தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்pt web

TVK Madurai Maanadu | ஓவர் ஹைப்புடன் ஒரு சுமாரான திரைப்படமா தவெக மாநாடு..?

தவெக மாநாட்டை மிகச்சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்.. ஓவர் ஹைப்புடன் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றுவரும் ஒரு சுமாருக்கும் கீழான திரைப்படம்.
Published on

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாநாடு

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு. மாநாடு தொடங்குவதற்கு முதல் நாள் மாலை முதலே தவெக ஆதரவாளர்கள் மாநாட்டுத் திடலில் கூடத்தொடங்கிய நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து மாநாட்டுப்பாடல் வெளியானது. அதில் விஜயும் பாடியிருந்தார். அதில், “சாதி எனும் சாக்கட இங்க ஆறா மாறி கிடக்குது புள்ள.. போதாதுன்னு மதத்த திணிக்கும் மதவாதம் ஏறுது மெல்ல“ என்ற வரிகளை விஜயே பாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய். வழக்கம்போல் ரேம்ப் வாக்.. தவெக நிர்வாகிகளின் பேச்சு.. இறுதியில் மைக்கைப் பிடித்தார் விஜய்.

விஜய்
விஜய்புதிய தலைமுறை

மொத்த மாநாட்டிலும், தமிழ்நாட்டில் கோலோச்சிய முன்னாள் தலைவர்களுக்கு எல்லாம் நானே வாரிசு என்பதுபோல்தான் விஜயின் பெரும்பாலான பேச்சுக்கள் இருந்தது. மதுரையில் கால் வைத்ததும் நினைவுக்கு வந்தது விஜயகாந்த் எனத் தெரிவித்த விஜய் அவரை குறிப்பிடுவதற்கு பயன்படுத்திய ‘என்னுடைய அண்ணன்’ என்ற வார்த்தைகளை அழுத்தியே சொன்னார். மாநாட்டுப் பாடலில், பெரியாரின் பேரன் என்ற வார்த்தை இருந்தது; மாநாட்டுக்கான மேடை முகப்பில் அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆருக்கு நடுவே விஜய் இருப்பது போன்ற புகைப்படங்களும், 'வரலாறு திரும்புகிறது' என்ற வார்த்தைகளும் இருந்தன.

அவர்கள் குறிப்பிடுவது 1967 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததையும், எம்ஜிஆர் தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்ததையும். மேடையில் பேசிய ஆதவ் அர்ஜுனா கூட இதைக் குறிப்பிட்டார். ஆனால், சிக்கல் எங்கு இருக்கிறது?

அண்ணா செய்தது என்ன?

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணாபுதிய தலைமுறை

‘இவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் சில விஷயங்களை தீர்க்க முடியு’ம் என திமுக மக்களை உணரச்செய்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அக்காலக்கட்டத்தில் நிலவிய அரிசிப் பஞ்சத்தைச் சொல்லலாம்… அனைத்து அரசுகளும் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும். ஆனால், திமுகவினர் தங்களுக்கென இருக்கும் கொள்கைத் திட்டங்களை எல்லாம் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தனர். மருத்துமனைகள், சாலைகள் போன்றவை வளர்ச்சித் திட்டங்கள் என்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது, சுயமரியாதை திருமணத்திற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் போன்றவை கொள்கை சார்ந்த திட்டங்கள். திமுக வந்தால் மட்டும்தான், அண்ணா ஆட்சி அமைத்தால் மட்டும்தான் இவை நிறைவேறும் என ஒவ்வொருவரையும் நினைக்க வைத்ததும், மிகப்பெரிய கூட்டணி அமைத்ததுமே 1967ல் அண்ணாவின் வெற்றியை, திமுகவின் வெற்றியை சாத்தியப்படுத்தியது. அதோடு அண்ணாவின் தளபதிகளாக ஏகப்பட்டோர் இருந்தனர். ஒருநாள் விடாமல் பிரச்சார கூட்டங்களை நடத்தினார்கள், தொடர் போராட்டங்களை நடத்தினார்கள்.. மிக முக்கியமாக தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் இருந்தார்கள்.

