‘ஏற்பது இகழ்ச்சி’ என்ற ஔவையார், “கற்கை நன்றே, கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே” எனக் கல்வியின் பெருமையை வலியுறுத்தினார். அதுபோல், திருவள்ளுவர்
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை”
என்று கல்வியை உயர்ந்த செல்வமாகப் புகழ்ந்துள்ளார்.
தமிழ் இலக்கியம் முழுவதும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நிறைய பாடல்களும் வலியுறுத்தல்களும் காணப்படுகின்றன. இலக்கியத்தில் மட்டுமல்லாமல், வரலாற்று கல்வெட்டுகளிலும் கோயில்கள் கல்வி நிலையங்களாக செயல்பட்டதாக உள்ளடக்கங்கள் உள்ளன.
உதாரணத்திற்கு,
திருமுக்கூடல் (வெங்கடேச வருமாள்) கோயில் – காஞ்சிபுரம்
பார்த்தசாரதி சுவாமி கோயில் – பார்வதிபுரம்
திருவொற்றியூர் தியாகராஜர் கோயில்
திருபுவனையி செட்டங்கி கோரும் கோயில் – புதுச்சேரி
என எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.. இவையெல்லாம் இங்கு எதற்கென்று கேட்டீர்கள் என்றால், அரசியல் களத்தில் புதிதாக உருவாகியிருக்கும் வார்த்தை மற்றும் கருத்து மோதலுக்குத்தான். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவையில் பேசிய சில வார்த்தைகள்தான் களத்தில் புயலை உருவாக்கியிருக்கின்றன.
“அதிமுக ஆட்சியில் கோவையில் 5 புதிய அரசு கலைக் கல்லூரிகள் கட்டப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, கால்நடைப் பூங்கா, பொறியியல், பி.எட். கல்லூரி என பல கல்லூரிகளைத் திறந்ததால் உயர் கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் என்ன கட்டியிருக்காங்க..,
கோயிலை கண்டாலே திமுகவுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த மக்கள் எதற்காக கோயில் உண்டியலில் பணத்தை போடுகிறார்கள், கோவிலை மேம்படுத்ததானே, ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப் பயன்படுத்துகிறார்கள். ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியதுதானே. அதிமுக ஆட்சியில் அப்படித்தானே செய்தோம், இதை மக்கள் ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறார்கள்” என விமர்சித்துப் பேசியிருந்தார்..,
எடப்பாடி பழனிசாமி இத்தகைய வார்த்தைகளை உபயோகித்து இரண்டு முழுதினங்கள் ஆகப்போகிறது என்றாலும், அரசியல் களத்தில் இன்னும் கொதிநிலை அடங்கியபாடு இல்லை.
இந்த விவகாரத்தில் பதிலளித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பாஜகவிற்கு டப்பிங் குரல் கொடுத்தவர் உண்மையான குரலாக பேச தொடங்கிவிட்டார். அறநிலையத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்க இடமுள்ளது. கல்லூரிக்கான கூடுதல் கட்டடங்களை எடப்பாடியே பழனிசாமியே திறந்துவைத்தார். கொடுத்த காசுக்கு மேல கூவுகிறார் என பாஜகவினரே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்” என கிண்டல் கலந்து விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுதொடர்பாகப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “எடப்பாடி பழனிசாமி பழனியாண்டவர் கல்லூரியில் துணை கட்டடங்களை திறந்துவைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு நான்கு இடங்களில், இதுபோன்ற பணிகளை திறந்துவைத்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் கல்லூரிகளை திறந்து வைத்துள்ளார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச்செயல் என சொல்ல வருகிறாரா?. பாஜக விழுங்கும் சங்கி கூட்டமாக அதிமுக மாறி வருகிறது; 2026க்கு பிறகு தேடும் நிலை ஏற்படும்” என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று இபிஎஸ் தான் பேசிய கருத்துக்கு விளக்கமளித்திருக்கிறார்.. அவர் கூறுகையில், “ஒரே நேரத்தில் 9 கல்லூரிகளை அமைக்க வெளியிட்ட அறிவிப்பை வரவேற்றேன். அறநிலையத் துறை நிதி மூலம் அமைத்தால் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது. கல்லூரி தொடங்குவது அவசியம்; அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நான் பேசியதற்கு கண், காது, மூக்கு வைத்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். அறநிலையத் துறை நிதியை கொடுத்தால் நான் கோபப்படுவதாக ஸ்டாலின் கூறுகிறார். அறநிலையத் துறை நிதியை பயன்படுத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அவர் ‘இந்தக் கல்லூரிகளைத் தொடங்குவது யார்?’ என்ற ரீதியில் கேள்விகளைக் கேட்கவில்லை. அவர், இத்தகைய கல்லூரிகளைத் தொடங்கப்படுவதையே கேள்விக்கு உட்படுத்துகிறார்.
