பெண்களே உஷார்.. மீண்டும் சமையலறைக்குள் தள்ளும் புதிய ட்ரெண்ட்!
தமிழ் சினிமாக்களில் பெண்கள் அடைந்திருக்கும் உருமாற்றங்களைக் கொண்டே, சமூக வாழ்வில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கணக்கிட முடியும். 1960 70களில் பெண்களின் கதாப்பாத்திரங்கள், ‘ கணவரே கண் கண்ட தெய்வம், குடும்பமே எல்லாம்’ எனும் ரீதியிலேயே இருக்கும். 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதில் சற்று மாறுபாடு ஏற்பட்டது. சமீபகாலமாகத்தான் பெண்கள் வேலைக்குச் சென்று சொந்தக் காலில் நிற்பதுபோன்ற கதாப்பாத்திரங்கள் இடம்பெறுகின்றன. ஆனால், மீண்டும் 60 70 காலக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. உபயம்: trad-wife movement.
கல்வி இல்லாமை எத்தகைய எத்தகைய இன்னலுக்கு கொண்டு சென்றது?
இம்மாத உயிர்மை இதழில் எழுத்தாளர் இரா. முருகவேள் ‘மணப்பெண் தற்கொலைகளும் சொத்துரிமையும்’ எனும் தலைப்பில் மிக முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் இந்தக் கட்டுரைக்குத் தேவையான சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.
“பிரிட்டிஷ் ஆட்சி இந்திய முதலாளித்துவ உற்பத்தியில் கால் வைக்கிறது. நவீன நகரங்கள் உருவாகின. புதிய கல்வி முறையும் அதிகாரத்தினை அடைவதற்கான வழியாக இருந்தது. இந்த புதிய வாய்ப்புகளை நகரங்களில் இருந்த மேல்சாதியினரே கைப்பற்றிக் கொண்டனர். இதன் காரணமாக பணம், அதிகாரம் படைத்தவர்கள், அது இல்லாதவர்கள் எனும் வேற்றுமை உருவானது. இந்த புதிய வாய்ப்புகள் ஆண்களுக்கே கிடைத்தன. எனவே, அதிக படிப்பும், அதிகாரமும் கொண்டிருந்த குடும்பங்கள் பழைய குழந்தை திருமண முறையையும் கைவிட்டு தங்களது அந்தஸ்த்துக்கு ஏற்ற பெண்களை சாதிக்குள்ளேயே தேடத்தொடங்கின. வசதி படைத்த மணமகனுக்கான போட்டி உருவாகியது. இந்த அந்தஸ்தை பெற அதிக வரதட்சணை கொடுக்க வேண்டுமென்ற நிலை உருவாகியது. இதை ‘ஹைபர்கேமி’ என்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார். ஆண்களுக்கு இருந்த கல்வியும், அதனால் கிடைத்த அதிகாரமும் பெண்களிடம் வரதட்சணை வாங்குவதற்கும் அவர்களை அடிமைப்படுத்துவதற்கும் உதவின.
இப்போது வேறு ஒன்றையும் மேற்கோளாக பார்க்கலாம். Society பாவங்கள் வீடியோ தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பத்திரிகையாளர் ஜீவசகாப்தன், “பெண்களுக்கு சாதி கிடையாது. சாதி என்பது ஆண்களுக்கானது. எந்த சாதியைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள்தான். பொதுவாக ஒரு பெண்ணின் அடையாளம் என்பதே இன்னாரின் மகள், இன்னாரின் மனைவி என்பதுதான்” எனத் தெரிவித்தார். சுருக்கமாக, பெண்களுக்கென்று ஒரு அடையாளம் இல்லாமல் இருந்தது. இந்நிலைமை தற்போது சற்றே மாறிவருகிறது என்றாலும் முற்றாக மாறவில்லை. சரி... மேற்கண்ட இரண்டு கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், கல்வி இல்லாமை என்பது பெண்களை கடந்தகாலங்களில் எத்தகைய இன்னல்களுக்கு உள்ளாக்கியிருக்கிறது என்பது புலனாகும்.
