மண், மனம், மக்கள் - அறிவோம் தமிழகம் | சாதி ஆதிக்க எதிர்ப்பின் கலக குரல்.. இது குமரியின் கதை!
கன்னியாகுமரி என்பது நாட்டின் முடிவல்ல.. தொடக்கம் என்பதை உணர்த்தும் விதமாக கடலிருந்து நிலப்பரப்பை நோக்கி வானுயர வள்ளுவர் சிலையை அமைத்தார் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. ஆனால், குமரி மண்ணின் வரலாற்றிலிருந்து அதற்கு வேறொரு அர்த்தத்தை - மிகத் தேவையான ஒன்றை - நம்மால் கற்பித்துக்கொள்ள முடியும்; கற்பித்துக்கொள்ளவும் வேண்டும். ‘தமிழ் என்பது நீச பாஷை.. தமிழ் பேசுபவர்கள் நீசர்கள்’ என்ற மலையாள ஆதிக்க சாதியினர் ஆணவத்தின் உச்சத்தில் பேசிய மண்ணில், உலகப்பொதுமறை தந்த வள்ளுவனை, தமிழர்களுக்கான அடையாளத்தை வானுயர நிற்க வைத்தது சரியாகத்தானே இருக்கும்.
குமரி மாவட்டம் 1956க்கு முன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது ஆதிக்க சாதியினரிடமிருந்து கொடூரமான அடக்குமுறைகள், சுரண்டல் போன்றவற்றை எதிர்கொண்ட மக்கள், அவற்றிலிருந்து விடுதலை பெற 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிறுசிறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போராட்டங்கள் வலுவாகி 20 ஆம் நூற்றாண்டில் மத்தியில் - குமரி, நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, களியக்காவிளை போன்ற தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் - திருவிதாங்கூரில் இருந்து பிரிந்து சென்னை மாகாணத்துடன் இணைவதற்கு வழிவகுத்தது.
‘பைத்தியக்காரர்களின் புகலிடம்’
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து மெட்ராஸ் மாகாணத்தோடு இணைந்ததற்கு மொழி அடிப்படையிலான பாகுபாடுகள் அங்கு கடைபிடிக்கப்பட்டது மட்டும் காரணம் அல்ல. சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளை தமிழ் மக்கள் அங்கு சந்தித்ததும் மிக முக்கியமான காரணம். வட திருவிதாங்கூரில் ஈழவ சமூக மக்கள் அதிகம் என்றால் தென் திருவிதாங்கூரில் நாடார் சமூக மக்கள் அதிகமிருந்தனர். தென் திருவிதாங்கூர் என்பது குமரி, ஆரல்வாய்மொழி, தோவாளை, களியக்காவிளை, சுசீந்திரம், நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, கல்குளம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.
அங்கு அம்மக்கள் சந்தித்த ஒடுக்குமுறைகளே போராட்டங்களுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, குறிப்பிட்ட சமூகத்தின் மிக முக்கியமான தொழில் என்பது பனை மரம் சார்ந்து இருக்கிறது என்றால் ஒவ்வொரு பனைக்கும் வரி என்ற முறை இருந்தது. குழந்தை பிறந்தால் வரி, வீட்டு வரி, மார்பு வரி என இன்னின்ன வரிகள் என்றில்லாமல் எல்லாவற்றிலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
கலாச்சார படையெடுப்பால் மிகவும் ஆழமாக பாதிக்கப்பட்ட பகுதி என்றால் அது கேரளாதான். இந்தியா முழுவதிலுமே சாதிகள் இருந்தாலும், கேரளாவில் அதன் தாக்கம் இன்னும் அதிகமானது; தமிழர்களை மிக மோசமான கொடுமைகளுக்கு உள்ளாக்கியது. 19 ஆம் நூற்றாண்டில் கேரளத்திற்கு வந்த விவேகானந்தர் அங்கு நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டு அந்த தேசத்தை ‘பைத்தியக்காரர்களின் புகலிடம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார் என்றால் அங்கு நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளை நாமே புரிந்துகொள்ளலாம்.
அப்படிப்பட்ட மண்ணில் இருந்து விடுபட்டு எப்பாடுபட்டாவது மெட்ராஸ் மாகாணத்துடன் இணைந்துவிட வேண்டுமென நாஞ்சில் நாட்டு மக்கள் மிகத்தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், அத்தனை சீக்கிரம் ஒரு நிலத்தை ஆதிக்கத் தரப்பினர் விட்டுக்கொடுத்துவிடுவார்களா என்ன?
நிலத்தின் மீதான காதலா?
சுதந்திர இந்தியாவில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், சமஸ்தான காங்கிரஸ் கட்சியினர் மிகவும் அதிகாரத்துடன் செயல்பட்ட காலம். குமரிப்பகுதி இணைந்திருந்த திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்களை இணைத்து அவற்றோடு மெட்ராஸ் மாகாணத்துடன் இருந்த மலபார் பகுதியையும் இணைத்து ஐக்கிய கேரளமாக உருவாக்க வேண்டுமென்று சமஸ்தான காங்கிரஸ் கட்சியினர் குரல்கொடுத்து வந்தனர். மலையாளம் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மலபார் பகுதி கேரளத்தோடு இணைய வேண்டும் என்ற கோரிக்கை சரிதான். ஆனால், தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தென் திருவிதாங்கூரும் கேரளத்தோடு இணைய வேண்டுமென்பது எப்படி சரியாக இருக்கும்? அது நிலத்தின் மீதான காதலா என்றால் அப்படி அல்ல..
