சீமான் Vs விஜய்.. இளம் வாக்காளர்களின் நம்பிக்கை யார்? ஓவர்டேக் செய்கிறதா தவெக? - விரிவான அலசல்
தமிழக அரசியல் களம் தற்போதே பரபரக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சியினரும் மக்களைத் தேடிச் செல்லத் தொடங்கிவிட்டனர். திமுக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று தொடங்க, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்று விறுவிறுப்பாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தேமுதிக ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்றும், தமிழக வெற்றிக் கழகம் ‘மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர்’ என்றும், 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடுத்தகட்ட பணிகளைத் தொடங்கியிருக்கின்றன. சீமான் வழக்கம்போல் தனித்தே போட்டி என்ற முனைப்பில், பரபரப்பான ப்ரஸ்மீட்கள், அனல்கக்கும் ஆவேச உரைகள், அடுத்தடுத்த போராட்டங்கள் என களத்தில் பிஸியாக இருக்கிறார்.
இத்தகைய சூழலில் தற்போது பேசுபொருளாகியிருப்பது தவெக தலைவர் விஜய் மீதான சீமானின் அட்டாக்தான். “பெரியாரையும், திராவிடத்தையும் வீழ்த்துவோம்; இதுதான் என் வேலைத்திட்டம்; திமுகவே தனது முதல் எதிரி” என ஆவேசமாகக் கூறி வந்த சீமான் தற்போதோ ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும், ஒவ்வொரு பொதுக்கூட்ட மேடையிலும் விஜயை தாக்கிப் பேசுவதும் வழக்கமாகியிருக்கிறது.
சீமானின் அட்டாக்கிற்கு காரணம் என்ன?
விஜயின் அரசியலை மனதார வரவேற்று, வார்த்தைக்கு வார்த்தை தம்பி என்று பேசி வந்த சீமான், தவெகவின் கொள்கைத் தலைவராக பெரியார் அறிவிக்கப்பட்டபின் தனது விமர்சனத்தைத் தீவிரப்படுத்தினார். இதுதொடர்பாக அப்போது புதிய தலைமுறை இணையத்திற்குப் பேசியிருந்த பத்திரிகையாளர் சுகுணா திவாகர், “விஜய் தன்னுடன் கூட்டணி வைப்பார் என சீமான் நினைத்தார். ஆனால், விஜய் அதை சாதுர்யமாக கத்தரித்துவிட்டார். கொள்கைத் தலைவர்களாக பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டார். இதன் மறுநாளில் இருந்தே சீமான் விஜய்யை கடுமையாக தாக்க ஆரம்பித்துவிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.
திமுக - அதிமுக இல்லாமல் வேறு யாருக்காவது வாக்களிக்க விரும்பும் மக்களது தேர்வாக நாம் தமிழர் கட்சியே இருந்தது.. இருக்கிறது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் நாதக 177 இடங்களில் மூன்றாம் இடத்தையும், தமிழ்நாடு முழுவதிலும் மொத்தமாக 6.6% வாக்குகளையும் பெற்றதைப் பார்க்கும்போதே இது புரிந்துவிடும். தமிழ்நாடு முழுவதும் 30 லட்சம் வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி, இத்தனைத் தேர்தல்களைச் சந்தித்த ஒரு கட்சி இன்னும் தேர்தலையே சந்திக்காத தவெகவை கடுமையாக விமர்சிக்கக் காரணம் என்ன? களத்தில் நடப்பது என்ன?
சீமானை ஓவர்டேக் செய்யும் விஜய்
பத்திரிகையாளர் சுவாமிநாதன் புதிய தலைமுறை நேர்பட பேசு சிறப்பு நேர்காணலில் சில கருத்துகளைக் கூறியிருந்தார். அதை இங்கு மேற்கோள் காட்டினால் சரியாக இருக்கும். அவர் கூறுகையில், “60 வயதினைக் கடந்தவர்கள் இரட்டை இலை அல்லது உதயசூரியன் என்றுதான் இருக்கிறார்கள். ஆனால், இளைஞர்களில் பெரும்பாலானோர் விஜய் என்றுதான் சொல்கிறார்கள். இது சீமானுக்கான சேதம். சீமானுக்கு வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானோர் புதிய வாக்காளர்கள். ஆனால், இந்த வாக்குகள் தற்போது விஜய்க்கு செல்ல வாய்ப்பிருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
சமீபத்திய தரவுகளின்படி, மாநிலத்தில் மொத்தம் 18 முதல் 19 வயதுடைய முதல் முறை வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் 6.51 லட்சம் பேர் உள்ளனர். அதே நேரத்தில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 1.06 கோடிக்கும் சற்று அதிகமாக இருக்கின்றனர். தேர்தல் நெருங்கும் சூழலில் இது சற்றே அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இங்குதான் சீமானை ஓவர்டேக் செய்கிறார் விஜய்.
