SIR | பிகார் அரசியலை மாற்றி எழுதுகிறதா... ராகுல் அறுவடை செய்யப்போவது என்ன?
பிகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ராகுல் காந்தி இதை எதிர்த்து, தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இது எதிர்க்கட்சிகளின் வாக்குகளை குறைக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.
வரலாற்றில் முதல்முறை
பிகார் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநிலம் தற்போது படபடத்துக்கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் காரணம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம். கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி, பிகார் மாநில வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர மறு ஆய்வு செய்ய உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு முன் கடந்த 2003 ஆம் ஆண்டு பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர மறுஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதே SIR இன் முயற்சியாகும், அதே நேரத்தில் தகுதியற்ற நபர் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை" என வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தெரிவிக்கிறது.
இந்நடவடிக்கையின் மூலம் ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை வாக்காளர்களுக்குக் கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்ட நிலையில், வாக்காளர்கள் அந்தப் படிவங்களை நிரப்பி மீண்டும் சமர்பித்தனர். இதனையடுத்து, படிவங்களை விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தங்களது பெயர்கள் தவறுதலாக நீக்கப்பட்டிருப்பின் வாக்காளர்கள் அதைப் பற்றிய புகார்களை அளித்து நிவாரணம் கோரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் பொறுப்பு வாக்காளருக்கு மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
அதேவேளை இந்த சிறப்பு திருத்த நடவடிக்கையின் மூலம் பிகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. முதற்கட்டமாக நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
2 கோடி பேர் வாக்குரிமை இழக்க நேரிடும்
இந்நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அரசியல் ஆர்வலரான யோகேந்திர யாதவ், தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடமிருந்து கோரிய ஆவணங்கள் காரணமாக குறைந்தது 2 கோடி பேர் வாக்குரிமை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கிறார். Frontline இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில்,, "தி ஹிந்து நாளிதழ் வெளியிட்ட CSDS (Centre for the Study of Developing Societies)-இன் சமீபத்திய கருத்துக் கணிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கடந்த 30–40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துவிட்டது எனக் காட்டுகிறது. இது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெங்களூரில் வாக்காளர் பட்டியல் மோசடி குறித்த ஆதாரங்களை வழங்கிய பிறகு இது நடந்தது" எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கும் ராகுல்காந்தி தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மற்றும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மேலும் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த 17 ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு நடைபயணத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
பாஜகவினரோ ‘வாக்குத் திருட்டு’ எனும் ராகுலின் குற்றச்சாட்டை அரசியல் நாடகம் என விமர்சித்து வருகின்றனர். அதேசமயத்தில் தேர்தல் ஆணையமும் பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்கான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான படிவங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
எதிர்க்கட்சியினரைக் குறிவைத்த தாக்குதலா?