விஜய், எம்ஜிஆர்
விஜய், எம்ஜிஆர்pt web

எம்ஜிஆரை எடுத்துக்கொண்டால்... 1977ல் எம்ஜிஆர் ஆட்சி அமைத்ததற்கு முன் அவரது அரசியல் செயல்பாடுகள் எப்படி இருந்தது..? அவரோடு இருந்த தலைவர்கள் யார்? எது அவரை ஆட்சியில் அமர்த்தியது என்பதையெல்லாம் தமிழ்நாடே அறியும். ஆனால், இவற்றையெல்லாம் குறிப்பிட்டு பேசினால், “அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும்தான் இருக்கிறார் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள்” என்று கிண்டல் செய்கிறார். அரசியல் ஆய்வாளர்கள் என்பதை சினிமா பாணியில் அழுத்திச் சொல்கிறார்.

வரலாற்றில் இருமுறை

விஜயால் ஆட்சியே அமைக்க முடியாது என்றெல்லாம் சொல்லவில்லை. சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் 80 ஆண்டுகால வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே மூன்றாவதாக தன்னை முன்னிறுத்திய கட்சி ஆட்சி அமைத்திருக்கிறது. ஒன்று திமுக, அடுத்தது அதிமுக.. காங்கிரஸ் எதிர் இடதுசாரிகள் என்று இருந்ததை திமுக தகர்த்து காங்கிரஸ் எதிர் திமுக என நிலைநிறுத்தியது. பின், காங்கிரஸ் எதிர் திமுக என்று இருந்ததை திமுக எதிர் அதிமுக என்று ஆனது. அந்த வரிசையில், மூன்றாவதாக தவெக ஆட்சி அமைக்கலாம். ஆனால், ஆட்சி அமைப்பதற்கான வலுவான விஷயம் தவெகவிடம் இருக்கிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

madurai tvk conference vijay speech on against bjp
விஜய்புதிய தலைமுறை

யார் ஒருவர் கட்சி ஆரம்பித்தாலும் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். அவற்றையெல்லாம் தாண்டி ஒன்று இருக்கிறது.. அந்த ஒரு குறிப்பிட்ட கட்சியால் எத்தனை பேர் அரசியல்மயப்படுத்தப்படுகிறார்கள் என்பது.. திமுக காலத்திலும் சரி, அதிமுக காலத்திலும் சரி அது மிகப்பெரிய அளவில் நிகழ்ந்தது. அக்காலக்கட்டத்தைக் குறிப்பிடும் எந்த ஒரு நாவலையோ அல்லது சினிமாக்களையோ எடுத்துக்கொண்டாலும் அது வெளிப்படும். பாமர மக்கள் சாதாரணமாக அரசியல் உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருப்பார்கள். ஏனெனில் மக்களை தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் சந்தித்துக் கொண்டு இருந்தன. இங்குதான் அரசியல் விமர்சகர்கள் முக்கியமான விஷயத்தைக் குறிப்பிடுகின்றனர். “மாற்று நாங்கள்தான் என தங்களை முன்னிறுத்தும் தவெக செய்வது என்ன? கட்சி தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளில் விஜய் ரசிகர்களாக இருந்த எத்தனைபேர் தொண்டர்களாக மாறியிருக்கிறார்கள். மிகவும் குறைவு.. அவர்கள் ரசிகர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.. ஆட்சி அமைப்பதற்கு இதுமட்டும் போதாது அல்லவா?” என்கின்றனர்.

பிரஷாந்த் கிஷோர் செய்வது என்ன?

