியிருக்கிறது, மனிதர்கள் மாறியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு மொழி இருக்கிறது. ஆனால், வேறு எந்த பிராந்திய தமிழை விட சென்னை தமிழ் கிண்டலுக்கு உட்படுத்தப்பட்டது ஏன்?
சென்னை நகரை பறையர்களின் கோட்டை என்று சொல்வார்கள். ஊர்களில் இருந்து அடக்குமுறைகள் தாங்காமல் மக்கள் சென்னைக்கு வந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா. அப்படி வந்தவர்கள் வெள்ளைக்காரர்களுடன் பழகினார்கள். வெள்ளைக்காரர்கள் முன் நீங்கள் குனிந்து, இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு நிற்க முடியாது.. நிமிர்ந்து நில் என்பார்கள். தொழிலாளர்கள் தங்களுடைய சீருடைகளை அணிந்து இருக்க வேண்டும். ஷூ போடவில்லை என்றால் வெள்ளைக்காரன் தண்டிப்பான். ஆனால், நம்மூரில் செருப்பு போட்டால் தண்டிப்பார்கள். நம்மாட்கள் சரியாகக் கூலி கூட தரமாட்டார்கள். கையேந்த வைத்து கஞ்சி ஊற்றிய சமூகத்தில் இருந்து வந்தவர்களுக்கு வெள்ளைக்காரர்கள்தான் முதலில் கூலி என்ற ஒன்றைக் கொடுக்கிறார்கள். இவ்வித கலாசார மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள். இதனால் அவர்களது உடல்மொழியே சென்னை மக்களுக்கு மாறுகிறது.
உதாரணத்திற்கு கை ரிக்ஷா தொழிலாளிகளை எடுத்துக்கொள்வோம். சென்னைக்கு வருபவர்கள் பெரும்பாலும் கை ரிக்ஷாக்களில்தான் பயணித்திருப்பார்கள். அங்குதான், பெரும்பாலானோர் அதிர்ச்சி அடைவார்கள். (எல்லோரையும் சொல்லவில்லை) ஊர்களில் கூலி கொடுத்து பழகியிருக்காதவர்கள் இங்கு கை ரிக்ஷா இழுப்பவர்கள் பேரம் பேசதொடங்கியவுடன் அதிர்ச்சி அடைவார்கள். ‘என்ன இங்கே கேள்விகளைக் கேட்கிறார்கள்.. மரியாதை கெட்ட ஊர்’ என்று சொல்லிவிட்டார்கள். பேரம் பேசியதால் மரியாதை கெட்டவர்கள் ஆகிவிட்டார்கள். ‘ரிக்ஷாகாரர்களிடம் உஷாராக இரு.. கைகளில் இருப்பதை பிடுங்கிக் கொண்டுதான் அனுப்புவார்கள்’ என சென்னைக்கு வருபவர்களிடம் சொல்லி அனுப்புவார்கள்.
ஆல்காட் துரை என்பவர் 1890களிலேயே 41 பட்டியலின மாணவர்களுக்கு கல்வியைத் தந்ததாக வரலாற்றில் இருக்கிறது. மிக முக்கியமாக மதிய உணவையும் வழங்கியிருக்கிறார்கள். பொதுவாக சென்னையில் கல்வி எப்படியிருந்திருக்கிறது?
பொதுவாக தமிழ்ச்சமூகம் மிகப்பெரிய அறிவாளிகளைக் கொண்ட சமூகம். திருவள்ளுவர், ஔவையார் போன்றவர்கள் எல்லாம் வாழ்ந்த சமூகம். அவ்வளவு பெரிய அறிவு சமூகத்தை நாசப்படுத்தியது இங்கிருக்கும் சாதிய சமூகம். இந்த சாதிய சமூகத்தில் இந்த ஒடுக்கப்பட்ட சமூகம் அத்தனை மோசமாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. அந்த சமூகத்தில் வாழப்பிடிக்காமல்தான், பலரும் நகரத்திற்கு வந்திருக்கின்றனர். வெள்ளைக்காரர்களும் சுரண்டத்தான் செய்தார்கள். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், அவர்கள் கல்வியைக் கொடுத்தார்கள், மருத்துவத்தைக் கொடுத்தார்கள், சொந்த மதத்தில் சேர்ந்து கொண்டார்கள், அவர்களது ராஜாக்களின் பெயர்களை இங்கிருப்பவர்களுக்கும் வைத்தார்கள். மிஸினரிகள் இங்கு மதம் மற்றும் மாற்றவில்லை. பலருக்கும் கல்வியைக் கொடுத்தார்கள்.