நிர்வாக செயல்முறை என்பதைத்தாண்டி இந்நடவடிக்கையை, ஆர்ஜேடி, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் வாக்காளர்களை குறைக்கும் அல்லது நீக்கும் திட்டமிடப்பட்ட முயற்சி என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்குக் காரணங்களும் இல்லாமல் இல்லை. பிகார் அரசியல் களம் கிட்டத்தட்ட சமூகரீதியிலான மக்கள் தொகையின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, சமீபத்தில் அம்மாநிலத்தில் வெளியிடப்பட்ட சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, அம்மாநிலத்தில் பட்டியலின மக்கள் 19.65% இருப்பதாகத் தெரிவித்திருந்தது. மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBCs): 36.01% இருப்பதாகத் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் பட்டியலின மக்களுக்கான தங்களது திட்டங்களையும், கொள்கைகளையும் பேச ஆரம்பித்தன.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மாநிலத்தின் பெரும்பாலான பட்டியலின மக்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கே சென்றடைந்தன. பின் அது வேகமாகக் குறைய ஆரம்பித்தது. தற்போது மீண்டும் வளர ஆரம்பித்துள்ளன. அதேபோல், இஸ்லாமிய மக்களின் வாக்குகள் பெரும்பாலும் ஆர்ஜேடிக்கு செல்கின்றன. நீக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட வாக்காளர்கள் பெரும்பாலும் இப்படி எதிர்கட்சியினருக்கு வாக்களிப்பவர்களாக இருக்கின்றனர் என்பது ஒரு தரப்பினரின் குற்றச்சாட்டு. ஆனால், இங்கு வேறொன்றையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
விரிந்த பரப்பை உருவாக்கும் எதிர்க்கட்சியினர்
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் ‘Rahul Yatra crowds get BJP rethinking in Bihar, will reinforce NDA unity, Modi and Nitish image’ எனும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. Liz Mathew எழுதியுள்ள அந்தக் கட்டுரையில், சில பாஜக தலைவர்கள் இந்த 'SIR' NDAவிற்கு எந்த பயனையும் தரவில்லை என நினைப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்காளர்கள் கூட இந்த பட்டியலின் மூலம் நீக்கப்பட்டிருக்கலாம் என சில பாஜக தலைவர்கள் அஞ்சுவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
INDIA கூட்டணியினர் மேற்சொன்ன சாதி மற்றும் மதம் எனும் குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் இல்லாமல், வெகுஜன மக்களது வாக்குரிமை, ஜனநாயகம் எனும் பெரிய அளவில் இந்தப் பிரச்னையை அணுகுகின்றன. இதன் மூலம் மக்கள் மத்தியில் சாதி, மதம் என்பவைகளைக் கடந்து மக்கள் மத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமென்பதையும் ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மாறி வரும் களம்
அதேபோல் பிகார் அரசியலும் மாறி வருகிறது. பிகார் அரசியலின் முக்கிய முகங்களாக இளைஞர்கள் மாறியிருக்கிறார்கள். இந்த மாற்றம் கட்சிகளின் கொள்கைகளையும் வாக்குறுதிகளையும் மறுக்கட்டுமானம் செய்திருக்கிறது. சாலை வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, நீர் வசதி போன்ற வாக்குறுதிகள் தமிழ்நாடு, டெல்லி போன்ற ஓரளவு வளரும், வளர்ந்த மாநிலங்களில் மலையேறி பல ஆண்டுகள் ஆகின்றன. பிகாரிலோ கடந்த தேர்தல் வரை இதுபோன்ற வாக்குறிகளை கட்சிகள் அளித்துக்கொண்டிருந்தன. ஆனால், தற்போது சூழல்கள் மாறியிருக்கின்றன. வேலைவாய்ப்பு, கல்வி, முதலீடு, முதியோர் நலன் போன்ற விஷயங்களை கட்சிகள் பேச ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக இளம் தலைவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் இணைத்து கதம்ப சாதமாக எதிர்க்கட்சியினர் தேர்தலை சந்திக்க பார்க்கின்றன.