தவெக தரப்பினருக்கு இது வழக்கமான வார்த்தைகள்தான் எனத் தோன்றலாம். உதாரணத்திற்கு நடப்பு அரசியலையே பார்க்கலாமே... விஜய்க்கு ஆலோசகராக இருக்கும் பிரஷாந்த் கிஷோர் பிகாரில் ஜன் சுராஜ் எனும் கட்சியின் தலைவர். கிட்டத்தட்ட சாதியின் பிடியில் இருக்கும் பிகாரில், அம்மாநில வாக்காளர்களை தொடர்ச்சியாக சந்தித்துக்கொண்டு இருக்கிறார். தற்கால பிகார் அரசியலில் அதிகமாக பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த அரசியல் தலைவர் யார் என்றால் அது கிஷோர்தான். இதைத்தாண்டி, Vyavastha parivarthan (system change) எனும் இயக்கத்தையே முன்னெடுத்திருக்கிறார். தொடர்ச்சியாக மக்களிடையே 'வேலை வாய்ப்புக்காக வாக்களியுங்கள்.. ஜாதிக்கு வாக்களிக்காதீர்கள்' என தனக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். கடந்த ஆண்டு அம்மாநிலத்தில் நடந்த 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அக்கட்சி 10% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கல்வியை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலமே சிஸ்டத்தை மாற்ற முடியும்.. அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அதாவது இந்தியாவில் எந்தக் கட்சியை வேண்டுமானாலும் ஆட்சியில் அமர்த்த முடியும் என்று, மிகப்பெரிய அளவில் ஆஃபீஸ், டேட்டா என எல்லாம் வைத்திருக்கும், 'கிங்மேக்கர்' பிரசாந்த் கிஷோரே வீதிக்கு வந்து மக்களைச் சந்திருக்கிறார். ஆனால், மன்னராட்சியை ஒழிக்க பாடுபட்டுக்கொண்டே, மதுரையில் பாண்டியன் ராஜ்ஜியத்தை கொண்டு வரவிரும்பும் நகைமுரண் விஜயோ சினிமா பாணியில் பஞ்ச் வசனங்களை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார்.

prashant kishor - tvk leader vijay
prashant kishor - tvk leader vijayweb

பிகார் மாநிலத்திலும் ஊழல் இருக்கலாம்.. ஆட்சியாளர்கள் அலட்சியமாகக் கூட இருக்கலாம். ஆனால், ஜன் சுராஜ்க்கும் பிரஷாந்த் கிஷோருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை தாண்டி மக்கள் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்ட விஷயங்கள் மிக முக்கியமான ஆயுதங்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை தவெக அப்படி என்ன பிரச்னைகளை தொடர்ச்சியாக பேசுகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. மாநில அளவிலும் சரி தேசிய அளவிலும் சரி பிரச்சனைகளுக்கா பஞ்சம். கவின் ஆணவப் படுகொலை, தூய்மை பணியாளர்கள் பிரச்சனை, தேசிய அளவில் ராகுல் காந்தி வைத்த வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் இப்படி ஏராளம் இருக்கின்றன. ஒரு கட்சியின் தலைவராக விஜய் எதை கையில் எடுக்கிறார் என்பது மிக முக்கியமான ஒன்றல்லவா . தவெக மாநாட்டை மிகச்சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்.. ஓவர் ஹைப்புடன் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றுவரும் ஒரு சுமாருக்கும் கீழான திரைப்படம்.

எப்படிப் புரிந்துகொள்வது?

விஜயின் பேச்சு குறித்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கருத்துகளை புதிய தலைமுறைக்கு தெரிவித்தனர். புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ் விஜய் குறித்துப் பேசுகையில், “விஜயின் பேச்சை பல்வேறு விதமாகப் பகுத்துக் கூறலாம். முதலில் தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசினார். அதாவது அவர் அடிக்கடி களத்திற்கு வரவில்லை எனும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இருந்தது. சினிமாக்காரர்கள் அரசியலுக்கு உகந்தவர்களா? அவர்களால் அரசியலில் என்ன செய்யமுடியும் என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார்.

ஒருபக்கம் திமுக எதிர்ப்பு மறுபுறம் பாஜக எதிர்ப்பு என்பதை நிலைநாட்டும் வகையில் மிக உறுதியாக பேச ஆரம்பித்திருக்கிறார். இது திமுக பாஜக எதிர்ப்பில் இருப்பவர்களை ஒருங்கிணைப்பதற்கு இது உதவும்.