சீமானுக்கு அச்சுறுத்தல் கொள்கைக் குழப்பங்கள்
இதுதொடர்பாகப் பேச பத்திரிகையாளர் சுவாமிநாதனையே தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “வரும் சட்டமன்ற தேர்தலில் ஆறில் ஒரு பங்கு வாக்காளர்கள் இளைஞர்களாக இருக்கின்றனர். அதாவது, 18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள்.
இத்தனை ஆண்டுகளாக சீமானுக்கு கிடைத்த வாக்குகளை மூன்றாகப் பிரிக்கிறேன்.
மாற்று சக்தி என்று சீமானுக்குக் கிடைத்த வாக்குகள்.
சீமானின் கொள்கை மற்றும் சித்தாங்களாலும், அவர் பேசும் அரசியலாலும் ஈர்க்கப்பட்டவர்கள்.
சீமானுக்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பார்க்கலாம் என நினைத்தவர்கள்.
இப்போது என்ன சிக்கல் என்றால், சீமானின் கொள்கைக்காக வாக்களித்தவர்கள் தவிர மற்ற இருதரப்பினரின் நிலைப்பாடுகள் விஜய் பக்கம் செல்லலாம்.
இதைத்தாண்டி, சீமானின் கொள்கைக் குழப்பங்களும் அவருக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. கடந்த காலங்களில் சீமான் சிறும்பான்மையின மக்களது வாக்குகளை அதிகளவில் அறுவடை செய்திருப்பார். தற்போதோ சங்கி என்றால் நண்பன் என்று சொல்கிறார்; பெரியாரை விமர்சிக்கிறார். எனவே, சிறும்பான்மையின மக்களது வாக்குகள் அவருக்குச் செல்லுமா என்பது சந்தேகம். உதாரணத்திற்கு குமரி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், இங்கு மீனவர்களின் வாக்குகளை கடந்த காலங்களில் சீமான் அதிகளவில் பெற்றிருக்கிறார். இப்போதோ சீமான் தான் அரசியலில் இருந்து முற்றாக மாறும்பொழுது அது கடற்கரை கிராமங்களில் பெரிதாக எதிரொலிக்கும்.
விஜயை எதிர்ப்பதே தவறான அரசியல்தான்
இன்னொன்று.. திமுக இதுநாள் வரை மதச்சார்பற்ற கூட்டணி என்பதை திமுக கட்டமைத்திருக்கிறது. இங்கு விஜய், திமுகவிற்கு எதிரான அதிமுக வாக்குகளையும் சிதைக்கிறார்; திமுக தங்களுக்கான வாக்குகளாக வைத்திருக்கும் பாஜக எதிர்ப்பு வாக்குகளையும் சிதைக்கிறார். விஜய் இன்னும் களத்திற்கே வரவில்லை என்றாலும் கூட, பெரும்பான்மையான இளைஞர்களின் வாக்குகள் விஜய்க்குதான் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன். கமல்ஹாசனுக்கும் கோவைத் தெற்கிற்கும் என்ன என்ன உறவு இருந்தது. ஆனால், தேர்தலில் வானதி சீனிவாசனைத் திணறடித்தார். இதேதான் விஜய்க்கும்.
முதல்முறையாக வாக்களிப்பவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் இவர்களிடம்தான் விஜய் இருக்கிறார். ஆனால், இந்த வாக்குகளை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இந்த வாக்குகளை மொத்தமாக அள்ளினாலே அக்கட்சி 10% வாக்குகளை வாங்கிவிடும். இதில் விஜய் களத்திற்கும் வந்து, அதிகமான போராட்டங்களை செய்தார் என்றால் தேர்தல் முடிவுகளில் வெற்றி யாருக்கும் என்பதை முடிவு செய்யும் இடத்தில் விஜய் இருப்பார். அவரைத் தவிர அவரது கட்சியில் யாரும் வெற்றிபெற மாட்டார்கள் என்றாலும்கூட, யாருடைய வெற்றியையும் அவரால் கூறுபோட முடியும்.
சீமான் விஜயை எதிர்ப்பதே தவறான அரசியல்தான். திமுக அதிமுக மாறி மாறி விமர்சித்துக்கொள்கிறது என்றால் இருவரும் எதிரெதிர் தரப்பில் இருக்கின்றனர். ஆனால், இங்கு விஜயை சீமான் தனது எதிரியாக முன்நிறுத்துகிறார். அவருக்கு இயல்பிலேயே பயம் இருக்கிறது. நமது வாக்குவங்கி விஜயால் குறையும் என்று சீமான் நினைக்கிறார். அதனால்தான் அந்த எரிச்சலை வெளிப்படுத்துகிறார். சீமான் விஜயை கடுமையாக விமர்சிக்கும்போது நாதகவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் வெளியில் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. சீமான் தனக்குறிய களத்தில் தொடர்ச்சியாக வேலை செய்து தனது சித்தாந்த ரீதியிலான வாக்குகளை மட்டும் அதிகரித்தாலே போதுமானது. ஆனால், அந்த இடத்தினை விஜய் கேள்விக்கு உள்ளாக்கும்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது” எனத் தெரிவித்தார்.