மூன்று நாட்கள் ஆகியும் இந்த விவகாரம் ஓயாத நிலையில், நாமும் விளக்கங்களைக் கேட்டு பலரைத் தொடர்பு கொண்டோம்.. எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்தார் என்பதைத் தாண்டி, “கோவில் உண்டியலில் போடும் பணம் கோவிலை மேம்படுத்தத்தானே... கோவிலுக்கு வரும் பணத்தினை கல்லூரி கட்டப் பயன்படுத்துகிறார்கள்” எனும் வார்த்தைகளும் ‘சதிச்செயல்’ என்று அவர் குறிப்பிட்ட வார்த்தையும்தான் தீவிரமான விமர்சனத்தைத் தூண்டி விட்டிருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகப் பேசிய திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, “உலகம் முழுவதிலும் ஆலயம் தொடர்புடைய நிதியில் இருந்து கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். அதில், லாப நோக்கமற்ற நிறுவனங்களும் இருக்கிறது; லாப நோக்கமுடைய நிறுவனங்களும் இருக்கிறது. சங்கர மடத்தில் ஆரம்பித்து தற்போது சக்தி பீடங்கள் வரை பல்வேறு மடங்களும் கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள். சைவ ஆதினங்களும் மதம் சார்ந்த பள்ளிகளை நடத்தியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கூட இதுவரைக்கும் இதை எதிர்த்ததில்லை. முதல்முறையாக இத்தகைய குரலை எழுப்புவது எடப்பாடி பழனிசாமி
தற்போது எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டில் மிக முக்கியமான அம்சம், அவர் ‘இந்தக் கல்லூரிகளைத் தொடங்குவது யார்?’ என்ற ரீதியில் கேள்விகளைக் கேட்கவில்லை. அவர், இத்தகைய கல்லூரிகளைத் தொடங்கப்படுவதையே கேள்விக்கு உட்படுத்துகிறார். இன்னும் சொல்லப்போனால், அவரது கேள்வி தமிழ்நாட்டில் 60 70 ஆண்டுகால அரசியலுக்கும், அந்த பயணத்திற்குமே எதிரானது. மிக முக்கியமாக, தமிழ்நாட்டில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கூட இதுவரைக்கும் இதை எதிர்த்ததில்லை. முதல்முறையாக இத்தகைய குரலை எழுப்புவது எடப்பாடி பழனிசாமி” என்றார்..
இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து மத வளர்ப்புக்கான துறை அல்ல.
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய தியாகு, “இபிஎஸ் பேசுவது அநியாயம். ஆர் எஸ் எஸ்க்கு தனது விசுவாசத்தை காடுவதற்காகப் பேசுகிறார். கோவில் சொத்துகளை கல்விக்காக செலவு செய்யக்கூடாதா? இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அறநிலையத் துறையின் நோக்கமே, இதுபோன்ற சொத்துக்கள் பொது நலனுக்கு பயன்பட வேண்டுமென்பதுதான். இல்லையென்றால் அதற்கு ஏன் ட்ரஸ்ட் எனப் பெயரிடுகிறார்கள். அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை எப்படி செயல்பட்டது? அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்துசமய அறநிலையத்துறை கல்விக்கு செலவு செய்யவில்லையா?
இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து மத வளர்ப்புக்கான துறை அல்ல. சிவராத்திரி விழா கொண்டாடுவது, முத்தமிழ் முருகன் விழா கொண்டாடுவது என இந்த விஷயத்தில் சேகர்பாபு செய்வது தவறுதான். அறநிலையத்துறை சார்பில் இந்து சமயம் சார்ந்த பணிகள் இரண்டு வகை.. ஒன்று கடவுள் மற்றும் மதம் சம்பந்தப்பட்டது. இரண்டாவது லௌகீகம் சம்பந்தப்பட்டது. இந்த லௌகீக விஷயங்களில் ஒன்றுதான் கல்வி. பள்ளி கல்லூரிகளை நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிற்கு தனது விசுவாசத்தைக் காட்டுகிறார்” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், “இபிஎஸ் உட்பட அதிமுகவினர் பேசுவதெல்லாம் பார்க்கும்போது அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்பதுதான் தெரிகிறது. அவர்களுக்குப் புரியும் வகையிலேயே ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். 1996ல்தான் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன் காஞ்சி சங்கரமடத்திற்கு செல்கிறார். அப்போது ஜெயலலிதாவிடம் பேசிய சங்கராச்சாரியார், ‘நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறையைக் கலைத்துவிட்டு கோவில்களை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டுமெனச் சொல்கிறார். தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அப்போது சட்டத்துறையைப் பார்த்து அவர் கேட்ட கேள்வி, ஏன் இந்து சமய அறநிலையத்துறையை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்பது? அதற்கு சட்டத்துறையினர் இந்து சமய அறநிலையத்துறை வந்தது ஏன்? என்பது குறித்து விளக்குகின்றனர்.
கோவிலின் வசம் இருந்த சொத்துகள் தனியாருக்குத்தான் உதவியதே தவிர கோவிலின் வளர்ச்சிக்கு அது உதவவில்லை. எனவே, கோவில்களின் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றுத்தான் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்டமே வந்தது என எடுத்துச் சொல்கிறார்கள். இதனையடுத்து ஜெயலலிதா அதைக் கைவிட்டுவிட்டார். சங்கரமடத்தில் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட முதல் முரண் அதுதான். இந்த வரலாறுகள் எல்லாம் தெரியாமலேயே அதிமுகவில் ஒரு எம்.எல்.ஏவாகவும், ஒரு அமைச்சராகவும், முன்னாள் முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கோவிலின் வருவாயை எடுத்து பள்ளிக்கூடம், கல்லூரிகளைக் கட்டாமல் வேறு எதைக் கட்டுவது. கோவிலின் வருவாயை எடுத்து அரசு செலவு செய்கிறது என்றால், அக்கோவிலின் பூஜைகள், ஆண்டு நிகழ்வுகள், கும்பாபிஷேகம் நடக்காமல் இருந்தால் கேள்விகள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால், கோவிலில் எல்லாமே நடக்கிறது. அப்போது, அந்த வருவாயை எடுத்து பள்ளிக்கூடமோ, கல்லூரியோ கட்டப்படுகிறது. மிகமுக்கியமாக கோவில்களின் சொத்துகளைப் பாதுகாத்ததினால்தான் இவற்றையெல்லாம் செய்ய முடிந்தது. அந்த சொத்துகளைப் பாதுகாக்க ஆரம்பித்தது நீதிக்கட்சி. அதன்பின்னர் காங்கிரஸ்.. பின் வந்த திமுக இன்னும் நன்றாக பாதுகாக்கப்பட்டது. ஆனால், இபிஎஸ் விபரம் ஏதும் தெரியாமலேயே பேசுகிறார். இபிஎஸ்ஸின் குரல் என்பது பாஜக, ஆர்.எஸ்,எஸ் குரல். கோவில் அரசுகளின் பிடியில் இருக்கக்கூடாது என ஆர் எஸ் எஸ், பிஜேபி சொல்கிறது., அதைத்தான் அதிமுகவும் சொல்கிறது” எனத் தெரிவித்தார்.