அந்த கால கிராமப்புற பெரியவர்களிடம் கேட்டீர்கள் என்றால் கதறி அழுவார்கள். வெள்ளைக்காரன் வரவில்லை என்றால் நாங்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை என்று சொல்வார்கள். ஆனால், இன்றோ பலரும் ஐரோப்பாகளிலும், வெளிநாடுகளிலும் வசிக்கிறார்கள். இன்று மதவெறியோடும் சாதி வெறியோடும் இருப்பவர்களில் பலர் தமிழ்நாட்டில் இருக்கும் கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
கலை எதற்கும் அப்பாற்பட்டது கிடையாது. ஆனால், சினிமாக்களில் சென்னையும் சென்னை மக்களும் காட்டப்படும் விதம் எப்படியிருக்கிறது?
இதுவரையில் மிகத்தவறாகத்தான் காட்டியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து ரஞ்சித் முதல்முறையாக தெளிவைக் கொடுத்தார். அதிலும், 100%ல் 10% தான் தெளிவாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறோம். வெற்றிமாறனும் அதைச் செய்ய முயற்சிக்கிறார். இன்னும் சிலர் கூட மிக உண்மையாக சென்னையைப் பற்றிப் பேச வேண்டுமென நினைக்கிறார்கள்.
எல்ஐசி போன்ற கட்டடங்களைக் காட்டுவதன் மூலம் நகரத்தின் கட்டமைப்பைக் காட்டுவோம். ஆனால், மக்களின் உண்மையான வாழ்வியல்போக்கை நாம் இன்னும் சரியாகக் காட்டவில்லை. 350 வருட வாழ்க்கையின் எச்சமிச்சங்கள் பெரும் புதையல் போல இந்த மண்ணில் இருக்கிறது.
ஒரேயொரு வித்தியாசம்தான். சில வருடங்களுக்கு முன் நீங்கள் பேசுவதை மட்டுமே இம்மண்ணின் மக்கள் கேட்டுப் பேசினர். இப்போதோ அவர்களே எழுதுவார்கள், படிக்கிறார்கள், புதிய வார்த்தைகளை உருவாக்குகிறார்கள். இதனால் மக்களது பேச்சும் மாறும். எனவே பழைய கண்ணாடியை அணிந்துகொண்டு இந்த நகரத்தைப் பார்க்க முடியாது.
சென்னை மக்களிடையே அரசியல் உரையாடல்கள் பெருமளவில் நிகழ்ந்திருக்கிறது. இப்போதைய நவீன யுகத்தில் இளைஞர்களிடம் அரசியல் உரையாடல் நிகழ்கிறதா?
வடசென்னையில், பட்டாளம், பிஎன்சி மில், வியாசர்பாடி சதுக்கம், கன்னிகாபுரம் போன்ற பகுதிகள் எல்லாம் கட்சிக்கூட்டங்கள் நடைபெறும் இடம். நான் இருக்கும் பகுதியில் கூட சிங்கார சடையப்பன், புலவர் நாகசாமி போன்ற பெரிய பெரிய பேச்சாளர் இருந்தார்கள். மூன்று மணிநேரம் அசராமல் பேசுவார்கள். அவர்களது பேச்சைக் கேட்பவர்கள் எல்லாம் மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால், தற்கால இளைஞர்கள் அரசியல் பேசுவதில்லை. நடிகர்களுக்குப் பின் செல்கிறார்கள் அல்லது ஆவேசமாக பொய்பேசுபவர்களுக்குப் பின் செல்கிறார்கள்.
சாதிய அடக்குமுறைகள் சென்னையில் இருந்திருக்கிறதா? அப்படியிருந்தால் அதற்கு எதிராக போராட்டங்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா?
100% அப்படியெதுவும் கிடையாது. சென்னையில் சாதி என்று சொல்வதற்கே அஞ்சுவார்கள். இங்கு நிலைமைகளே வேறு. எல்லா இடத்திலும் எல்லாரும் இருப்பார்கள். நகரத்தினைப் பொறுத்தவரை சாதி என்பது இல்லையென்று சொல்லவில்லை; ஆனால், மைக்ரோ லெவலில்தான் இருக்கும். தற்போது நகரமும் கொஞ்சம் மோசமாக மாற ஆரம்பிக்கிறது.
கரன் கார்க்கியின் உரையாடல், மழை தூறிய மண்ணின் மணம் போல, தேநீரின் இளஞ்சூட்டில் மேலெழும்பும் சுவையைப் போல சென்னையை இக்காலம், அக்காலம் என முன்பின்னாக பயணிக்கவைத்து மறக்க முடியாததாக்கிவிட்டது