அதென்ன trad-wife movement
அத்தகைய ஒரு நிலையில் இருந்துதான் மானிடம் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்திருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பெண்களை ஏன் நியமிப்பதில்லை என்று தற்காலத்தில் நாம் செய்யும் சண்டை, தனிப்பட்ட வாழ்வில் பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கான அடையாளம்தான். வேலைக்குச் சென்று பொருளாதார ரீதியாக முன்னேறும் பெண்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றனர். ஆனால், இவை அனைத்தையும் அசைத்துப்பார்க்கிறது சோசியல் மீடியா ட்ரெண்ட் ஒன்று. அதன் பெயர்கூட சற்றே கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. trad-wife movement. trad என்பது traditional... அதாவது பாரம்பரிய மனைவி இயக்கம். (இது இயக்கம் அல்ல; சோசியல் மீடியாவில் இருக்கும் ஒரு ட்ரெண்ட்தான். இந்த போக்கிற்கு ஆங்கில ஊடகங்கள் வைத்திற்கும் பெயர்தான் trad-wife movement)
trad-wife movement என்பது, திருமணத்தில் பாரம்பரியத்தைப் பின்பற்றி வாழும் வாழ்க்கையைத் தேர்வு செய்யும் பெண்களைக் குறிக்கிறது. இப்பெண்கள் வீட்டு பராமரிப்பு, குழந்தைப் பராமரிப்பு மற்றும் கணவரின் தலைமையினைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்துகின்றனர்.
trad-wife movement நவீன பெண்ணியத்தை மறுத்து, பாரம்பரியமாகக் கருதப்படும் கடந்த கால வாழ்க்கை முறைக்குத் திரும்புவதை வெளிப்படையாக சொல்லாமல், ரொமான்டிசைசிங் மூலம் வலியுறுத்துகிறது. இதில், பெண்கள் சமையல் வேலை செய்பவர்களாகவும் பராமரிப்பாளர்களாகவும் இல்லத்தரசிகளாகவும் இருப்பார்கள். அதே சமயத்தில், அப்பெண்களின் கணவர்களே குடும்பத்திலும் வாழ்விலும் முதன்மையாக இருப்பார்கள்.
டிரம்ப் அதிபரான பிறகு அதிகரிக்கும் முறை
Institute for Strategic Dialogue நிறுவனத்தின் ஆய்வாளரான செசில் சிம்மன்ஸ் (Cécile Simmons), “தங்கள் கணவர்களுக்கு கீழ்ப்படிந்து, வீட்டுவாழ்க்கையை முன்னிறுத்துவதன் மூலம் பாரம்பரிய பாலின விதிமுறைகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்பதை ஆதரிக்கும், உலகளாவிய பெண்கள் இயக்கம்” என Tradwife இயக்கத்தை வரையறுக்கிறார். இது இந்தியா, தமிழ்நாடு என்று மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக, 2016 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக அதிபராகப் பொறுப்பேற்றப் பிறகு இத்தகைய கலாச்சாரம் அதிகரித்ததாக மால்மோ பல்கலைக்கழகம் வெளியிட்ட பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
இக்கட்டுரையை எழுவதற்காக சில தளங்களை படிக்கும்போது ஒரு பத்தி மிகவும் ஆச்சரியப்படுத்தியது. பெண்களின் சமையலை ஆதரித்து இருந்த பதிவை கட்டுரையாளர் மேற்கோள்காட்டியிருந்தார். அதில், “பெண்கள் சமைத்து, குடும்பங்கள் ஆரோக்கியமாக இருந்த நாட்கள் நினைவிருக்கிறதா? சமையலறை என்பது சிறை என்று பெண்ணியம் சொல்லியதிலிருந்து, உடல்பருமன் அதிகரித்துவிட்டது. பாரம்பரியக் குடும்பங்கள், தாய்மார்கள் சமைத்து குடும்பத்தை பராமரிக்கும் போது இந்த நோயை எதிர்கொள்ளவில்லை. இன்றைய பெண்களால் ஒரு முட்டையைக் கூட பொறிக்க முடியாது; அதையே முன்னேற்றம் என்று அழைக்கின்றனர்” என கூறப்பட்டிருக்கிறது. இதை என்னவென்று சொல்வது.
உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் இரண்டாம் நிலைதான்
சமையற்கட்டுக்குள் இருந்த பெண் குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்துவர அரசியல் தலைவர்களும் இயக்கங்களும் முன்னெடுத்த போராட்டங்கள் பல பல. பெண்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டுமென்பதற்காக தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளும் ஏகப்பட்ட திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன. அதன் விளைவை தமிழ்நாடு தற்போது அறுவடை செய்துகொண்டிருக்கிறது. ஆனால், இவை எல்லாவற்றிற்கும் ‘ஆப்பு’ வைக்கும் விதமாக சோசியல் மீடியாவில் உருவாகியிருக்கும் ட்ரெண்ட்தான் ‘trad-wife movement’.
Tradwife போக்கைப் பின்பற்றும் பெண்களின் வாழ்க்கையில் உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் இரண்டாம் நிலைதான்; வீட்டு பராமரிப்பும் குடும்பப் பொறுப்பும்தான் முதலிடம் என்பதையே தங்கள் சமூக ஊடக அடையாளமாக கருதுகின்றனர். அதையே வீடியோக்களாகவும் பதிவு செய்கின்றனர். குடும்ப வாழ்க்கையில் முழுமையாக இணைந்திருக்கிறோம் என்று பெருமையாகச் சொல்லும் இவர்களது வீடியோக்கள் வெளிப்படுத்துவது ஒன்றுதான்; ‘ஆண் ஆதிக்கம் கொண்ட குடும்ப அமைப்பு சாதாரணம்தான்’.
இந்த பெண்கள், Instagram, TikTok போன்ற சமூக ஊடகங்களில் தாங்களது வாழ்க்கையை வீடியோக்களாக பதிவிடுகின்றனர். அழகாக அலங்கரிக்கப்பட்ட வீடுகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகள், குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகள் போன்ற காட்சிகளைப் பகிர்ந்து முழுமையான சந்தோசம் இல்லறத்தில் மற்றவற்களுக்காக வாழும் வாழ்வில்தான் இருக்கிறது என்பதுபோன்ற படத்தை உருவாக்குகின்றனர்.
எளிதில் ஈர்க்கப்படுவதன் நோக்கம்
பாலோமார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் டெவான் ஸ்மித் இதுகுறித்துக் கூறுகையில், “Trad wife போக்கின் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில், அவர்கள் வெளிப்படுத்தும் வாழ்க்கை என்பது உண்மைக்கு புறம்பான ஒரு வாழ்க்கைமுறை. இது சமூக ஊடகங்களில் எங்கும் காணப்படும் விஷயம்தான் என்றாலும், அவர்கள் காட்டும் வாழ்க்கை, அளவுக்கு மீறி அழகுபடுத்தப்பட்டது” எனத் தெரிவிக்கிறார்.
தனிப்பட்ட நபர்களின் விருப்பம் என்று இத்தகைய விஷயங்களை கடக்க முடியாது. ஏன்? நம் சிந்தனையெல்லாம் நம்முடையது அல்ல. நிகழ்காலத்தில் தனிப்பட்ட நபரின் ஒவ்வொரு சிந்தனையிலும் சினிமா எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது.. விரட்டி விரட்டி காதலிக்கும் காட்சிகளைக் கொண்ட சினிமாக்கள் சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தெரியும். அடுத்தது, தற்போதைய காதல் வாழ்வில் சோசியல் மீடியா வீடியோக்கள் எந்த அளவிற்கு தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதும் தெரியும். அதேபோல் trad-wife movement-உம் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தினால், பெண்களது தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு எத்தகைய ஆபத்தினை உண்டுபண்ணும் என்பதை சொல்லித் தெரிய வேண்டாம்.