லாஜிக்கலாக ஒரு கேள்வி, கபாலீஸ்வரர் கோவிலுக்கு மயிலாப்பூரை சார்ந்தவர்கள் மட்டும்தான் நிதியும் காணிக்கையும் அளிக்கிறார்களா?
கோயிலை கண்டாலே திமுகவுக்கு கண்ணு உறுத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசிய வார்த்தைகளை சூர்யா கிருஷ்ணமூர்த்தியிடம் கோடிட்டுக் காட்டினோம்.. அதற்கு பதிலளித்த அவர், “திமுக அரசு வந்தபின், ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறோம். கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோவில்களில் இருந்து தற்போது அது 18 ஆயிரம் கோவில்களாக மாறியிருக்கிறது. வரலாற்றிலேயே முதன்முறையாக ஒருகால பூஜைத்திட்டத்தில் ஈடுபடும் பூசாரிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்குவதை திமுக அரசுதான் நடைமுறைப்படுத்தியது. அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும், 900 குழந்தைகளை தேர்ந்தெடுத்து தலா ஒருவருக்கு 10,000 ரூபாய் வழங்கியதும் இந்த அரசுதான். எனவே, ஆலயம் சார்ந்தும், ஆலயம் சார்ந்த பணியாளர்களின் நலன்களை எல்லாம் பாதுகாத்த பிறகு, எஞ்சியிருக்கும் உபரிப்பணத்தில்தான் கோவில்களின் சார்பாக கல்லூரிகளைக் கட்டுகிறோம். அந்தக் கல்லூரிகளை அரசு நிர்வாகம் செய்யாது. திருக்கோவில் நிர்வாகங்கள்தான் நிர்வகிக்கும். கூடவே, கோவில் நிதியில் இருந்துமட்டுமே கல்லூரிகளை கட்டுகிறார்கள் என்பதும் பொய். உயர்கல்வித்துறையின் சார்பில் மட்டும் இந்த 4 ஆண்டுகளில் 36 கல்லூரிகளை புதிதாகத் திறந்திருக்கிறோம். கூடுதலான கல்லூரிகளை மட்டுமே அறநிலையத்துறையின் சார்பில் கல்லூரிகளை கட்டி வருகிறோம்... இவற்றையெல்லாம் தாண்டி, கோவிலில் இருந்து வரும் நிதியில் மற்ற கல்லூரிகளுக்கு எல்லாம் செலவு செய்வது கிடையாது. இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.. இதெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. லாஜிக்கலாக ஒரு கேள்வி, கபாலீஸ்வரர் கோவிலுக்கு மயிலாப்பூரை சார்ந்தவர்கள் மட்டும்தான் நிதியும் காணிக்கையும் அளிக்கிறார்களா?” எனத் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இபிஎஸ் பேசிய கருத்துகளுக்கான எதிர்வினைகள் அரசியல் களத்தில் இன்னும் ஓய்ந்தபாடுகள் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மற்ற எல்லாவற்றையும் விட கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எப்பாடுபட்டாவது எத்தகைய வறுமையான சூழலில் இருந்தாலும் தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். கல்விதான் தங்களை முன்னேற்றும் என்பதில் தெளிவாக இருப்பதால் தான் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு பல விஷயங்களில் முன்னிலையில் இருக்கிறது. அதனால், இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்தானது தமிழ்நாட்டுச் சூழலில் எதிர்மறையாகவே மாற வாய்ப்புள்ளது. இன்னும் இந்த விவகாரம் என்னென்ன விதத்திலெல்லாம் வளரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..