PT Explainer | உலகின் மூன்றாவது கொடிய உயிரினம் நாய்.. ஆய்வுகள் காட்டும் தெரியாத உண்மைகள்!
தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் மிகப்பெரிய பிரச்னைகளுள் ஒன்றாக தெருநாய்கள் பிரச்னை உருவெடுத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நிகழ்வில் பேசிய வார்த்தைகள் இப்போதும் வைரல். கடந்த 2022 அக்டோபரில் திமுக பொதுக்குழுக் கூட்டமொன்றில் பேசிய முதலமைச்சர், “மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் அடி என்பதைப் போல் இருக்கிறது என் நிலைமை” என்று கூறியிருப்பார். அந்த வார்த்தைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றது போல் இருக்க, பல்வேறு விஷயங்களைக் குறிப்பிடும் ட்ரோல் வீடியோக்களில் இந்த வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அப்படித்தான் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நாய்களின் அபிமானிகளுக்கு இடையில் அரசுகள் மட்டுமல்ல நீதிமன்றங்களும் சிக்கியிருக்கின்றன.
எமோரி பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி கிரிகோரி பெர்ன்ஸ், சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டார். மனிதர்களுடனான தொடர்புகளின் போது நாயின் மூளையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்க காந்த அதிர்வு இமேஜிங்கைப் (MRI) பயன்படுத்தினார். இதன்மூலம் பல்வேறு விஷயங்களைக் கண்டறிந்த அவர், நாய்களுக்கு உணவு முக்கியமா அல்லது அவற்றின் உரிமையாளர் முக்கியமா என்பதை ஆராய்ந்ததில், பெரும்பாலான நாய்கள் உரிமையாளரையே தேடியதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு
இந்த பிணைப்புகள் எங்கிருந்து ஆரம்பித்தன? மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஆண்டுகள் உறவு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன; அதற்கான சான்றுகளும் இருக்கின்றன. சாம்பல் ஓநாய்கள் மனிதர்களுக்கு நெருக்கமான நிலையில், காலப்போக்கில் அதன் உடலமைப்பிலும் பண்புநலன்களிலும் மாற்றம் ஏற்பட்டு தற்கால நாய் இனங்கள் உருவானதாக ஆய்வுகள் இருக்கின்றன. உணவுக்காக மனிதர்களை அண்டி வாழ்ந்த சாம்பல் ஓநாய்களின் பயன்பாடுகளைக் கண்டுகொண்ட மனிதன், காலப்போக்கில் தனக்காக அதைப் பயன்படுத்த ஆரம்பித்தான். உதாரணமாக, பண்டைய ரோமில், நாய்கள் போரில் பயன்படுத்தப்பட்டன. இடைக்கால ஐரோப்பாவில், நாய்கள் வேட்டையாடுவதற்கும் கோட்டையின் பாதுகாவலர்களாகவும் பயன்படுத்தப்பட்டன. அந்த உறவுமுறை தொட்டுத் தொடர்ந்து தற்காலத்தில், பல நூறு கோடிகள் கொண்ட பொருளாதாரமாக நாய் வளர்ப்பு முறைகளை மாற்றியிருக்கிறது.
பிணைப்பு எங்கிருந்து உருவானது
இப்படி மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடைப்பட்ட பிணைப்பை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், தற்காலத்தில் என்ன பிரச்னையாக இருக்கிறது.
உலகின் மூன்றாவது கொடிய உயிரினம் நாய் என World Animal Foundation தெரிவிக்கிறது. இதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. புள்ளி விபரங்களின்படி, உலகளவில் 700 மில்லியன் முதல் 1 பில்லியன் வரையிலான நாய்கள் இருக்கின்றன. இது வீடுகளில் வளர்க்கப்படுபவை தெருநாய்கள் என அனைத்தையும் சேர்த்த கணக்கு.. இதில் 75%க்கும் அதிகமான நாய்கள் எவ்விதமான கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும் இன்றி சுதந்திரமாக இருக்கின்றன. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ரேபிஸ் நோய் 59000 மக்களைக் கொல்வதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.. ரேபிஸ் தாக்குதலில் கிட்டத்தட்ட 95% மரணங்கள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் நடக்கின்றன.