இந்த SIR தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே பின்னடைவு ஏற்படுத்தும் என்ற பார்வையும் இருக்கிறது. ஏற்கனவே மாநிலத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. எதிக்கட்சியினரைத் தாண்டி கூட்டணிக் கட்சியினரே சட்டம் ஒழுங்கு தொடர்பாகக் கொடுத்த பதில்கள் கடுமையான கண்டனங்களைச் சந்தித்தன. நிதிஷ்குமார் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள், எதிரே அடுத்த தலைமுறை இளைஞர்கள் நிற்கும்போது 74 வயதான நிதிஷ் குமார் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது, அவருக்கு எதிரான அதிருப்திகள் என தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலவீனப்படுத்துவதாகவே இருக்கின்றன என்ற பார்வையும் இருக்கின்றது. தற்போது இதுவும் சேர்ந்திருக்கிறது. மிகவும் குறிப்பாக, பிகாரில் - தேர்தல் ஆணையத்தின் கணக்கின்படியே - நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கும் நிலையில், ஏறத்தாழ 10 முதல் 15 கட்சிகள் வரையில் மட்டுமே SIRக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பெருமளவிளான மக்கள் இந்த புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவின் அகந்தையும் புதைக்கப்படும் - முதலமைச்சர்
ராகுலின் யாத்திரைக்கு வருவோம். பிகாரில் பல காலமாக வட்டத்திற்கு வெளியே ஆடிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை இந்த யாத்திரை மீண்டும் மையத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. தேசியம் மட்டுமல்லாது உள்ளூர் பிரச்னைகளுக்கும் போராடும் தேசியக் கட்சியாக தன்னை நிலைநிறுத்துகொள்ள முயன்று வருகிறது. கிட்டத்தட்ட தேசிய பிரச்னையாகவே மாற்றியதன் மூலம் ராகுல் அதில் வெற்றி பெற்றுவிட்டார் என்று கூட சொல்லலாம். மாநிலம் முழுவதும் 1300 கிமீ தூரத்தை உள்ளடக்கிய ராகுல் காந்தியின் voter Adhikar Yatra செப்டம்பர் 1ஆம் தேதி பாட்னாவில் முடிவடைய இருக்கிறது. இந்த யாத்திரையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும், INDIA கூட்டணியின் முக்கியமான தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், சிபிஐ(எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா மற்றும் விஐபியின் முகேஷ் சஹானி போன்றோரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். நேற்று தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டார். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த யாத்திரையில் பங்கேற்றார். பின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், இந்தியா கூட்டணி உருவான மண் பிகார் என்றும் பாஜகவின் அகந்தையும் அங்குதான் புதைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்திய ஜனநாயகத்தின் அடுத்த அத்தியாயத்திற்கு வெளிச்சம் தரும் தீப்பொறி இந்த யாத்திரை என்றும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்
அதேபோல், ஒவ்வொரு கூட்டத்திலும் பாஜகவையும் தேர்தல் ஆணையத்தையும் சரமாரியாக விமர்சிக்கிறார் ராகுல்காந்தி. ஒரு காலத்தில் அரசியல் விவாதங்களை பாஜக கட்டமைக்கும் நிலையில், எதிர்க்கட்சியினர் அதற்கு பதிலளிக்கும் நிலையில் இருப்பார்கள். ஆனால், தற்போது ராகுல்காந்தி வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவினர் பதிலளித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் வழக்கமான அரசியல் பிரச்னையாக சுருக்கிவிடாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற போராடுபவர்களில் தன்னையும் முன் வரிசையில் நிறுத்திக்கொள்ள முயன்று வருகிறார்.
இது தொடர்பாகப் பத்திரிகையாளர் அய்யநாதனிடம் பேசினோம். “65 லட்சம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுத்திருக்கும் யாத்திரை அம்மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் கூடி அவர் பேசுவதைக் கேட்கிறார்கள். அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாகத்தான் இருக்கிறது. ஆனால், தற்போதோ பாஜகவிற்கு எதிராக மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய வேலையை இவர்தான் எடுத்திருக்கிறார். எனவே, அக்கட்சியின் செல்வாக்கு அங்கு நிச்சயமாக உயரும். மக்கள் மத்தியில் ராகுலுக்கான செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தேசிய கட்சியான காங்கிரஸ் பிராந்திய பிரச்னைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் தராது என்ற பார்வையை பாரத் ஜூடோ யாத்திரையின் மூலம் மாற்றினார் ராகுல். தற்போது தேசம் முழுவதும் காங்கிரஸ் சுணங்கிக் கிடக்கிறது என்ற பார்வை எவ்வளவு உண்மையோ, அதைத் தட்டி எழுப்பி குதிரைபோல் ஓட வைக்க ராகுல் முயல்கிறார் என்பதும் அவ்வளவு உண்மை.