சமஸ்
சமஸ்PT

மூன்றாவது வியூக மாற்றம். அதுதான் இந்த மாநாட்டின் மிக முக்கியமான அம்சம். கடந்த மாநாட்டில் கொள்கைத் தலைவர்கள் என்று ஐந்துபேரை சொன்னார், அந்த வரிசையில் எம்ஜிஆருக்கும் அண்ணாவுக்கும் இடமில்லை. ஆனால், இந்த முறை கொள்கைத் தலைவர்களின் இடம் சிறிதாகிவிட்டது. ஆனால், மாநாட்டு முகப்பில், மையத்தில் ஒருபுறம் எம்ஜிஆரும், மறுபுறம் அண்ணாவும் இருக்கையில் நடுவில் விஜய் இருக்கிறார். இது அவர்களது நிலைப்பாட்டை துல்லியமாக மாற்றியிருக்கிறது. நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் கொள்கை சார்ந்து மிகப்பெரிய தலைவர் என்றால் அது அண்ணா. வசீகரமிக்க தலைவர் என்றால் அது எம்ஜிஆர். இந்த இரண்டு பேரையும் எடுத்துக்கொள்வதன் மூலம் இரண்டு இயக்கங்களையும் மறைமுகமாகக் குறிவைக்கிறார் என்று சொல்லலாம். ஒருபுறம் இரு கட்சிகளையும் விமர்சித்துக்கொண்டே மறுபுறம் அந்த தலைவர்களை தனக்கானவர்களாக வரித்துக்கொள்வது” எனத் தெரிவித்தார்.

விஜயை மட்டும் மையப்படுத்திய மாநாடு

மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தவெக மாநாடு குறித்துப் பேசுகையில், ”தவெகவின் இரண்டாம் மாநில மாநாடு விஜயின் பேச்சை மட்டுமே மையப்படுத்திய மாநாடாக முடிந்ததுதான் அர்த்தமில்லாத மாநாடாக ஆக்கியிருக்கிறது. மாநாடு என்பது செயல்திட்டம் ஒன்றைக் கொடுத்துவிட்டு அதன்மூலம் கட்சியின் பல்வேறு அமைப்புகளையும் ஊக்குவிப்பார்கள். தீர்மானங்களைக் கூறி அதன் முக்கியத்துவத்தையும் விளக்குவார்கள். ஆனால், இந்த மாநாட்டில் தீர்மானங்களை எல்லாம் நாங்கள் பின்னர் வெளியிடுவோம் என முடித்துவிட்டார்கள். விஜய் தன் பேச்சின் மூலம் மக்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளப்பார்க்கிறார். ஆனால், நிலைநிறுத்திக் கொள்ளுமளவுக்கு அந்தப் பேச்சில் எதுவுமில்லை.

பத்திரிக்கையாளர் அய்யநாதன், தவெக தலைவர் விஜய்
பத்திரிக்கையாளர் அய்யநாதன், தவெக தலைவர் விஜய்pt web

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மக்களது சிந்தனைகளில் ஏற்றம் வருகிறது என்பதை தலைவராக இருப்பவர் உணரவேண்டும். தமிழ்நாட்டு அரசியல் குறித்த உங்களது புரிதல் என்ன? தமிழ்நாட்டு மக்களது மிகப்பெரிய பிரச்னை என்ன? உங்களது கட்சி அதை தீர்த்து வைக்கும் என்பதற்கான கொள்கை என்ன? . இந்த மூன்றும்தான் முக்கியமானது. முதல் மாநாட்டில் இதுதொடர்பான பிரச்னை இல்லையென்றாலும், இந்த மாநாட்டில் அதுகுறித்து விரிவாக விளக்கியிருக்க வேண்டும். தனது பேச்சின் மூலம் மக்களது சிந்தனைகளை கிளர்ந்தெழச் செய்ய வேண்டும்.

சாதாரணமாக 1000 ரூபாய் கொடுத்தால் போதுமா என்று கேட்கிறீர்கள்.. ஆனால், அந்த பெண்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள்.. 1000ரூபாய் எவ்வளவு முக்கியத்துவமானது என்று. விடியல் பயணம் குறித்துக் கேட்டுப்பாருங்கள். நமக்கும், நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் சம்பாதிப்பவர்களுக்கு வேண்டுமானால் சாதரணமாக இருக்கலாம். ஆனால், கூலி வேலை செய்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவை எல்லாம் எவ்வளவு முக்கியத்துவமானது என்று.