வௌவால்கள், கீரிகள் மற்றும் பூனைகளின் மூலம் கூட ரேபிஸ் நோய் பரவலாம் என்றாலும்கூட நாய்க்கடிகளின் மூலம் பரவிய ரேபிஸ் மூலம் மட்டுமே 99% மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மிக முக்கியமாக நாய்க்கடிகளின் மூலம், 70% குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் இறப்புகள் ரேபிஸால் நிகழ்வதாக உலக சுகாதார இயக்ககம் தெரிவித்திருக்கிறது. ரேபிஸ் தடுப்பு குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரேபிஸ் தடுப்பூசியை உருவாக்கிய லூயிஸ் பாஸ்டரை கௌரவிக்கவும், உலக ரேபிஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 அன்று கொண்டாடப்படுகிறது. 100% தடுக்கக்கூடியதாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 70,000 பேர் ரேபிஸால் இறக்கின்றனர்.
புள்ளி விபரங்கள் மட்டுமல்ல..
இந்தியா என்று இன்னும் தீவிரமாக உற்றுநோக்கினால், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் (IDSP) தரவுகளின்படி, 2022 மற்றும் 2024 க்கு இடையில் இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் கிட்டத்தட்ட 70 சதவீதம் அதிகரித்துள்ளன. இன்னும் குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் மட்டும், நாட்டில் 37.17 லட்சம் நாய்க்கடிகள் பதிவாகியுள்ளன; சராசரியாக ஒவ்வொரு நாளும் 10,000 க்கும் மேற்பட்ட நாய்க்கடி சம்பவங்கள் நிகழ்கின்றன. இவை நோய்தடுப்பு இலக்குகளுக்கும் கள யதார்த்தங்களும் இடையில் இருக்கும் இடைவெளியைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் 4.5 லட்சம் தெருநாய்களும், வளர்ப்பு நாய்கள் 4.5 லட்சம் என மொத்தம் 9 லட்சம் நாய்கள் இருப்பதாக தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை தெரிவித்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் நாய்க்கடியால் ஏற்பட்ட ரேபிஸ் மரணங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
கொரோனா ஆண்டுகளில் நாய்க்கடிகள் குறைந்தன, ஆனால் தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றன. 2018-இல் 75.7 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2021-இல் அது 17 லட்சமாக குறைந்தது. இது கொரோனா ஊரடங்குகளால் மக்கள் நடமாட்டம் குறைந்ததின் விளைவு எனக் கருதப்படுகிறது. ஆனால், 2024-க்குள் அந்த எண்ணிக்கை 37.2 லட்சம் எனக் கடுமையாக அதிகரித்துள்ளது. இவைகள் எல்லாம் புள்ளிவிபரங்கள் மட்டுமல்ல... ஒவ்வொரு நாய்க்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பின்னும் ஒரு குடும்பத்தின் எதிர்காலமும் சோகமும் இருக்கிறது
உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதற்கான எதிர்வினைகளும்
அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. பல்வேறு தரப்பினரும் இந்த உத்தரவுக்கு எதிராகப் போராடினார்கள். பின்னர் அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றியமைத்திருக்கிறது. அதேவேளை, தெருவோர நாய்களுக்கு உணவளிப்பவர்கள் கண்ட இடங்களில் உணவுகளை வைக்ககூடாது என்றும் ஒரு குட்டு வைத்துள்ளது. மேலும், தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அதைப்பிடித்து தடுப்பூசி செலுத்தப்பட்டபின் அந்த