முழு முனைப்பில் தவெக & நாதக
243 தொகுதிகளிலும், 69,400 பூத்களுக்கு ஏஜெண்டுகளாக தலா 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக கூறுகிறார் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. ஒரு பூத் ஏஜெண்டுக்கு 250 குடும்பத்தினர் என ஒதுக்கியுள்ளார்கள். பூத் ஏஜெண்டுகள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பிரச்சினைகளைக் கேட்டறிவார்கள். இங்கு மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் என விஜய்யை முன்நிறுத்துகிறார்கள்.
2 தேர்தல் மேலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் 24 மணி நேரமும், வாக்காளர்களின் மனநிலையை பகுப்பாய்வு செய்வது, பிற கட்சிகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது என, வார் ரூம் மற்றும் பிரச்சார வியூகத்தை கையாளுகிறார்கள். த.வெ.க. வின் 120 மாவட்டச் செயலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
மறுமுனையில் நாம் தமிழர் கட்சியை எடுத்துக்கொண்டால், தொடர்ச்சியாக மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கும் புதுக்கோட்டை கந்தவர்வக்கோட்டை தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.
விஜய் More Professional
தவெக மற்றும் நாதகவின் கட்டமைப்புகள் தொடர்பாகப் பேசுவதற்காக பத்திரிகையாளர் TN ரகுவைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “சீமான் விஜயை எதிர்ப்பதற்கு அரசியல் ரீதியான காரணம் இருப்பதாகத் தோன்றுகிறது. சீமான் தனியாக நின்று இதுவரை ஆட்சி செய்தவர்களைத்தான் எதிர்க்க வேண்டும். ஆனால், புதிதாக வந்தவரை அவர் ஏன் கேள்வி கேட்க வேண்டும்.
தவெக, நாதக என்ற இரு கட்சிகளின் கட்டமைப்பின்படி விஜய் more professional எனத் தோன்றுகிறது. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கம் சீமானுக்கு இருப்பதாக தெரியவில்லை. அவருக்கு இப்போது இருக்கும் சூழ்நிலைகள்தான் சரியாக இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். வெற்றி பெறவில்லையென்றாலும் கவலையில்லை. ‘வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி’ என்று சென்றுவிடுவார். ஆனால், இதேபோல் சொல்வதற்காக விஜய் வரவில்லை. விஜய் மக்கள் இயக்கம் என்ற ரசிகர் மன்ற கட்டமைப்பு அவருக்கு ஏற்கனவே இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா எல்லாம் உள்ளே வந்தபின் பூத் கமிட்டிகளை ஒருங்கிணைப்பதை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். முன்பு விசிகவிலேயே இதைச் செய்திருக்கிறார். எனவே கட்டமைப்பு என்பதில் என்னைப் பொறுத்தவரை நாதகவை விட தவெக ஒருபடி மேலே இருக்கிறது. நாம் தமிழர் கட்சி செயலை விட பேச்சில் வளர்ந்த கட்சி. ஆனால், தவெக பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் அதே நேரத்தில் அவர்களுக்கு விஜயின் முகமும் உடன் இருக்கிறது.
வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணம் சீமானுக்கு இல்லை
நாம் தமிழர் கட்சி எதாவது ஒரு விஷயம் தொடர்பாக கட்சிக்குள்ளாக கலந்தாலோசித்து பார்த்திருக்கிறோமா? வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை போன்ற விவாதங்களையே உங்களால் பார்க்க முடியாது. அங்கு அவர் நினைத்ததுதான் நடக்கும். திடீரென ஓர் இடத்திற்கு சென்று ஒருவரை வேட்பாளராக அறிவிப்பார். அந்த அறிவிப்பை யாரை கலந்தாலோசித்து வெளியிட்டார். எனவே, அவரது வழிதான் அந்த கட்சியின் வழி. தவெகவிலும் அதே நிலைமைதான். ஆனால், புகழ் வெளிச்சம் என்பதன் அடிப்படையில் தவெக பக்கம் வருபவர்கள் இன்னும் அதிகமாக இருப்பார்கள்.
வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணமே சீமானுக்கு இல்லை. அவர்கள் உள்ளாட்சித் தேர்தலிலேயே வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெறாத ஒரு கட்சிக்கு ஏன் பணம், உடலுழைப்பு என எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என நிர்வாகிகள் யோசித்தால் அது நியாயம் தானே. அப்படிப்பார்த்தால் தவெகவில் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே தோன்றுகிறது ” எனத் தெரிவித்தார்.