உங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தாதீர்கள். நீங்கள் நினைத்த தீர்மானங்களை எல்லாம் காலையில் இருந்து ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களை எல்லாம் பேச விட்டு இருந்தீர்கள் என்றால் ஊடகங்களிடம் 10 விவாதங்களை உண்டாக்கியிருக்கும். ஆனால், எதுவுமேயில்லாமல் நீங்கள் வரும்வரை காத்திருக்க வேண்டும். மக்களுடைய சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தாத மாநாடோ, பொதுக்கூட்டமோ எதுவாக இருந்தாலும் அதனால் பலனே இல்லை” என்றார்.

ஒவ்வொரு வீதிக்கும் செல்லுங்கள்

புதிய தலைமுறையிடம் பேசிய ராசி அழகப்பன், “ஒரு கட்சியின் மாநில மாநாடு என்பது அடுத்த ஓர் ஆண்டுக்கான அரசியல் பயணத்தின் முகாந்திரமாக இருக்கும். ஆனால், விஜயின் பேச்சு அவரை விமர்சிப்பவர்களுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில்தான் இருந்தது. எனவே, இந்த மாநாடு என்பது தன்னிலை விளக்கம்தான். விஜய்க்கு முன்னால் மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது. ஆனால், அந்த கூட்டத்திடம், நான் எதற்கு வந்திருக்கிறேன் என்று சொல்வதற்கான உறுதிமொழிகள் விஜயிடம் இல்லை.

எம்ஜிஆரை விஜய் மட்டும் தொட்டுப்பேசவில்லை. விஜயகாந்த் தொட்டுச் சென்றார். அவரை கருப்பு எம்ஜிஆர் என்றார்கள். வைகோவும் எம்ஜிஆரை தொட்டுச் சென்றவர்தான். எம்ஜிஆர் என்பது எல்லோரும் தொட்டு தொட்டுச் செல்லும் இடம்தான். எம்ஜிஆர் வீதிகளில் நடந்து சென்று மக்களோடு மக்களாக இருந்தார். வரலாறு திரும்ப வேண்டுமென்றால் இன்றிலிருந்து ஒவ்வொரு வீதிக்கும் செல்லுங்கள்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக செய்த சாதனைகளுக்கு நீண்ட பயணம் இருக்கிறது. கல்வியே கற்க முடியாமல் ஆடு மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர்களை அழைத்துவந்து கல்வி கொடுத்து, இன்று அதிகாரம் உள்ள இடங்களில் எல்லாம் உட்கார வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே பெரும் பயணம் இருக்கிறது. இந்தப் பயணத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்திருக்கிறது. ஆனால், மிகப்பெரிய சக்தி நான்தான் என்று சொல்வதற்கு உங்களுக்கு மிகப்பெரிய அடித்தளம் வேண்டும். மிகப்பெரிய நுட்ப அறிவு வேண்டும். மிகப்பெரிய நம்பிக்கையை நீங்கள் மக்களிடத்தில் பெற்றிருக்க வேண்டும” எனத் தெரிவித்தார்.

எது எப்படியிருந்தாலும் கொள்கை, மக்கள், மக்களுக்கான போராட்டங்கள் இவைகள் இன்றி ஆட்சி அமைப்பது மட்டும் சாத்தியமில்லை என்பது மட்டும் நிஜம்.

1967ல் ஆட்சி மாற்றத்தால் புரட்சி ஏற்பட்டது போல என பேசிக்கொண்டே காமராஜரைத் தோற்கடித்தது ஒரு அரசியல்வாதிதானே என்கிறார் விஜய். அண்ணாவைப் போல், எம்ஜிஆரைப் போல் ஆட்சி அமைப்பேன் என விஜய் சொல்வது அண்ணாவையும், எம்ஜிஆரையும் மட்டும் சிறுமைப்படுத்தும் செயல் அல்ல, தமிழக மக்களின் அறிவுக்கூர்மையையும், வாக்கு அளிக்கும் திறனையும் மலினப்படுத்தும் செயல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com