நாய்களைப் பிடித்த அதே இடத்தில் அதை மீண்டும் விட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. வெறிபிடித்து ஆக்ரோஷமாக தாக்கும் நாய்கள் தனியாக பிடிக்கப்பட்டு காப்பகங்களில் அடைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ளும்போது அதைத்தடுப்பவருக்கு 25 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் இருக்கும் வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய கொள்கையை உருவாக்க ஆயத்தமாகியுள்ள உச்சநீதிமன்றம் இதில் பதிலளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவும் பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் SP சிங் பாகேல், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1960 இன் கீழ் உருவாக்கப்பட்ட ABC (animal birth control) விதிகள், உலக கால்நடை சுகாதார அமைப்பின் (World Organisation for Animal Health) சர்வதேச தரநிலைகளை பின்பற்றுகின்றன எனத் தெரிவித்தார். இந்த விதிமுறைகளின் கீழ், உள்ளாட்சி அமைப்புகள்தான் (தொகுதி, மாநகராட்சி, நகராட்சிகள்) கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துவதற்கு பொறுப்புடையவை என்றும் அவை விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தலைவலியாகும் செலவுகள்
ஒரு ரேபிஸ் தடுப்பூசி கிட்டத்தட்ட ரூ.300ல் இருந்து ரூ,400 வரை விற்கப்படுகிறது. நாய்களுக்கான கருத்தடை செலவுகள் இடம் மற்றும் அந்த செயல்பாட்டை மேற்கொள்பவரைப் பொறுத்து ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடுகின்றன. அரசு கால்நடை மருத்துவமனைகளில் தோராயமாக ₹1,600 முதல் ₹3,000 வரையிலும் தனியார் மருத்துவமனைகளில் சேவைகளுக்கு ₹5,000 முதல் ₹6,500 வரை செலவாகலாம் என சராசரியான பார்வையிருக்கிறது. சில அரசு சாரா நிறுவனங்களும் குறைந்த செலவில் இதை செயல்படுத்தி வருகின்றன. சில இடங்களில் இந்த செலவுகள் அதிகரிக்கவும் செய்யலாம். அதோடு ஆண் நாய்களுக்கும் பெண் நாய்களுக்கும் இந்த செலவுகள் மாறுபடுவதுபோல் நாய்களின் இனங்களுக்குத் தக்கவாறும் மாறுபடலாம். இதை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்த வேண்டும் என்பது கிட்டத்தட்ட மலையை நொறுக்கி பொடியாக்கும் வேலைதான். அவர்கள் அதைச் செய்ய முயன்றாலும், அதற்குத் தேவையான நிதி உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கிறதா என்றால், அதற்கான பதில் இல்லை என்பது.
நாட்டின் பெரும்பாலான ஊராட்சிகள், நகராட்சிகள் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலைகள் குடிநீர் போன்றவற்றையே செய்துத் தரமுடியாமல் சிரமப்படும் நிலையில், எங்கிருந்து நாய்களுக்குக் கருத்தடை செய்வது. அதோடு, நாய்களுக்கு கருத்தடை செய்வதை முறையாக மேற்கொண்டால், அதன் பயன் தற்போதைய தலைமுறைக்குக் கிடைக்காமல் அடுத்தத் தலைமுறைக்குத்தான் கிடைக்கும். அது நீண்டகால நோக்கத்திற்கான தீர்வு. ஆனால், தற்போதைய தலைமுறை மக்களை தெருநாய்க்கடிகளில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், நாய்களை தனிமைப்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். எனவே, அரசின் நேரடியான தலையீடு இந்த விவகாரத்தில் அவசியம் என்கின்றனர்.