தற்போதைய குமரி என்பது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு பூமிகளின் சங்கமம். குறிப்பாக அகஸ்தீஸ்வர வட்டமும் தோவாளையும் இணைந்த நிலப்பரப்பான நாஞ்சில் நாடு என்பது வளமான நிலப்பரப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைவதற்கு முன்பு கேரள மாநிலத்தின் நெற்களஞ்சிமாக திகழந்ததே நாஞ்சில் நாடுதான். தற்போதுகூட, தமிழக அரசின் இணையத் தகவலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12000 ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கேரளத்திற்கு இப்போதும் இப்பகுதிகளில் இருந்து அரிசியும் வாழையும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐக்கிய கேரளத்தில் குமரியும் இணைய வேண்டுமென வலுத்த கோரிக்கைக்கு இதுவும் ஒரு காரணம்.
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்
ஐக்கிய கேரளத்திற்கான சமஸ்தான காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் எதிர்த்தனர். ஏற்கனவே, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் கட்சியின் பெயரில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழ் மொழி அந்நியப்படுத்தப்படுவதற்கு எதிராவும் மக்கள் போராடிக் கொண்டிருந்த நிலையில் ஐக்கிய கேரளம் என்ற கோரிக்கை மேலும் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தியது.
முதலில், திருவாங்கூர் தமிழர் உரிமைப் பாதுகாப்பு குழு எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. பின் பி.எஸ். மணி, இரா. வேலாயுதம், கே.நாகலிங்கம், காந்திராமன், ஆர்.கே. ராம், முத்தையா, மார்க்கண்டன் ஆகியோர் முன்முயற்சியில் சாம் நத்தானியேல் தலைமையில் அகில திருவாங்கூர்த் தமிழர் காங்கிரஸ் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. மிக முக்கியமாக 1947 செப்டம்பர் 8 ஆம் தேதி அகில திருவாங்கூர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பு நேசமணியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அகில திருவாங்கூர்த் தமிழர் காங்கிரஸ் என்பது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குமரித்தந்தை
மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடந்து உச்சக்கட்டத்தை எட்டியதற்கு மிக முக்கியமான காரணம் மார்ஷல் நேசமணி. பெரும் செல்வாக்கு அற்று இருந்த அக்கட்சி நேசமணி தலைவரானதும் வீறுகொண்டு எழுந்தது. ஏராளமான ஊர்களில் கூட்டம் போட்டு பேசிய நேசமணி கட்சி என்பதைத் தாண்டி அதை அனைத்து சமூக மக்களும் இருக்கும் மக்கள் இயக்கமாக மாற்றினார். முதலில் நேசமணி யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நீதிமன்றங்களில் ஆதிக்க சாதி வழக்கறிஞர்களுக்கு ஒருவித இருக்கையும், ஒடுக்கப்பட்ட சாதியின வழக்கறிஞர்களுக்கு வேறுவித இருக்கைகளும் இருப்பது நடைமுறையில் இருந்தன. ஆனால், நீதிமன்றத்திற்கு சென்ற ஒரு வழக்கறிஞர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்காலிகளை நீதிபதியின் முன்பே எட்டி உதைத்து நாற்காலிகளில் சென்று அமர்ந்தார். அந்த அஞ்சா நெஞ்சர்தான் மார்ஷல் நேசமணி. அந்த சம்பவத்திற்குப் பிறகே அனைத்து வழக்கறிஞர்களுக்கும் ஒரேவிதமான இருக்கை உறுதி செய்யப்பட்டது. மக்களுக்காக அவரது தொடர்ச்சியான செயல்பாடுகள் அவரை திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் ஆக்கியது.
பலவிதமான அமைப்புகளில் போராட்டங்களை முன்னெடுத்த மக்களை திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் ஒரு அமைப்பின்கீழ் கொண்டு வந்தவர் மார்ஷல் நேசமணி. போராட்டக் களத்தினை இன்னும் வலுவாக்கியவர். ஒரு குடையின் கீழ் குமரி மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டமே குமரியை மெட்ராஸ் மாகாணத்தோடு இணைத்தது.
அது இணைந்தது எப்படி? மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் குமரி எப்படி இருந்தது? குமரி மன்னின் முக்கிய முகங்கள் யார்? விவசாயம் எப்படி? சுற்றுலாத் தளங்கள் என்ன? குமரியில் இருக்கும் ஆளுமை ஒருவரது விரிவான நேர்காணல்.. தற்போதைய குமரி எப்படி இருக்கிறது? தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் முன்னணி வகிக்கின்றன? யார் முன்னணியில் இருக்கிறார்? அடுத்தடுத்த பாங்களில் பார்க்கலாம்.