‘உலகளவில் மானிட சமூகம் தற்போது மிகவும் சீரற்றதாகவும், சிதைந்தது போன்றும் காணப்படுகிறது. குறிப்பாக பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் நடப்பவை அடக்குமுறையாகவும், மன அழுத்தம் தருவதாகவும் இருப்பதுபோல் உணர்கின்றனர்’ எனத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள், இதுபோன்ற பயம், விரக்தி மற்றும் தனிமையில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற வீடியோக்களின் மூலம் எளிதில் ஈர்க்கப்படலாம் எனத் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்கள் உருவாக்கம் சமூக சேவைக்கானதா?
ஊனே உயிரே எனும் தொடர் புதிய தலைமுறையில் வெளியானது. அதில், எழுத்தாளர் ராஜசங்கீதன் பகிர்ந்த சில வார்த்தைகளை இங்கே குறிப்பிட்டால் சரியாக இருக்கும், “சமூக ஊடகங்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த சமூக ரீதியிலான கல்வியோ அல்லது பயிற்சியோ கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் சமூக வலைதளங்களில் பார்ப்பது எல்லாம் உண்மையல்ல; அவை உருவாக்கப்பட்ட உண்மைகள். கருத்தை உருவாக்குதல் என்பது சமூக ஊடக காலத்தில் அதிகமாக இருக்கிறது. எனவே, சமூக ஊடக உலகை கையாளுவதற்கான பயிற்சி வேண்டும். அப்போதுதான், வெளி உலகை கையாளுவதற்கான பயிற்சி உங்களுக்குக் கிடைக்கும்.
சமூக வலைதளமே உலகின் மிக முக்கியமான மூன்று பெரு நிறுவனங்களிடம்தான் இருக்கிறது. சமூக ஊடகங்களை அவர்கள் உருவாக்கியதற்கு சமூக சேவை எல்லாம் காரணம் இல்லை. அவர்கள் லாபத்தில் கொழிக்க வேண்டும் அவ்வளவுதான். அதற்கு என்னென்ன தேவையோ எல்லாவற்றையும் செய்வார்கள். உங்களை இன்னும் அதிகமாக சமூக வலைதளங்களில் கட்டுண்டு கிடக்கச் செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.
இறுதியாக ஒன்றே ஒன்று.. trad-wife movement எதேச்சையான ஒன்று அல்ல... திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது என சொல்வதே சரியானதான இருக்கும். பெண்களுக்கான அடையாளம் என்பது இல்லத்தரசி என்ற பெயரோ... நன்றாக சமைப்பார் என்ற பாராட்டோ அல்ல... அவர்களிடம் இந்த உலகம் பெற வேண்டியது அதிகமிருக்கிறது. Trad wife-கள் தங்கள் கணவர்களையே முழுமையாக சார்ந்து இருந்தால், அது நச்சுத்தன்மை கொண்ட சார்பாக (toxic codependency) மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. கணவர் வன்முறையாக நடக்கும்பட்சத்தில், அந்த சார்பே மிகவும் ஆபத்தானது என சமூகவியல் பேராசிரியர் டெவான் ஸ்மித் விளக்குகிறார்.
trad-wife ட்ரெண்ட் வெளிப்படுத்தும் செய்தி மிகத் தெளிவானது. பெண்களே, வேலைக்குச் செல்லாதீர்கள்!, உங்கள் அழகுக்கு முன்னுரிமை கொடுங்கள்; இல்லறத்தை ஏற்றுக்கொண்டு, உங்கள் கணவருக்காக வேலை செய்யுங்கள்! அதுவே உங்களுக்கு நிறைவைத் தரும்!.