வெளிநாடுகளில் இருக்கும் சட்டங்கள்
வெளிநாடுகளில் நாய் வளர்ப்புக்கான என்னென்ன சட்டங்கள் எல்லாம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமானது. நெதர்லாந்தில், CNVR திட்டங்கள் (catch, neuter, vaccinate, return) மூலம் தெருநாய்களை கட்டுப்படுத்த அல்லது குறைக்க பல்வேறு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக உழைத்துள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் கருத்தடை மூலம் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் எண்ணிக்கை குறைந்தது. தெருநாய்கள் இல்லாத நாடு என்ற அந்தஸ்தை அடைந்த முதல் நாடு நெதர்லாந்தாகும்.
துருக்கியில் ஜூலை 2024 இல், நகர்ப்புற வீதிகளில் இருந்து சுமார் 4 மில்லியன் தெருநாய்களை நகராட்சிகள் அகற்ற வேண்டும் என்று துருக்கி ஒரு சட்டத்தை இயற்றியது. நோய்வாய்ப்பட்ட, ஆக்ரோஷமான அல்லது மனிதர்களுக்கு உடல்நல ஆபத்தை விளைவிக்கும் நாய்களுக்கு கருணைக்கொலை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில் செல்லப்பிராணிகளைக் கைவிடுவது என்பது சட்டவிரோதமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 45,000 பவுண்டுகள் (ரூ. 53 லட்சத்திற்கு மேல்) அபராதம் விதிக்கப்படும்.
சுவிட்சர்லாந்தில் ஒரு நாயை வாங்குவதற்கு முன் அதற்கான சான்றிதழ் படிப்பை முடித்திருப்பதும் அவசியமாகும். நாய் உரிமையாளர்கள் தங்களது நாய்களை மண்டல அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும். இதுபோல் ஒவ்வொரு நாடும் பல்வேறு வகையான நடைமுறைகளை மேற்கொள்கின்றன. பல்வேறு நாடுகளில் கருணைக்கொலையும் செய்யப்படுகின்றன.
எதற்காகவெல்லாம் நாய்கள் கடிக்கலாம்?
நாய்களின் பெரும்பாலான ஆக்ரோஷமான நடவடிக்கைகள் அதன் பயத்தில் இருந்து வெளிப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாய் ஒரு நபரையோ, சூழலையோ பார்த்து பயப்படும்போது, அதன் பாதுகாப்புக்காக கடிக்கலாம்.
நாய்கள் திடுக்கிடும்போது குழப்பமடைந்து கடிக்கலாம்.
உதாரணத்திற்கு ஒருநாய் தூங்கிக் கொண்டிருந்தால், அது திடுக்கிட்டு விழிக்கும்போது அந்த சூழலில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடியாமல் குழப்பமடையக் கூடும். இதனால் அந்த நாய்கள் கடிக்கலாம். பொதுவாக, வயதான அல்லது பார்வைக் குறைவு மற்றும் கேட்கும் திறன் குறைவாக இருக்கும் நாய்களுக்கு இது பொருந்தக்கூடும்.
நாயின் பொம்மைகள், உணவு அல்லது அதன் வேறு ஏதேனும் பொருளை குழந்தைகளோ அல்லது வேறு யாரேனோ எடுக்க முனைந்தாலோ அல்லது அந்த பொருள் எடுத்துச் செல்லப்படும் என நாய்கள் பயந்தாலோ அப்போது கடிக்கலாம்.
நெடுநாட்களாக கட்டப்பட்டே இருக்கும் நாய்கள் விரக்தி அடையும்போது கடிக்கலாம்.
நோய்வாய்ப்பட்ட, வலியுடன் போராடும் நாய்கள் பயம் மற்றும் அழுத்தம் காரணமாக கடிக்கலாம்.
எந்த ஒரு நாயும் குரைப்பின் மூலம் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய பின்பே கடிக்க ஆரம்பிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குப்பைக் கூளங்களைச் சுற்றித்திரியும் நாய்கள் மருத்துவக் கழிவுகளை உட்கொள்ளும்போது அவை மேலும் ஆக்ரோஷமாகின்றன என்றும் சொல்லப்படுகிறது.